சிம்பு தேவன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘போட்’ திரைப்படத்தின் ட்ரெய்லர் நாளை (ஜூலை 26) மாலை 5 மணிக்கு வெளியாகுமென அப்படக்குழுவால் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவில் காமிக்ஸ்களின் பாதிப்பு கொண்ட மிக சில இயக்குநர்களில் ஒருவர் இயக்குநர் சிம்பு தேவன். அந்த பாதிப்பு மிக அதிகமாகத் தெரிந்த அவரது திரைப்படம் ‘ இரும்பு கோட்டை முரட்டு சிங்கம்’. மேலும், ‘அறை எண் முன்னூற்று ஐந்தில் கடவுள்’, ‘புலி’, போன்ற படங்களின் மூலம் ஃபேண்டசி ஜானரையும் தமிழ் சினிமாவில் முயற்சி செய்திருப்பார்.
‘இம்சை அரசன் 23ஆம் புலிகேசி’ என்கிற கோமாளி மன்னனைப் பற்றிய கதையில் நகைச்சுவையைத் தாண்டி சமகால அரசியலை நையாண்டி செய்திருப்பார் சிம்பு தேவன். இந்த நையாண்டித் தனம் ‘இரும்பு கோட்டை முரட்டு சிங்கம்’ திரைப்படத்திலும் நம்மால் காண முடியும்.
இப்படிப்பட்ட வித்தியாச பார்வை கொண்ட இயக்குநரிடமிருந்து வெளியாகும் அடுத்த திரைப்படம் ‘போட்’. சுதந்திரத்திற்கு முந்தைய காலகட்டத்தில் நடக்கும் கதைக்களத்தைக் கொண்ட இந்தப் படம் முழுக்க முழுக்க ஒரு படகிலேயே நடக்கும் கதையாகும். இந்தப் படத்தின் டீசர் ஏற்கனவே வெளியாகி பல்வேறு பாராட்டுகளைப் பெற்று வருகிறது. குறிப்பாக ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் சமீபத்தில் இந்தப் படத்தின் டீசரை பாராட்டியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், தற்போது இந்தப் படத்தின் ட்ரெய்லர் நாளை மாலை 5 மணிக்கு வெளியாகுமென அப்படக்குழுவால் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் திரைப்படத்தில் நடிகர்கள் யோகிபாபு, எம்.எஸ்.பாஸ்கர், ஷாரா, மதுமிதா, சின்னி ஜெயந்த் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். மாலி அண்ட் மன்வி மூவி மேக்கர்ஸ் மற்றும் சிம்பு தேவன் எண்டர்டெய்ன்மெண்ட் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இந்தத் திரைப்படம் வரும் ஆக.2ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
– ஷா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
தீயணைப்புத்துறைக்கு புதிய வாகனங்கள்… சாதனைகளை லிஸ்ட் போட்ட தமிழக அரசு!
சிறைவாசிகள் பயன்பாட்டிற்காக 1 லட்சம் புத்தகங்கள்: தமிழக அரசு