லியோ வெற்றி விழா: தயாரிப்பு நிறுவனத்திற்கு கடிதம் அனுப்பிய காவல்துறை!
லியோ திரைப்படத்தின் வெற்றிவிழாவிற்கு அனுமதி கோரியதை அடுத்து சென்னை காவல்துறை பல்வேறு கேள்விகளுடன் தயாரிப்பு நிறுவனத்திற்கு இன்று (அக்டோபர் 29) கடிதம் அனுப்பியுள்ளது.
நடிகர் விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த அக்டோபர் 19ஆம் தேதி வெளியான படம் லியோ. இந்தப் படத்தை 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் சார்பில் லலித் குமார் தயாரித்திருக்கிறார்.
த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், மிஷ்கின், கௌதம் மேனன், பிரியா ஆனந்த் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடித்திருக்கிறார்கள்.
கலவையான விமர்சனங்களை பெற்றாலும் தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியாவின் மற்ற மாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் லியோ வசூலில் பட்டையை கிளப்பி வருகிறது.
லியோ திரைப்படம் முதல் வாரத்தில் ரூ.461 கோடி வசூல் செய்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்து இருந்தது.
வெற்றி விழா கொண்டாட முடிவு!
இந்நிலையில், லியோ படத்தின் வெற்றி விழா நிகழ்ச்சியை சென்னை, நேரு உள்விளையாட்டு அரங்கில் நவம்பர் 01 ஆம் தேதி கொண்டாட தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதில் நடிகர் விஜய் பங்கேற்பார் என்றும் கூறப்படுகிறது.
இதனையடுத்து நிகழ்ச்சிக்கு அனுமதி மற்றும் பாதுகாப்பு கோரி காவல்துறையிடம் லியோ படத்தின் தயாரிப்பு நிறுவனம் தரப்பில் கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே லியோ படத்தின் இசை வெளியீட்டு விழா ரத்தானதால் ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றமும் அதிருப்தியும் நிலவியது.
இந்த நிலையில், படத்தின் வெற்றி விழாவை முறையாகவும் பிரமாண்டமாகவும் நடத்த வேண்டும் என்று தயாரிப்பாளர் லலித் குமார் திட்டமிட்டுள்ளார் என கூறப்படுகிறது.
காவல்துறை எழுப்பிய கேள்விகள்!
இந்த நிலையில், சென்னை காவல்துறை பல்வேறு கேள்விகளுடன் தயாரிப்பு நிறுவனத்திற்கு இன்று கடிதம் அனுப்பியுள்ளது.
அதில், வெற்றி விழா எத்தனை மணிக்கு தொடங்கி, எத்தனை மணிக்கு முடிவடையும்.?
எவ்வளவு டிக்கெட்டுகள் விற்கப்பட உள்ளன?
போலீஸ் பாதுகாப்பு தவிர வேறு ஏதாவது தனியார் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதா?
விழாவில் கலந்துகொள்ள இருக்கும் முக்கிய விருந்தினர்கள் யார் யார்? அவர்களின் விவரங்கள் என்ன? என்று கேள்விகள் கேட்கப்பட்டுள்ளது.
மேலும் பார்வையாளர்களின் எண்ணிக்கை 5000 ஐ தாண்டக்கூடாது என்றும், தயாரிப்பு நிறுவனத்தின் கடிதம் பரிசீலனையில் உள்ளதாகவும் காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
கார்த்திக் ராஜா
மாணவர்களுக்காக ரூ.100 கோடி… டிவிஎஸ் நிறுவனத்திற்கு முதல்வர் பாராட்டு!
ஆஸி., & நெதர்லாந்து அபாரம்.. கடைசி இடத்திற்கு தள்ளப்பட்ட ‘இங்கிலாந்து’