நடன இயக்குநர் ஜானியின் தேசிய விருது ரத்து : சதீஷ் கிருஷ்ணனுக்கு வழங்கப்படுமா?

சினிமா

தற்கால கோலிவுட், டோலிவுட் திரையுலகில் வேகமாக வளர்ந்து வரும் நடன இயக்குநராக அறியப்படுபவர் ஜானி. தமிழில் நடிகர் விஜய் நடித்த பீஸ்ட், வாரிசு ஆகிய படங்களில், அரபிக் குத்து, ரஞ்சிதமே, காவாலா உள்ளிட்ட பாடல்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றன.

தொடர்ந்து தனுஷ் நடிப்பில் வெளியான ‘திருச்சிற்றம்பலம்’ படத்தில் இடம்பெற்ற ‘மேகம் கருக்காதா பெண்ணே பெண்ணே…’ என்ற பாடலுக்கு நடனம் அமைத்ததற்காக ஜானிக்கு தேசிய விருது கடந்த ஆகஸ்ட் மாதம் அறிவிக்கப்பட்டது.

இதற்காக பலரும் வாழ்த்து தெரிவித்து வந்த நிலையில் ஜானி மீது, அவரிடம் உதவி நடன இயக்குநராக பணிபுரிந்த 21 வயதான பெண் ஒருவர் ஆந்திராவின் ராய்துர்க்கம் காவல் நிலையத்தில் பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் அளித்தார்.

அதில், கடந்த 2019ஆம் ஆண்டு ஹைதராபாத், சென்னை, மும்பை என படப்பிடிப்புக்கு சென்ற இடங்களில் தன்னை ஜானி பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றஞ்சாட்டியிருந்தார்.

இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த ஆந்திர போலீசார், முதல் முதலாக ஜானி பாலியல் தொல்லை கொடுத்த போது, அப்பெண்ணுக்கு 16 வயது என்பதால் அவர் மீது போக்சோ வழக்கும் பதிவு செய்தனர்.

இதனையடுத்து நடன இயக்குநர்கள் சங்கம், தெலுங்கானா ஃபிலிம் சேம்பர் மற்றும் ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சி ஆகியவற்றில் இருந்து ஜானி அதிரடியாக நீக்கப்பட்டார்.

மேலும் தலைமறைவான அவரை ஹைதராபாத் போலீசார் கடந்த மாதம் கைது செய்து, 14 நாள் நீதிமன்ற காவலில் சஞ்சல்குடா மத்திய சிறையில் அடைத்தனர்.

இதற்கிடையே அக்டோபர் 8ஆம் தேதி டெல்லி ஜனாதிபதி மாளிகையில் நடைபெற உள்ள தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில், கலந்துக்கொள்வதற்காக ஜானிக்கு அக்டோபர் 6ஆம் தேதி முதல் 10ஆம் தேதி வரை இடைக்கால ஜாமீன் வழங்கி ரங்காரெட்டி நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில் நேற்று திடீரென நடன இயக்குநர் ஜானிக்கு அறிவிக்கப்பட்ட தேசிய விருது ரத்து செய்யப்பட்டுள்ளது. இது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியது.

எனினும் தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில், நடன இயக்குநருக்கான விருது வழக்கம் போல் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது ’மேகம் கருக்காதா பெண்ணே பெண்ணே…’ என்ற பாடலுக்கு நடனம் அமைத்ததற்காக ஜானியுடன் சேர்ந்து மற்றொரு பிரபல நடன இயக்குநரான சதீஷ் கிருஷ்ணனுக்கும் தேசிய விருது அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி ஜானிக்கு தற்போது ரத்து செய்யப்பட்ட நிலையில், ஏற்கெனவே அறிவித்தபடி சதீஷ் கிருஷ்ணனுக்கு வரும் 8ஆம் தேதி தேசிய விருது வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

நீலநிற சூரியன் : விமர்சனம்!

கட்சியில் இருந்து திமுக கவுன்சிலர் அதிரடி நீக்கம்!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *