செப்டம்பர் 7 அன்று வெளியான தமிழ் குடிமகன் படத்திற்கு தேவையான திரையரங்குகள் கிடைக்கவில்லை. போதுமான திரைகளை ஒதுக்கீடு செய்ய வேண்டுகோள் விடுத்திருந்தார் அப்படத்தில் கதைநாயகனாக நடித்திருந்த இயக்குநர் சேரன்.
அதனை தொடர்ந்து செப்டம்பர் 8 அன்று வெளியான நூடுல்ஸ் படத்தின் தமிழ்நாடு விநியோகஸ்தரும், நடப்பு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க துணை தலைவருமான சுரேஷ் காமாட்சி தனது முகநூல் பக்கத்தில் தற்போதைய நிலவரம் குறித்து தனது வேதனையை தெரிவித்துள்ளார்.
ஸ்டார் படங்கள் அலையில் அடிக்கப்படும் சிறு படங்கள்!
“வருடம் என்றிருந்தது மாதங்களாகிவிட்டது. மாதங்கள் குறுகி வாரங்களாகிவிட்டது. மாதங்களும் குறுகி நாட்களாகிவிட்டன. நான் ஏதோ நாட்காட்டி குறித்துப் பேசவில்லை. திரையரங்கங்களில் நாம் வெளியிடும் சினிமாவின் ஆயுட்காலம் இது.
நூற்றாண்டுகள் வாழும் என நினைப்பது புற்றீசலின் ஒற்றை நாள் வாழ்க்கை முறைக்குத் தள்ளப்பட்டுவிட்டது சிறிய படங்களின் வெளியீடு.
900 திரையரங்குகள் இருந்தும் சிறிய படங்களுக்கான திரைகள் கிடைப்பதில்லை. படம் சுமாராக இருந்தால் பரவாயில்லை. திரையரங்குகள் கிடைக்கவில்லை என்பதை ஏற்றுக் கொள்ளலாம். ஆனாலும் விமர்சன ரீதியாக நல்ல படம் என அனைவரும் உரக்கச் சொல்லியிருக்கும் படங்களுக்கும் இந்நிலைதான். இவ்வளவு அழகாக நேர்த்தியாக ஒரு படம் செய்ய முடியுமா? எனப் பார்த்தவர்கள் ஆச்சர்யப்படும் நூடுல்ஸ் படத்திற்கே கூடுதல் திரையரங்குகள் கிடைக்காதது வருத்தமளிக்கிறது.
காரணம் திரையரங்கு உரிமையாளர்கள் சங்கதலைவர் திருப்பூர் சுப்பிரமணி சொன்னது போல நான்காயிரம் திரைகள் இன்று 900 க்குள் குறைந்ததுதான். திரைகளும் குறைந்துவிட்டது. ஓடும் நாட்களும் குறைந்துவிட்டது.
ஸ்டார் படங்கள் வரும்போது அந்த அலையில் நல்ல சிறு படங்கள் அடித்துப் போவது வாடிக்கையாகிவிட்டது. நல்ல படத்தையும் எடுத்துவிட்டு சரியான திரையரங்கில் வெளியிட்டு மக்களிடம் கொண்டு செல்ல முடியாமல் நிர்க்கதியாக நிற்பதே சிறுபடங்களின் வாடிக்கையாகிவிட்டது.
இதை சரிசெய்யும் கட்டாயத்தில் இருக்கிறோம். வெளியீட்டு முறையை ஒழுங்குபடுத்துவதின் மூலமும்.. சிறு திரைகளின் எண்ணிக்கைகளை அதிகப்படுத்துவதின் மூலமும் இதை சரிசெய்யலாம்.
இந்த வாரம் 7 படங்கள் வெளியீடு. இதில் நான்கு படங்களை அடுத்த வாரத்திற்கு கடத்தியிருந்தால் கூட மற்றவர்களுக்கு தேவையான திரையரங்குகள் கிடைத்திருக்கும். நீங்கள் நகர்த்தியிருக்கலாமே என்றால்.. ஒரு வாரம் நகர்த்தியாயிற்று. மீண்டும் நகர்த்துவது சாத்தியமற்றது.
ஆயிரம் பேர் அமரும் திரையரங்குகள் பல நாட்கள் காத்து வாங்குது. அவற்றை இரண்டாகவோ மூன்றாகவோ மறுசீரமைத்துக் கொண்டால் திரைப் பஞ்சத்தை ஒழித்துவிடலாம். கிட்டத்தட்ட 1800 திரைகள் அதிகரிக்க வாய்ப்பிருக்கிறது. அதற்கு எல் பி ஏ என்ற அனுமதியும் பெற வேண்டும் என்ற சட்டத்தை விலக்கி அரசு உதவ வேண்டும். பொதுப்பணித்துறையிடம் மட்டும் அனுமதி பெற்றால் போதும் என்ற நிலையை அரசு கவனத்தில் கொண்டு ஆவணசெய்ய வேண்டும்.அதன்மூலம் திரையுலகம் மாற்றம் பெற மிகப் பெரிய வாய்ப்புள்ளது.
திரையுலகம் ஒற்றுமையுடன் ஒன்று கூடி இந்நிலை மாற முயற்சி எடுக்க வேண்டும். முதல்வரை அணுகி கோரிக்கை வைக்க வேண்டும். திரையுலகைக் காக்க வேண்டும். பெரிய படங்கள் வெளியாவதும்… பெரு வெற்றி பெறுவதும் வசூல் சாதனை செய்வதும் அவசியமானது… யானை கம்பீரமாக நடக்கும் போது அதன் குட்டியும் அதன் நிழலில் நடந்தாக வேண்டும்.
அரசும் திரைத்துறையும் சிறிய படங்களின் உயிர் காக்க அவசர ரீதியிலான முயற்சிகளை மேற்கொள்ள கேட்டுக் கொள்கிறேன்” என வேண்டுகோள் விடுத்து தன் ஆதங்கத்தை முகநூல் பக்கத்தில் பதிவு செய்திருந்தார்.
சந்திரமுகி 2 தேதி மாற்றம்!
சந்திரமுகி 2 படம் செப்டம்பர் 15 அன்று வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்ததை கணக்கில் கொண்டு விஜய்ஆண்டனி நடித்துள்ள ரத்தம், ஜெயம்ரவி நடித்துள்ள இறைவன் படங்கள் செப்டம்பர் 28 அன்று வெளியிட திட்டமிடப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது சந்திரமுகி 2 செப்டம்பர் 28 அன்று வெளியாகும் என திடீர் என அறிவிக்கப்பட்டு உள்ளது படத்தின் விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்களுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. ஜெயிலர், ஜவான் படங்களை தமிழ்நாட்டில் வெளியிட்டுள்ள ரெட் ஜெயண்ட் மூவீஸ் சந்திரமுகி 2 படத்தை தமிழ்நாட்டில் வெளியிடுகிறது.
தற்போது ஜெயிலர், ஜவான் ஓடிக்கொண்டிருக்கும் திரையரங்குகளில் சந்திரமுகி 2 திரையிட்டுவிடுவார்கள் வேறு புதிய படங்களுக்கு வாய்ப்பு தர மாட்டார்கள் திரையரங்க உரிமையாளர்கள். சுமார் 500 திரையரங்குகளில் சந்திரமுகி 2 படம் திரையிடும் சூழ்நிலையில் ரத்தம், இறைவன் படங்களுக்கு எஞ்சியுள்ள 400 திரைகள்தான் கிடைக்கும். அந்த படங்களின் நட்சத்திர அந்தஸ்து, பட்ஜெட்டுக்கு அது போதுமானதாக இருக்காது என்பதால் ரத்தம், இறைவன் படங்களின் வெளியீட்டு தேதியை மாற்ற வேண்டும் என விநியோகஸ்தர்களும், திரையரங்க உரிமையாளர்களும் கூற தொடங்கியுள்ளனர்.
ரிலீஸ் தேதியை கடைபிடிக்கும் ஒழுக்கம் எங்கே?
இதுகுறித்து ரத்தம் படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரும், நடப்பு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகியுமான தனஞ்செயன் தனது X பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு கவனத்திற்கு உரியதாகவும், பட வெளியீட்டை ஒழுங்குபடுத்த வேண்டும் என்கிற விவாதத்தை தயாரிப்பாளர்கள் மத்தியில் எழுப்பியுள்ளது.
Another pain of Tamil cinema is big budget films from big banners changing their release date just like that, not having slightest of concern about film’s scheduled for the postponed week.
How can audience support 5 new films + other language films in a week on 28th? Where is…
— G Dhananjeyan (@Dhananjayang) September 8, 2023
அவர் தனது X பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது, “தமிழ் சினிமாவின் மற்றுமொரு வேதனை என்னவென்றால், பெரிய கம்பெனிகளில் இருந்து வரும் பெரிய பட்ஜெட் படங்களின் ரிலீஸ் தேதியை அப்படியே மாற்றுவது, தள்ளி வைக்கப்பட்ட வாரத்தில் வெளியாகும் படங்களைப் பற்றி சிறிதும் கவலைப்படாமல் இருக்கிறார்கள். செப்டம்பர் 28ம் தேதி ஐந்து புதிய படங்கள், மற்ற மொழிப் படங்கள் என வெளியாகும்போது ரசிகர்கள் எப்படி ஆதரவு கொடுப்பார்கள். பெரிய படங்களின் ரிலீஸ் தேதியை கடைபிடிக்கும் ஒழுக்கம் எங்கே? ரசிகர்களைப் பெற சவால்களை சந்திக்கும், சிறிய படங்கள் மற்றும் நடுத்தரத் திரைப்படங்கள் இப்படிப்பட்ட மாற்றங்களை செய்வது பரவாயில்லை. ஆனால், பெரிய படங்கள் இப்படி செய்வது, மிகவும் ஏமாற்றமளிக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.
இராமானுஜம்