நடிகர் சிரஞ்சீவி ‘பிரம்ம ஆனந்தம்’ என்ற படத்தின் செய்தியாளர் சந்திப்பின் போது நேற்று (பிப்ரவரி 11) பெண் குழந்தைகள் பற்றி கூறிய கருத்துக்கள் சர்ச்சையை கிளப்பியுள்ளது. அவர் பேசியதாவது, “நான் வீட்டில் இருக்கும்போது பேத்திகளுடன் இருப்பதுபோல இருக்காது. பெண்கள் விடுதியில் இருக்கும் வார்டனைப்போல தான் இருக்கும். என்னைச் சுற்றி பெண்கள் மட்டுமே இருப்பார்கள்.
அதனால் ராம் சரணிடம் இந்த முறையாவது ஒரு ஆண் குழந்தையைப் பெற்று தரும்படி கேட்டிருக்கிறேன். நமது பரம்பரையைத் தொடர வழிசெய் என்று கூறியிருக்கிறேன். ஆனால் அவருக்கோ அவர் மகள்தான் எல்லாமே. அதனால் அவர் மீண்டும் பெண் குழந்தையைப் பெற்றெடுப்பாரோ என்று பயமாக இருக்கிறது” என்று பேசியிருந்தார்.
சிரஞ்சீவிக்கு இரண்டு மகள்கள் வழியாக 4 பேத்திகளும் மகன் ராம்சரண் வழியாக ஒரு பேத்தி என மொத்தம் 5 பேத்திகள் உள்ளனர். இந்த பேச்சையடுத்து, நெட்டிசன்கள் சிரஞ்சீவி பெண் குழந்தைகளுக்கு எதிராக பேசியிருப்பதாக அவரை விமர்சித்து வருகின்றனர்.
அதே வேளையில், ஒரு சிலர், ‘பெண்குழந்தைகள் நிறைந்த வீட்டில் ஆண் குழந்தைக்கு ஆசைப்படுவது தவறில்லையே. வீட்டில் ஆண் குழந்தைகள் நிறைந்திருந்தால் பெண் குழந்தைக்கு ஆசைப்படுவது இயல்புதானே. இதில் என்ன ஓரவஞ்சனை இருக்கிறது?’ என்று சிரஞ்சீவிக்கு ஆதரவாக கேள்வி எழுப்பி வருகின்றனர்.