சிவாஜி புரொடக்சன்ஸ் தயாரிப்பில் பி.வாசு இயக்கத்தில் ரஜினி, ஜோதிகா, பிரபு, நயன்தாரா, வடிவேலு, நாசர் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘சந்திரமுகி’. 2005 ஆம் ஆண்டு வெளியான இந்தப்படம் மிகப் பெரும் வரவேற்பை பெற்று வசூலை வாரிக்குவித்தது.
சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகம் குறித்த பேச்சுவார்த்தை அவ்வப்போது நடைபெற்று வந்தது. 2020 ஏப்ரல் 9 ஆம் தேதி, ‘சந்திரமுகி 2’ படம் தயாரிக்கப் போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் நடிகரும், இயக்குநருமான ராகவா லாரன்ஸ்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட முகநூல் பதிவில், “நண்பர்கள் மற்றும் ரசிகர்களே, உங்கள் அனைவருக்கும் ஒரு மகிழ்ச்சியான செய்தியைப் பகிர்கிறேன். எனது அடுத்த படங்களில் ஒன்று என் தலைவரின் படமான ‘சந்திரமுகி 2’. தலைவரின் அனுமதி மற்றும் ஆசியுடன் இந்தப் படத்தில் நடிப்பது என் அதிர்ஷ்டம். பி.வாசு இயக்க, எனது அதிர்ஷ்டக்கார தயாரிப்பாளர் சன் பிக்சர்ஸ் கலாநிதிமாறன் சார் தயாரிக்கவுள்ளார்” என்று தெரிவித்திருந்தார்.
அதன்பின் அப்படம் குறித்து எந்தவிதமான அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை
ஜூன் 14,2022 அன்று மீண்டும் வெளியிடப்பட்ட அறிவிப்பில், “பி.வாசு இயக்கும் சந்திரமுகி இரண்டாம் பாகம் படத்தை, லைகா நிறுவனத்தின் சார்பில் சுபாஸ்கரன் தயாரிக்கிறார். ராகவா லாரன்ஸ் நாயகனாக நடிக்கும் இப்படத்திற்கு கீரவாணி இசையமைக்கிறார். முதல் பாகத்தைப்போல, இந்தப்படத்திலும் நடிகர் வடிவேலு நடிக்கிறார். ஆர்.டி. ராஜசேகர் ஒளிப்பதிவு செய்ய, தோட்டா தரணி கலை இயக்கத்தைக் கவனிக்கிறார்” என்று தெரிவிக்கப்பட்டது.

சந்திரமுகியில் நடித்த நயன்தாரா, ஜோதிகா இருவரும் இப்படத்தில் நடிக்க வாய்ப்பு இல்லாத நிலையில், நாயகியாக நடிக்க நடிகை சாய்பல்லவியிடம் கால்ஷீட் கேட்டிருக்கிறார்கள். இயக்குநர் பி.வாசுவும் சாய்பல்லவியிடம் கதை சொல்லியிருக்கிறார். கதையைக் கேட்ட பின்பு, அதில் பல மாற்றங்களைச் சொன்னாராம் சாய்பல்லவி. மூத்த இயக்குநர், பல வெற்றி படங்களை இயக்கிய தன்னிடம் கதையில் திருத்தங்கள் செய்ய வேண்டும் என்று நடிகை சாய்பல்லவி சொன்னதை கேட்டு அதிருப்தி அடைந்த பி.வாசு, கடைசியில் அவர் சொன்னதைக் கேட்டு கொந்தளித்து விட்டாராம். படத்தின் கிளைமாக்சில் தன்னை தெய்வமாக்கும் வகையில் காட்சிகளை வைக்க வேண்டும் என்பதுதான் சாய்பல்லவி கூறியது. அதனால், படத்தில் அவர் வேண்டாம் வேறு நாயகியை பார்க்கலாம் என்று கூறிவிட்டாராம்
எனவே மீண்டும் கதாநாயகி தேடும் வேலை நடந்து கொண்டிருக்கிறது.
-இராமானுஜம்