”படவிழாவில் தர்ஷா சொல்லி தான் ஆடை குறித்து பேசினேன்” என்று விளக்க வீடியோவை காமெடி நடிகர் சதீஷ் வெளியிட்டார். இந்நிலையில் நடிகை தர்ஷா குப்தாவுக்கு பாடகி சின்மயி இன்று நள்ளிரவில் (நவம்பர் 11, 1.57 மணி) ஒரு வேண்டுகோள் வைத்துள்ளார்.
சிந்தனை செய் படத்தின் இயக்குநர் ஆர்.யுவன் இயக்கத்தில் ஓ மை கோஸ்ட் என்கிற படம் தயாராகியுள்ளது. இந்த படத்தில் பாலிவுட் நடிகை சன்னி லியோன், தர்ஷா குப்தா, நடிகர் சதீஷ் மற்றும் டிக்டாக் பிரபலம் ஜிபி முத்து ஆகியோர் நடித்துள்ளனர்.
இப்படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த வாரம் சென்னையில் நடைபெற்றது. அப்போது நடிகை சன்னி லியோன் புடவை அணிந்து கலந்து கொண்டார். அதே போல் தமிழ் நடிகை தர்ஷா குப்தா மாடர்ன் உடையில் வந்திருந்தார்.
சர்ச்சையில் சிக்கிய சதீஷ்
இது குறித்து மேடையில் பேசிய நடிகர் சதீஷ், சன்னி லியோன் தமிழ்நாட்டு கலாச்சாரத்தில் வந்திருப்பதாகவும், கோயம்புத்துரைச் சேர்ந்த தர்ஷா குப்தா எப்படி வந்திருக்கிறார் என்பதை பாருங்கள் என்று பேசியிருந்தார்.
சன்னிலியோனின் ஆடையை நடிகை தர்ஷா குப்தா ஆடையுடன் ஒப்பிட்டு சதீஷ் பேசிய அந்த வீடியோ இணையத்தில் வைரலானது.
சின்மயி, நவீன் கண்டனம்!
அதனைதொடர்ந்து பாடகி சின்மயி தனது ட்விட்டர் சதீஷின் பேச்சை குறிப்பிட்டு, ‘ஆண்கள் எப்போது இந்த பழக்கத்தை மாற்றிக்கொள்ள போகிறார்கள்?’ என்று கேள்வி எழுப்பியிருந்தார்.
இதே போல மூடர் கூடம் படத்தின் இயக்குநர் நவீன், ”சன்னி லியோன் திரையில் ஆடையின்றி தோன்றுவதும் கோயம்புத்தூர் பெண் மேடையில் என்ன ஆடை அணிய வேண்டும் என்பதும் அந்த பெண்களின் தனிப்பட்ட உரிமை என்றும் உங்கள் மனைவி என்ன ஆடை அணிய வேண்டும் என்று நீங்கள் முடிவு செய்தாலே அது தவறுதான்” என்று சதீஷுக்கு அறிவுரை கூறியிருந்தார்.
இது போல நெட்டிசன்கள் பலரும் சதீஷின் பேச்சுக்காக அவரை சமூக வலைதளங்களில் வறுத்தெடுத்தனர்.
சதீஷ் விளக்கம்; கடுப்பான தர்ஷா
இந்நிலையில் தான், தனது பேச்சு குறித்து விளக்கமளித்து வீடியோ வெளியிட்டார் நடிகர் சதீஷ். அதில், நடிகை தர்ஷா குப்தா சொல்லி தான் மேடையில் அப்படி பேசியதாக கூறியிருந்தார்.
இதனை கண்டு கடுப்பான தர்ஷா குப்தா அந்த வீடியோவிற்கு கீழ் கோபமாக கருத்து பதிவிட்டுள்ளார். அதில் “நடிகர் சதீஷ் இந்த விஷயத்தை என் பக்கம் திருப்பி விடுகிறார். இது மிகவும் விசித்திரமாக இருக்கிறது. யாராவது என்னைப் பற்றி மேடையில் நீங்க அசிங்கமா பேசுங்கன்னு சொல்லுவாங்களா? எனக்கும் அன்னைக்கு அவ்வளவு கஷ்டமாதான் இருந்துச்சு. ஆனா நான் அதை பெருசா காட்டிக்கல. ஆனால் இப்போ இப்படி சொல்றது சரியானது அல்ல.” என்று கூறியுள்ளார்.
சின்மயி வேண்டுகோள்!
தர்ஷாவின் இந்த கோபமான பதிவுக்கு பாடகி சின்மயி ஆதரவளித்துள்ளார். அவரது பதிவில், ”யாராவது சதீஷை மன்னிக்க வேண்டும் என்றால், அது தர்ஷா தான். பொது மேடைகளில் இதுபோன்ற நகைச்சுவைகளை வீசும் ஆண்கள், மீண்டும் மீண்டும் அவமானப்படுவதை உணர்வதில்லை. என்று நான் நினைக்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.
மேலும் தர்ஷாவுக்கு, “நீங்கள் இதுகுறித்து பேசியதில் மகிழ்ச்சி. தயவு செய்து உங்கள் ட்வீட்டை நீக்க வேண்டாம்.” என்று வேண்டுகோளும் சின்மயி வைத்துள்ளார்.
இதற்கிடையே தர்ஷா ஆடை விவகாரம் குறித்து பேசியது தொடர்பாக சதீஷ் விளமக்களித்த வீடியோ அவரது ட்விட்டர் பக்கத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.
கிறிஸ்டோபர் ஜெமா
சென்னையில் கனமழை: வீட்டிற்குள் முடங்கும் பொதுமக்கள்!
“என்னை வச்சி செஞ்சிட்டாங்க” : உதயநிதி சுவாரஸ்ய பேச்சு!