கார் வியாபாரத்தை விட சினிமா மோசமாகிவிட்டது : ராதாரவி

Published On:

| By Kavi

5இ கிரியேஷன்ஸ் மற்றும் ஜெசாரா மீடியா என்டர்டெய்ன்மென்ட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் புதிய படத்தில் நடிகர் ஆர்.கே.சுரேஷ் கதாநாயகனாக நடிக்கிறார்.

விஜயகாந்த் – சிம்ரன் இணைந்து நடித்த படம் “கண்ணுபடப் போகுதய்யா”, சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பில் இப்படத்தை இயக்கிய பாரதி கணேஷ் இந்த புதிய படத்தை இயக்குகிறார். இந்த படத்தின் அலுவலக தொடக்கவிழா சென்னையில் நேற்று (செப்டம்பர் 11) நடைபெற்றது.

இவ்விழாவில், படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் நடிகர்கள் ராதாரவி, சந்தானபாரதி, சாம்ஸ், டேனியல் ஆனி போப் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

படத்தின் இயக்குநர் பாரதி கணேஷ் பேசுகையில், “சென்னை சிட்டியும் மதுரை நேட்டிவிட்டியும் கலந்த திரைக்கதையம்சத்துடன் இந்த படத்தை இயக்குகிறேன். இந்த கதைக்கு ஆர்.கே.சுரேஷ் தான் பொருத்தமாக இருந்தார்.

இந்தப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க இருக்கிறது. விரைவில் கதாநாயகி மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் உள்ளிட்ட விபரங்கள் அறிவிக்கப்படும்” என்று கூறினார்..

படத்தின் நாயகன் ஆர்கே சுரேஷ் கூறுகையில், “இயக்குநர் பாரதி கணேஷ் சொன்ன மூன்று கதைகளில் இந்த கதை ரொம்ப பிடித்திருந்ததால் முதலில் இதை படமாக்க தீர்மானித்தோம்.

நான் நடித்த ‘விசித்திரன்’ படம் கிட்டத்தட்ட அமேசான் பிரைமில் ஒருகோடி பார்வையாளர்களால் பார்க்கப்பட்டுள்ளது. நான் தயாரித்த ‘மாமனிதன்’ திரைப்படத்தை தியேட்டரில் வெளியிட்டபோது இரண்டரை கோடி ரூபாய் தான் கிடைத்தது.

ஆனால் அதுவே ஆஹா தமிழ் ஓடிடி தளத்தில் வெளியிட்டபோது 64 லட்சம் பேர் பார்த்துள்ளனர். அந்தவகையில் கிட்டத்தட்ட 24 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. ஆஹா தமிழ் ஓடிடி தளத்திலேயே அதிக வசூல் செய்த படம் அதுதான்.

என்னிடம் படம் ரிலீஸ் செய்யச்சொல்லி வருபவர்களிடம் படத்தை பார்த்ததும் நானே சில படங்களை தியேட்டருக்கு வேண்டாம், ஓடிடிக்கு கொடுத்து விடுங்கள் எனச் சொல்லிவிடுகிறேன்.

ஏனென்றால் ஓடிடிக்கு என எடுக்கும் படத்தை தியேட்டருக்கு தூக்கிட்டுப் போகக்கூடாது. படம் எடுக்கும்போதே எதில் திரையிடப் போகிறோம் என்பதை முடிவு செய்துவிட வேண்டும்.

இங்கே எட்டு நடிகர்களுக்கு மட்டும் தான் தியேட்டர்களில் நல்ல புக்கிங் மற்றும் ஓப்பனிங் இருக்கிறது. சமீபத்தில் வெளியான ‘லைகர்’ படத்தை மிகுந்த எதிர்பார்ப்புடன் தான் தமிழகத்தில் ரிலீஸ் செய்தேன்.

ஆனால் அது ஓரளவுக்குத்தான் போனது. ஓடிடி கன்டெண்டா? தியேட்டர் கன்டெண்டா? எனப் பார்த்து ஒரு படத்தை வெளியிட வேண்டும். அதுதான் புத்திசாலித்தனம்” எனக் கூறினார்.

Cinema business has worse than car business Radharavi
ராதாரவி

நடிகர் ராதாரவி பேசுகையில், “இந்த படத்தின் இயக்குநர் பாரதி கணேஷ் உண்மையையும் விசுவாசத்தையும் மறக்காத ஒரு நபர். அவர் இயக்கிய “கண்ணுபடப் போகுதய்யா” படத்தில் நடித்திருந்தேன்.

தான் உருவாக்கும் எல்லா கதைகளிலும் எனக்கென ஒரு பாத்திரம் இருக்கும்படி எப்போதுமே கதையை உருவாக்குவார். நான் அவரிடம் கதை எல்லாம் கேட்கவில்லை. கதை கேட்பது,.. ஃபைல் பார்ப்பது இதெல்லாம் தவறான பழக்கம்.

இந்த படத்தின் மூலமாக நீண்ட நாட்களுக்குப் பிறகு இஸ்லாமிய தயாரிப்பாளர்களின் தயாரிப்பில் நடிக்கிறேன். அதுவே எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. நானும் ஒரு படத்தில் இஸ்லாமியர் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறேன்.

படத் தயாரிப்பில் முன்பெல்லாம் ஒப்பந்தமும் சம்பளமும் வாக்குறுதியும் வாய் வார்த்தையாக இருந்தவரை சினிமா நல்லபடியாக இருந்தது.

எப்போது கார்ப்பரேட் உள்ளே நுழைந்து நூறு பக்கங்களுக்கு மேல் கையெழுத்து வாங்க ஆரம்பித்தார்களோ அப்போதிருந்தே அது கார் வியாபாரத்தை விட மோசமாகி விட்டது” என்று கூறினார்.

இராமானுஜம்

எவனப் பாத்தாலும் தாடியோட திரியுறான்… நல்லாவா இருக்கு? ராதாரவியின் அடுத்த வம்பு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share