சின்னத்திரை நடிகை சித்ரா மரண வழக்கை 6 மாதங்களில் விசாரித்து முடிக்க சென்னை உயர் நீதிமன்றம் இன்று (ஆகஸ்ட் 25) உத்தரவிட்டுள்ளது.
சின்னத்திரை நடிகை சித்ரா 2020 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் திருவள்ளூர் மாவட்டம் நசரத்பேட்டையில் உள்ள விடுதி அறையில் முகத்தில் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டார்.
இந்த சம்பவம் தொடர்பாக சித்ராவின் கணவர் ஹேம்நாத் உள்ளிட்டோர் மீது காவல் துறை வழக்குப் பதிவு செய்தது. இந்த வழக்கின் விசாரணை திருவள்ளூர் மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், வழக்கு விசாரணையை சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றத்திற்கு மாற்ற கோரியும் விசாரணையை விரைந்து முடிக்க உத்தரவிட வேண்டும் என்றும் சித்ராவின் தந்தை காமராஜ் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், “தன் மீதான குற்றப் பத்திரிகையை ரத்து செய்யக் கோரி ஹேம்நாத் தொடர்ந்த மனுவை கடந்த ஆண்டு தள்ளுபடி செய்த உயர் நீதிமன்றம், விசாரணையை விரைந்து முடிக்க உத்தரவிட்டது. ஆனால், விசாரணையில் இதுவரை எந்த முன்னேற்றமும் இல்லை.
மேலும், விசாரணையை இழுத்தடிக்கும் நோக்கில் வேண்டுமென்றே ஹேம்நாத் பல்வேறு மனுக்களை தாக்கல் செய்து வருகிறார். 2021 ஆம் ஆண்டிலிருந்தே வழக்கின் விசாரணை குற்றச்சாட்டுப் பதிவு செய்யும் கட்டத்திலேயே இருந்து வருகிறது.
வயது முதுமை காரணமாக என்னால் வழக்கின் விசாரணைக்காக திருவள்ளூர் சென்று வருவதற்கு சிரமமாக இருக்கிறது. இந்த வழக்கில் சாட்சிகளாக உள்ள நபர்களும் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரத்திலேயே உள்ளனர். எனவே, வழக்கை திருவள்ளூர் நீதிமன்றத்தில் இருந்து சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றத்துக்கு மாற்ற வேண்டும். அவ்வாறு மாற்றப்படும் வழக்கின் விசாரணையை விரைந்து முடிக்கவும் உத்தரவிட வேண்டும்” என்று மனுவில் கோரியிருந்தார்.
இந்த வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கின் விசாரணையை சென்னை அமர்வு நீதிமன்றத்துக்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்க மறுத்துவிட்டார்.
இந்த வழக்கின் விசாரணையை ஆறு மாதங்களில் முடிக்கத் திருவள்ளூர் மகளிர் நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.
மோனிஷா
World Championship: ஒரே வீச்சில் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய நீரஜ்
பெண்களை குறிவைத்து பேசுவதா?: ஹெச்.ராஜாவிற்கு உயர் நீதிமன்றம் கண்டனம்!