’பல்லாங்குழியில் வட்டம் பார்த்தேன்’ – யுகபாரதியை பாடல் எழுதவைத்த லிங்குசாமி

சினிமா

’பல்லாங்குழியில் வட்டம் பார்த்தேன்’ பாடல் பிறந்த கதை குறித்து இன்றைய இளம் பாடலாசிரியர் யுகபாரதி சொன்ன விஷயத்தை இங்கு அறிவோம்.

இன்றைய திரைப் பாடலாசிரியர்களில் ஒருவராக, இன்னும் சொல்லப்போனால் இன்றைய திரை யுகத்தின் ‘பாரதி’யாக வலம் வருகிறார், யுக பாரதி. எத்தனையோ பாடல்களை இவர் எழுதியிருந்தாலும், எல்லாப் பாடல்களுக்குமே முக்கியத்துவம் கொடுக்கக்கூடியவர். ஆரம்பத்தில் இவர் திரையில் பாடல் எழுத விருப்பம் காட்டாவிட்டாலும், இவரை வலுக்கட்டாயமாக திரைக்குள் கொண்டுவந்தவர் இயக்குநர் லிங்குசாமி. அதைப்பற்றி நிறைய இடங்களில் சொல்லி பெருமைப்பட்டிருக்கிறார் யுகபாரதி.
இயக்குநர் லிங்குசாமிக்கு கவிதைகள் என்றால் அதிகம் பிரியம். அவரே, நிறைய கவிதைகள் எழுதியுள்ளார். ‘லிங்கூ’ என்கிற அவருடைய கவிதை நூல், லிங்குசாமியை கவிஞராய் உலகுக்கு அடையாளம் காட்டியது. கவிதைகளால் ஈர்க்கப்பட்ட லிங்குசாமியின் கைகளில் யுகபாரதியின் கவிதை நூலும் கிடைக்கவே, அவரை திரையில் பாட்டெழுத வைத்தார்.


1998ஆம் ஆண்டு தமிழக அரசின் விருதுபெற்ற யுகபாரதி எழுதிய, ‘மனப்பத்தாயம்’ என்கிற கவிதை நூலை இயக்குநர் லிங்குசாமியும், அவரது உதவி இயக்குநர் தியாகுவும் படித்துள்ளனர். அதிலுள்ள கவிதைகள் அவர்கள் இருவருக்கும் பிடித்திருந்த காரணத்தால், யுகபாரதியை பாடல் எழுதவைக்கலாமென்று அவரை உதவி இயக்குநரான தியாகு போய்ச் சந்தித்திருக்கிறார்.

“பாடல் எழுத விருப்பமா?”
“நான் இயக்குநர் லிங்குசாமியிடம் உதவி இயக்குநராக இருக்கிறேன். என் பெயர் தியாகு. நீங்கள் சினிமாவுக்குப் பாடல் எழுதுகிறீர்களா? எழுத விருப்பமா?” என்று கேட்டிருக்கிறார். அதற்கு யுகபாரதியோ, “எனக்கு திரையில் பாடல் எழுத விருப்பமில்லை. நான் சினிமாவுக்கு எழுதவேண்டும் என்று நினைத்ததும் இல்லை” எனச் சொல்லியிருக்கிறார். ஆனாலும் தியாகு அவரை விடவில்லை. “இப்போது எழுத நினையுங்கள். வாருங்கள். டைரக்டர் உங்களைக் கூட்டிவரச் சொன்னார்” என்று சொல்லி இயக்குநர் லிங்குசாமியிடம் அழைத்துச் சென்றிருக்கிறார், தியாகு.

அவரும் பார்த்துவிட்டு, “நீங்கள் மெட்டுக்கு எழுதுவீர்களா?” என்று கேட்டிருக்கிறார். ”அதெல்லாம் எனக்குத் தெரியாது சார். மெட்டுக்கெல்லாம் எழுதிப் பழக்கமில்லை” என்று யுகபாரதி சொல்ல, “சரி பரவாயில்லை. பாடல் எழுதுங்கள். பாடலுக்கு மெட்டுப் போடச் சொல்லலாம்” என்று சொல்லிவிட்டு பாடலுக்கானக் காட்சியை விளக்கியிருக்கிறார் லிங்குசாமி.
“வேலைக்காக காதலன் வெளியூர் செல்ல இருக்கும்வேளையில், அவன் காதலியைப் பிரிய நேரிடுகிறது. அப்போது காதலி, ’உன் ஞாபகமாக எனக்கு ஏதேனும் ஒன்றைக் கொடுத்துவிட்டுப் போ’ எனக் கேட்க, அவனோ தன் சட்டைப்பையில் இருந்த ஒரே, ஒரு ரூபாய் நாணயத்தை எடுத்துக் கொடுக்கிறான். அப்போதைக்கு அவனிடம் வேறெதுவும் இல்லை. அதை பத்திரமாய் வைத்திருக்கும் காதலிக்கு, ஒருமுறை அவனது ஞாபகம் வருகிறது. அப்போது இந்த ஒரு ரூபாயை மனதில் வைத்துப் பாடுகிறாள். இதுதான் காட்சி. இந்தக் காட்சிக்கு நீங்கள் ஒரு பாட்டு எழுதுங்கள்” என யுகபாரதியிடம் இயக்குநர் லிங்குசாமி கோரிக்கை வைக்கிறார்.

ஓகே சொன்ன எஸ்.ஏ.ராஜ்குமார்!
அவருக்கு திரையுலகம் புதிது என்பதால், என்ன எழுதுவதென்று தெரியாமல் விழிக்கிறார். என்றாலும், அடுத்த இரண்டு நாள்களில் அவர் ஒரு பாடலை எழுதிக்கொண்டு போய் லிங்குசாமியிடம் காட்டுகிறார். அவருக்கு அது பிடிக்காமல், “வேறு ஏதேனும் பல்லவி எழுத முடிந்தால் எழுதி வாருங்கள்” எனச் சொல்லி அனுப்புகிறார். அதற்கு யுகபாரதி, “அதுதான் நான் சொன்னேனே, சார். எனக்கு சினிமாவுக்கெல்லாம் பாட்டு எழுத வராது என்று! நீங்கள்தான் வற்புறுத்தினீர்கள்” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து சென்றுவிடுகிறார்.

சில நாட்கள் கழிந்த நிலையில், இந்தக் காட்சிக்காகப் பாடல் ஒலிப்பதிவு செய்ய வேண்டியிருந்தது. இதற்காக இந்தப் படத்தின் இசையமைப்பாளர் எஸ்.ஏ.ராஜ்குமாரிடம், யுகபாரதி எழுதிய பாடல் வரிகளைக் காண்பித்து, “இது சரியாக இருக்குமா என்று தெரியவில்லை. நீங்களே பாருங்கள்” என்று காட்ட, அவர் பாடலை வாங்கிப் பார்த்துவிட்டு டியூன் போட்டு பாடிக் காட்டியிருக்கிறார். அது, லிங்குசாமியைத் தவிர, அங்கிருந்த எல்லோருக்கும் பிடித்துவிட்டது.
அத்துடன், “இந்தக் காட்சிக்கு இதைவிட நல்ல பல்லவி எங்கே கிடைக்கும். இவரையே அழைத்து சரணம் எழுதச் செய்யுங்கள். மெட்டுப் போட்டுக் கொள்வோம்” என எஸ்.ஏ.ராஜ்குமார் சொல்ல, அதன்பிறகே அந்தப் பாடல் முழுவதையும் எழுதி முடித்தார், யுகபாரதி.

அவர் எழுதிய ’ஆனந்தம்’ படத்தில் நடிகை சிநேகா ஒரு ரூபாய் நாணயத்தைக் கொண்டு பாடும், ’பல்லாங்குழியில் வட்டம் பார்த்தேன் ஒற்றை நாணயம்’ பாடலே அப்போது பல காதலர்களையும் வளைத்துப்போட்டது. இப்போதும் இதயத்துக்கு இதமான கானமாக காற்றில் கலந்து வருகிறது. யுகபாரதிக்கும் அழுத்தமான அடையாளப் பாட்டாக அமைந்தது.
ஜெ.பிரகாஷ்

+1
0
+1
0
+1
0
+1
3
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *