மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய இயக்குநர் பாரதிராஜாவை அவரது இல்லத்திற்கு சென்று நேரில் நலம் விசாரித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
பிரபல இயக்குநர் பாரதிராஜா கடந்த மாதம் 23 ஆம் தேதி உடல் நலக்குறைவால் தி.நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்னர் அஜீரணக் கோளாறு, நீர்ச்சத்து குறைவு மற்றும் நுரையீரலில் சளி உள்ளிட்ட காரணங்களால் பாரதிராஜா பாதிக்கப்பட்டதாக தகவல் வெளியானது.
தொடர்ந்து அவரது உடல்நிலை மோசமடைந்ததையடுத்து மேல்சிகிச்சைக்காக அமைந்தகரையில் உள்ள மற்றொரு தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இசையமைப்பாளர் இளையராஜா, வைரமுத்து, ராதிகா உள்ளிட்டோர் பாரதிராஜாவை நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர். அதோடு அவரது உடல் நிலையில் முன்னேற்றம் இருப்பதாகவும் பிரபலங்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில் பாரதிராஜா குணமடைந்து நேற்று (செப்டம்பர் 9) மாலை மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். அவரை மருத்துவர்கள் ஓய்வெடுக்குமாறு அறிவுறுத்தினர். இதையடுத்து சென்னை நீலாங்கரையில் உள்ள வீட்டிற்கு பாரதிராஜா சென்றார்.
இதையறிந்த தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாரதிராஜாவின் இல்லத்திற்கு நேரில் சென்று உடல் நலம் குறித்து விசாரித்தார். அவருடன் கவிஞர் வைரமுத்து, நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு உள்ளிட்டோரும் சென்றிருந்தனர். பாரதிராஜா உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் இருந்தபோது ஏற்கனவே தொலைபேசி மூலம் முதல்வர் நலம் விசாரித்திருந்தார். இந்தநிலையில் அவர் வீடு திரும்பிய செய்தி கேட்டதும் நேரில் சென்றும் பார்த்திருக்கிறார்.
கலை.ரா