chevvaikizhamai movie review

செவ்வாய்கிழமை – விமர்சனம்

சினிமா

நினைவுக்கு வரும் ‘காந்தாரா’

ஒரு படம் த்ரில்லரா, ஹாரரா என்ற குழப்பத்திற்கு ஆளாவது அலாதியான காட்சியனுபவத்திற்கு வழிவகுக்கும். அதேநேரத்தில், அதற்கான பதிலைச் சரியாகச் சொல்லாவிட்டால் அதே ரசிகர்களின் பெருங்கோபத்திற்கு ஆளாக நேரிடும்.

அந்த வகையில், ‘மங்கலவாரம்’ என்ற தெலுங்கு திரைப்படம் தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்டு ‘செவ்வாய்கிழமை’ என்ற பெயரில் வெளியாகியிருக்கிறது. ஆர்டிஎக்ஸ் 100 படத்தில் தெலுங்கு ரசிகர்களை ஈர்த்த பாயல் ராஜ்புத், அதில் இயக்குனராக அறிமுகமான அஜய் பூபதியுடன் இப்படத்தில் இரண்டாவது முறையாக இணைந்திருக்கிறார்.

சரி, இந்த படம் எப்படிப்பட்ட காட்சியனுபவத்தைத் தருகிறது? இது த்ரில்லரா, ஹாரரா?

செவ்வாய்கிழமை அதிர்ச்சிகள்

ஒரு கிராமம். ஒரு செவ்வாய்கிழமையன்று அங்கு ஒரு ஆணும் பெண்ணும் இறந்து கிடக்கின்றனர். அதற்கு முன்னதாக, அவர்கள் இருவருக்கும் தொடர்பு இருப்பதாக ஒரு சுவரில் கிறுக்கப்பட்டிருக்கிறது. அதனை ஊர் மக்கள் பார்க்கின்றனர்.

அதற்கடுத்த வாரமும் இதேபோல இன்னும் இரண்டு பேர் மரணிக்கின்றனர். அந்த ஊருக்குப் புதிதாக வந்த சப் இன்ஸ்பெக்டர் மாயா (நந்திதா ஸ்வேதா), அந்த பிணங்களைக் கூராய்வு செய்ய வேண்டும் என்கிறார். அந்த ஊர் ஜமீந்தார் வாரிசு (சைதன்யா) அதற்குத் தடையாக இருக்கிறார். அதையும் மீறி, அந்த சடலங்களை மருத்துவமனைக்கு அனுப்புகிறார் மாயா.

அதேநேரத்தில், சில மாதங்களுக்கு முன்னர் இறந்துபோன ஷைலஜாவின் (பாயல் ராஜ்புத்) ஆவிதான் அந்த நபர்களைக் கொன்றதாகவும் ஒரு தகவல் ஊருக்குள் பரவுகிறது. யார் அவர் என்று மாயா விசாரிக்கையில், பல உண்மைகள் வெளிவருகின்றன.

ஆனால், ஊர் மக்கள் சொல்வது ஒன்றாகவும், ஷைலஜாவின் வாழ்வில் நடந்தது வேறொன்றாகவும் இருக்கின்றன. அதனை முழுமையாக மாயா அறியும்போது அந்த ஊரில் நிகழும் கொலைகள் முடிவுக்கு வருகின்றன.

செவ்வாய்கிழமை தோறும் ஊரில் சிலர் இறப்பதாகச் சொல்லப்பட்டாலும், திரைக்கதையில் மொத்தமே மூன்று செவ்வாய்கிழமைகளே காட்டப்படுகின்றன. அதனால், ’அடுத்தடுத்து அதிர்ச்சி’ என்று விளம்பரம் செய்ய வழியில்லை; மற்றபடி ’பிளாஷ்பேக்’ பின்பாதியின் பெரும்பகுதியை ஆக்கிரமிக்கிறது.

இந்த திரைக்கதையின் தொடக்கத்தில் சிறுமி ஷைலஜாவும் ரவி என்ற சிறுவனும் நட்புடன் பழகுவது காட்டப்படுகிறது. அந்தக் காட்சிகளைச் சரியாக உள்வாங்கும்போது, இந்த படம் ஹாரரா அல்லது த்ரில்லரா என்பதை நம்மால் நிச்சயம் யூகிக்க முடியும்.

இயக்குனருக்கு கங்கிராட்ஸ்

நிச்சயமாக, இது இயக்குனரின் படம் தான். நூறு சதவிகிதம் அதில் சந்தேகமில்லை.

ஏனென்றால், இந்த படத்தின் கதை கத்தியின் மீது நடப்பது போன்றது. குறிப்பாக, பாயல் ராஜ்புத்தின் பாத்திரத்தை அவர் வடிவமைத்திருக்கும் விதம் அசாதாரணமானது. சாதாரண ரசிகர்கள் அதனைக் கண்டு முகம் சுளிக்காமல், அருவெருப்படையாமல் இருப்பதில் அதீதக் கவனம் செலுத்தியிருப்பது சிறப்பான விஷயம். அதற்காகவே, இயக்குனர் அஜய் பூபதிக்கு ‘கங்கிராட்ஸ்’ சொல்லியாக வேண்டும்.

இப்படத்தில் ’அஞ்சாதே’ அஜ்மல், ‘அட்டகத்தி’ நந்திதா ஸ்வேதா என்று தமிழ் ரசிகர்களுக்குத் தெரிந்த முகங்கள் இடம்பெற்றிருக்கின்றனர். ‘கேரக்டர் ரோல்’ என்று சொல்லும் அளவிலேயே இவர்கள் திரையில் தோன்றுகின்றனர்.

‘ரௌத்திரம்’ படத்தில் வந்த சைதன்யா இதில் ஜமீந்தாராக வருகிறார். அவரது மனைவியாக வரும் திவ்யா பிள்ளை, டாக்டர் வேடத்தில் நடித்த ரவீந்திரா விஜய் போன்றோரும் கூட தமிழில் சில படங்களில் தலைகாட்டியவர்கள்தான்.

இதில் நாயகியாக பாயல் ராஜ்புத் நடித்துள்ளார். ‘ஆர்டிஎக்ஸ் 100’ படத்திற்குப் பிறகு, இதில் அவருக்குச் சொல்லும்படியான பாத்திரம். அதேநேரத்தில், இப்படியொரு வேடத்தில் இந்தியத் திரைப்பட உலகில் எவரும் நடித்ததில்லை என்று ‘சவால்’விடும் அளவுக்கு அவரது நடிப்பு உள்ளது. அந்த வேடத்தை ‘ஜஸ்டிபை’ செய்திருக்கும் விதமே பாயல் ராஜ்புத்தை இடைவிடாமல் பாராட்டத் தோன்றுகிறது.

நாயகன் என்று கைகாட்டும் அளவுக்கு, இதில் எவருக்கும் முக்கியத்துவம் இல்லை. ஆனால், அந்த இடத்தை இசையமைப்பாளர் அஜனீஷ் லோக்நாத் எடுத்துக் கொண்டிருக்கிறார்.

‘காந்தாரா’ போலவே, இதிலும் புதிரும் அமானுஷ்யமும் பயமும் பரபரப்பும் நிறைந்த சூழல்களைத் தனது பின்னணி இசையால் உயிர்ப்பித்திருக்கிறார். பாடல்கள் ’கேட்கும் ரகம்’ என்ற அளவிலேயே இருக்கின்றன.

இந்த படத்தில், ஒரு மரண வீட்டில் விருந்து நடைபெறுவது போல ஒரு காட்சி உண்டு. அதில் பின்னணி இசை அதகளப்படுத்துகிறது என்றால், இன்னொரு புறம் தாசரதி சிவேந்திராவின் ஒளிப்பதிவு அமர்க்களப்படுத்துகிறது.

ஒரு வேலையை ரசித்துச் செய்யும்போது அலுப்பு தெரியாது என்று சொல்வார்கள். இப்படத்தில் நான்கைந்து இடங்களில் ’மாண்டேஜ்’ காட்சிகள் வருகின்றன. அவற்றுக்காகவும் இன்னபிற காட்சிகளில் வரும் கேமிரா கோணங்கள், ஒளி அமைப்புக்காகவும் தாசரதியை எவ்வளவு வேண்டுமானாலும் பாராட்டலாம்.

ஆங்காங்கே பிளாஷ்பேக் வரும் இத்திரைக்கதையைக் கொஞ்சமும் குழப்பமின்றிச் சொல்ல உதவியிருக்கிறார் படத்தொகுப்பாளர் மாதவ் குமார் குல்லபள்ளி.

ரகு குல்கர்னியின் தயாரிப்பு வடிவமைப்பும், மோகன் தல்லூரியின் கலை வடிவமைப்பும் நம் கண்களைக் கவ்விக் கொள்கின்றன. ஒலி வடிவமைப்பு, ஆடைகள், ஒப்பனை, டிஐ என்று இதில் சிலாகிக்கப் பல்வேறு அம்சங்கள் உண்டு.

‘காந்தாரா’ நினைவுகள்

இயக்குனர் அஜய் பூபதி, இந்தப் படம் ‘காந்தாரா’வை நினைவூட்ட வேண்டுமென்பதில் குறியாக இருந்திருக்கிறார். அதைப் போலவே ‘த்ரில்’ ஊட்டும் பின்னணி இசையை இடம்பெறச் செய்ததோடு, அப்படத்தில் வருவதைப் போன்று ஒரு பாத்திரம் ‘தெய்வமுக’ முகமூடியுடன் வலம் வருமாறும் பார்த்துக் கொண்டிருக்கிறார். அதுவே, முக்கால்வாசி படத்தை நாம் பார்க்க வழி வகுத்துவிடுகிறது. மீதமுள்ள கால்வாசியில் அடுத்தடுத்து சில திருப்பங்களைக் காட்டி, நம்மை இருக்கையோடு கட்டிப்போடுகிறார் இயக்குனர்.

அதேநேரத்தில், காமம் சார்ந்த காட்சிகள் இதில் இடம்பெற்றிருப்பது குழந்தைகளோடு சேர்ந்து குடும்பமாகப் படம் பார்ப்பதற்குத் தடை போடும். அது மட்டுமல்லாமல், இது ‘ஏ’ சான்றிதழ் பெற்றிருக்கிறது.

பாயல் ராஜ்புத் ஏற்ற பாத்திரத்தை இயக்குனர் காட்டியிருக்கும் விதம், இப்படம் நிச்சயம் பத்தோடு பதினொன்றல்ல என்று சொல்லிவிடும்.

தெய்வம், ஆவி சார்ந்து நாம் கொண்டிருக்கும் நம்பிக்கைகளுக்கும், உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசும் குணத்திற்கும் இக்கதை ‘சவுக்கடி’ கொடுத்திருக்கிறது. அதேநேரத்தில், ஒரு இளம்பெண்ணின் அடிவயிற்றில் பட்டாம்பூச்சிகள் பறக்கும் உணர்வையும் அதன் இயல்போடு காட்டியிருக்கிறது. ரசிகர்கள் அதனை ஏற்றுக்கொண்டால், ‘காந்தாரா’ போல இப்படமும் பெருவெற்றியைச் சுவைக்கும். அதற்குத் தேவையான உள்ளடக்கம், இந்த ‘செவ்வாய்கிழமை’யில் செறிந்து நிற்கிறது என்பதை உறுதிபடச் சொல்ல முடியும்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

உதய் பாடகலிங்கம்

நாட்டுக்கோழி வளர்ப்பு வகுப்புகள்: எப்படி கலந்துகொள்வது?

ரூ.200 கோடி ஊழலா?: அண்ணாமலைக்கு பதில் அளித்த அமைச்சர் சிவசங்கர்

+1
2
+1
3
+1
4
+1
28
+1
5
+1
3
+1
4

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *