செக் மோசடி: நடிகர் விமலுக்கு நீதிமன்றம் அபராதம்!

Published On:

| By Jegadeesh

செக் மோசடி வழக்கில் இழுத்தடிக்கும் நோக்கில் செயல்படுவதாக நடிகர் விமலுக்கு சென்னை உயர்நீதிமன்றம் ரூபாய். 300 அபராதம் விதித்து இன்று (ஏப்ரல் 18) உத்தரவிட்டுள்ளது.

நடிகர் விமல் நடிப்பில் இயக்குநர் பூபதி பாண்டியன் இயக்கத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘மன்னர் வகையறா’. இந்த படம் எதிர்பார்த்த அளவிற்கு வசூல் செய்யவில்லை.

இந்தப் படத்தை தயாரிக்க நடிகர் விமல் கோபி என்பவரிடமிருந்து ரூ.4.50 கோடி கடனாக பெற்றுள்ளார். படம் வெளியான பின்னரும் அந்தத் தொகையை கோபியிடம் வழங்காத விமல் பின்னர், அதற்கான காசோலையை வழங்கியுள்ளார்.

இந்த காசோலைகள் பணம் இல்லாமல் திரும்பி வந்ததால் சென்னை உயர் நீதிமன்றத்தில் கோபி வழக்கு தொடர்ந்தார்.

இந்த நிலையில் இந்த வழக்கின் சாட்சிகளை விசாரிக்க விமல் தரப்பில் முன்வரவில்லை. இதையடுத்து முதல் சாட்சியை குறுக்கு விசாரணை செய்வதை முடித்து வைத்து வழக்கு விசாரணையை நீதிபதி தாரணி தொடங்கினார்.

அதன் பின்னர் முதல் சாட்சியைக் குறுக்கு விசாரணை செய்ய வேண்டும் என்று விமல் தரப்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இதற்குத் தயாரிப்பாளர் கோபி வழக்கறிஞர் கடும் எதிர்ப்பை தெரிவித்து இருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடிகர் விமல் தரப்பில் வாதம் செய்யப்பட்டது.

இதன்பின்னர் முதல் சாட்சியை குறுக்கு விசாரணை செய்ய வேண்டும் என்று விமல் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு இன்று (ஏப்ரல் 18) விசாரணைக்கு வந்தது.

அப்போது முதல் சாட்சியை குறுக்கு விசாரணை செய்ய வேண்டும் என்ற விமல் மனுவை ஏற்றுக் கொள்வதாகவும், அதே நேரம் வழக்கு இழுத்தடிக்க வேண்டும் என்று நோக்கத்தில் செயல்பட்ட நடிகர் விமலுக்கு வழக்கு செலவு தொகையாக ரூபாய் 300 அபராதம் செலுத்த வேண்டும் என உத்தரவிட்டார்.

மேலும், இந்த விசாரணையை வரும் 25 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

மு.வா.ஜெகதீஸ் குமர்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share