லியோ திரைப்படத்தின் 4 மணி சிறப்பு காட்சிக்கு அனுமதி வழங்க உயர்நீதிமன்றம் இன்று (அக்டோபர் 17) மறுப்பு தெரிவித்துள்ளது.
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள லியோ திரைப்படம் வெளியீட்டிற்கு தயாராக உள்ளது.
வரும் 19 ஆம் தேதி வெளியாக உள்ள லியோ படத்திற்கு சிறப்பு காட்சிக்கு தயாரிப்பு நிறுவனம் தமிழக அரசிடம் அனுமதி கேட்டிருந்தது.
தயாரிப்பு நிறுவனத்தின் கோரிக்கையை ஏற்று அரசு, 19 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை 5 காட்சிகளுக்கு அனுமதி வழங்கியிருந்தது.
காலை 9 மணியில் இருந்து இரவு 1.30 மணிக்குள் அனைத்து காட்சிகளையும் திரையிட்டு முடிக்க வேண்டும், அதிக கட்டணம் வசூலிக்க கூடாது,
திரையரங்கிற்கு வரும் ரசிகர்களுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்று கட்டுப்பாடுகளையும் தமிழக அரசு விதித்திருந்தது.
இந்நிலையில் படத்தின் நேரம் 2.43 மணி நேரம் இருப்பதாலும், படத்திற்கு இடையில் 20 நிமிடம் இடைவெளி மற்றும் இரண்டு காட்சிகளுக்கு இடையே 40 நிமிடம் கட்டாயம் இடைவெளி விட வேண்டும் என்பதால் காலை 9 மணியில் இருந்து இரவு 1.30 மணிக்குள் 5 காட்சிகளை முடிக்க முடியாது.
எனவே அதிகாலை 4 மணி காட்சிக்கு அனுமதி வழங்க வேண்டும் என்று தயாரிப்பு நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது.
இந்த வழக்கு நேற்று உயர்நீதிமன்ற நீதிபதி அனிதா சுமந்த் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி இன்று தீர்ப்பு வழங்கப்படும் என்று தெரிவித்தார்.
இதனையடுத்து இன்று நீதிபதி, “அதிகாலை 4 மணி காட்சிக்கு அனுமதி வழங்க முடியாது. காலை 9 மணிக்குதான் காட்சி திரையிட வேண்டும் என்பது அரசின் விதி என்பதால் அதனை மீற முடியாது.
அக்டோபர் 19 முதல் 24 ஆம் தேதி வரை காலை 7 மணிக்கு காட்சிகளைத் தொடங்க அனுமதி அளிப்பது தொடர்பாக தயாரிப்பு நிறுவனம் மீண்டும் அரசிடம் விண்ணப்பிக்கலாம்.
அரசாணையை எதிர்த்து வழக்குத் தொடராததால், இதில் உத்தரவு ஏதும் பிறப்பிக்க இயலாது. இதற்கு நாளை மதியத்திற்குள் அரசு பதிலளிக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.
தொடர்ந்து 7 மணி காட்சி குறித்து தமிழக அரசின் உள்துறை செயலாளரிடம் மனு அளிக்க முடிவு எடுத்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த மனுவை பரிசீலித்து மாலை 4 மணிக்கு முடிவை அறிவிப்பதாக தமிழ்நாடு அரசும் உறுதி அளித்துள்ளது.
லேட்டஸ்ட் தகவல்படி, இன்று மாலை 4 மணிக்கு தமிழ்நாடு அரசின் அதிகாரிகள், லியோ பட தயாரிப்பாளர் தரப்பினர், தியேட்டர் உரிமையாளர் சங்கத்தினர் ஆகியோர் சிறப்புக் காட்சிகளின் நேரம் பற்றி ஆலோசனை நடத்த இருக்கிறார்கள்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மோனிஷா
விஜய்யின் லியோ: அதிகாலை காட்சியில் அதீத ஆர்வம் ஏன்?
லியோ சிறப்பு காட்சி… நீதிமன்றத்தின் உத்தரவிற்கு கட்டுப்படணும்: அமைச்சர் ரகுபதி