இயக்குநர் அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்து வெளிவந்த ‘தெறி’ படம் ‘பேபி ஜான்’ என்ற பெயரில் இந்தியில் டப் செய்யப்பட்டுள்ளது.
வருண் தவன், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். வரும் டிசம்பர் 25-ம் தேதி இந்த படம் வெளியாகிறது. இந்தப் படத்தை விளம்பரப்படுத்தும் வகையில், இந்தியின் பிரபல டிவி நிகழ்ச்சியான ‘தி கிரேட் இந்தியன் கபில் ஷோ’ நிகழ்ச்சியில் அட்லீ கலந்து கொண்டார்.
அப்போது நிகழ்ச்சி தொகுப்பாளரான கபில் ஷர்மா,நீங்கள் ஒரு நட்சத்திர நடிகரை முதன்முதலில் சந்திக்கும்போது, அவர்கள் அட்லீ எங்கே என கேட்டிருக்கிறார்களா?என்று அவரின் நிறத்தை கேலி செய்யும் விதத்தில் கேள்வி எழுப்பினார்.
அதற்கு, என்னுடைய முதல் படத்தை ஏ.ஆர். முருகதாஸ் தயாரித்தார். நான் கதை சொன்ன விதம் பிடித்துதான் எனக்கு வாய்ப்பளித்தார் . தோற்றத்தை வைத்து எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்று பதிலளித்தார்.
கபில்சர்மாவின் அட்லீயின் நிறம், உடல் தோற்றம் குறித்த பேச்சுக்கு சமூகவலைத் தளத்தில் கடும் கண்டனம் எழுந்தது. பாடகி சின்மயி தன் ட்விட்டர் பக்கத்தில், நகைச்சுவை என்ற பெயரில் ஒருவரின் தோல் நிறத்தைப் பற்றி பேசுவது சரியா? இந்த மோசமான இனவெறி கேலிகளை ஒருபோதும் நிறுத்தமாட்டீர்களா? கபில் ஷர்மா போன்ற ஒருவர் இப்படி பேசுவது துரதிஷ்டவசமாக ஏமாற்றமளிக்கிறது. ஆனாலும், இப்படி பேசியது குறித்து நான் ஆச்சரியப்படவில்லை ‘என்று கூறியுள்ளார்.
மற்றொரு நெட்டிசன், இது அட்லீ தயாரித்த படம். அந்த படத்தை விளம்பரப்படுத்த நடந்தப்பட்ட நிகழ்ச்சியில் அவரை அவமதிப்பார்களா? வேண்டுமென்றே படத்தை பிரபலப்படுத்த இது போன்று பேசுகிறார்கள். இப்போதெல்லாம், மேடையில் இப்படி சர்ச்சை ஏற்படுத்தினால்தானே படம் பிரபலமாகும் என்று கருத்து வெளியிட்டுள்ளார்.
இன்னொருவர், கபில்சர்மாவின் நகைச்சுவை எப்போதுமே நிற மற்றும் உருவக் கேலி , இனவெறி, பெண்கள் மீதான வெறுப்பு ஆகியவற்றால் நிறைந்தது. இதை வைத்துதான் அவர் கோடிக்கணக்கில் சம்பாதிக்கிறார் என்று கூறியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
-எம்.குமரேசன்
ரஷ்ய அணுஆயுத பிரிவு தலைவர் குண்டு வைத்து கொலை; மாஸ்கோவில் உக்ரைன் நடத்திய உக்கிரம்!
கள்ளச்சாராய மரண வழக்கு : சிபிஐ விசாரிப்பதில் என்ன தவறு? உச்ச நீதிமன்றம் கேள்வி!