இசை படைப்புகளுக்குச் சேவை வரி விதிப்பை எதிர்த்து இசையமைப்பாளர்கள் ஏ.ஆர். ரகுமான், ஜி.வி. பிரகாஷ் தாக்கல் செய்த மனுவை உயர்நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.
திரைத்துறையில் முன்னணி இசையமைப்பாளர்களாக ஏ.ஆர். ரகுமான் மற்றும் ஜி.வி. பிரகாஷ் இருக்கின்றனர். இவர்கள் தங்களது படைப்புகளுக்கு சேவை வரி செலுத்த வேண்டும் என்று ஜிஎஸ்டி ஆணையர் நோட்டீஸ் அனுப்பியிருந்தார்.
அதில், இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் சேவை வரியாகத் தனது படைப்புகளுக்கு, 6 கோடியே 79 லட்ச ரூபாய் சேவை வரி செலுத்த வேண்டும் என, சரக்கு மற்றும் சேவை வரி எனப்படும் ஜி.எஸ்.டி., ஆணையர் கடந்த 2019ஆம் அண்டு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி கடந்த 2020 ஆண்டு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இசை படைப்புகளின் காப்புரிமை, படத் தயாரிப்பாளர்களுக்கு நிரந்தரமாக வழங்கிய பின், அதன் உரிமையாளர்கள் அவர்கள் தான் என்றும், தன்னிடம் வரி வசூலிப்பது சட்டவிரோதம் எனவும் மனுவில் தெரிவித்திருந்தார்.
தன் புகழுக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதாகவும் கூறியிருந்தார்.
இதற்குப் பதில் மனு அளித்த ஜிஎஸ்டி ஆணையர், ”வரி ஏய்ப்பு செய்ததாகக் கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையிலேயே ஏ.ஆர்.ரகுமானுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டதாகவும், அவரது புகழைக் களங்கப்படுத்தும் நோக்கம் ஏதும் இல்லை” என்று குறிப்பிட்டிருந்தார்.
ஜி.எஸ்.டி. துறையிலேயே மேல்முறையீடு செய்து தீர்வை பெறாமல் தொடரப்பட்ட இந்த வழக்கைத் தள்ளுபடி செய்ய வேண்டுமெனவும், கூறப்பட்டிருந்தது. இதேபோல, ஒரு கோடியே 84 லட்சம் ரூபாய் சேவை வரி செலுத்தக் கூறி ஜி.எஸ்.டி ஆணையர் அனுப்பிய நோட்டீசை எதிர்த்து இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமாரும் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு இன்று (பிப்ரவரி 2) நீதிபதி அனிதா சுமந்த் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது ஏ.ஆர். ரகுமான் மற்றும் ஜி.வி. பிரகாஷ் தரப்பில், “எங்களது இசை கோர்வையை தயாரிப்பாளரிடம் வழங்கி விட்டோம். அதனால் இசை படைப்புகளுக்கு நாங்கள் செலுத்த வேண்டிய சேவை வரியைச் செலுத்த வேண்டியது தயாரிப்பாளர்கள் தான்” என்று வாதிடப்பட்டது.
இதற்கு ஜிஎஸ்டி தரப்பில். “இருவரது இசை கோர்வைகளையும் முழுவதுமாக தயாரிப்பாளர்களிடம் வழங்கவில்லை. குறிப்பிட்ட பகுதிகளை அவர்களே வைத்துக் கொண்டு அவுட்சோர்சிங் முறையில் பிரித்து வழங்கியிருக்கிறார்கள்.
அதன் அடிப்படையில் ஜிஎஸ்டி வரி செலுத்த வேண்டியிருக்கிறது” என்று வாதிடப்பட்டது.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, இசை படைப்புகளுக்கான சேவை வரி செலுத்த வேண்டும் என்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஏ.ஆர். ரகுமான் மற்றும் ஜி.வி. பிரகாஷ் தாக்கல் செய்த மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
மேலும், ஏ.ஆர். ரகுமான் வரி விதிப்பை எதிர்த்து ஜிஎஸ்டி மேல்முறையீட்டு அதிகாரியிடம் முறையீடு செய்து நிவாரணம் பெற்று கொள்ளலாம் என அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
ஆனால், ஜி.வி. பிரகாஷை பொறுத்தவரை, அவருக்கு நோட்டீஸ் மட்டும் தான் வழங்கப்பட்டுள்ளது. இதுவரை எந்த இறுதி உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை.
மேலும், அந்த நோட்டீஸுக்கு பதில் விளக்கத்தை சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் வழங்கலாம் என்று ஜி.வி பிரகாஷுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
மோனிஷா
எடப்பாடி பழனிசாமியை பொதுச் செயலாளராக அங்கீகரிக்க முடியாது: தேர்தல் ஆணையம்!
இரட்டை இலை: மோடியை சந்தித்த எடப்பாடி தூதுவர்!