மும்பை சென்சார் போர்டு அதிகாரிகள் லஞ்சம் கேட்டதாக விஷால் கூறிய புகாரின் பேரில் 3 பேர் மீது சிபிஐ இன்று (அக்டோபர் 5) வழக்குப் பதிவு செய்துள்ளது.
பல ஆண்டுகளுக்கு பிறகு விஷால் நடிப்பில் 100 கோடி ரூபாய் வசூல் செய்த படமாக ‘மார்க் ஆண்டனி’ அமைந்துள்ளது.
ஆதிக் ரவிச்சந்திரனின் விறுவிறுப்பான திரைக்கதையும், எஸ்.ஜே.சூர்யாவின் அட்டகாசமான நடிப்பும் படத்திற்கும் பலம் சேர்த்தன.
இரு வாரங்களை கடந்தும் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு திரையரங்குகளில் வெற்றிகரமாக மார்க் ஆண்டனி திரைப்படம் ஓடிக்கொண்டிருக்கிறது.
இதற்கிடையே படத்தின் நாயகன் விஷால் தனது எக்ஸ் தள பக்கத்தில், மார்க் ஆண்டனி’ படத்தின் இந்தி டப்பிங் பிரதியை தணிக்கை செய்ய சென்சார் போர்டு அதிகாரிகளுக்கு ரூ.6.5 லட்சம் லஞ்சம் கொடுத்ததாக குற்றஞ்சாட்டினார்.
மேலும், தனது புகார் தொடர்பாக பிரதமர் மோடி மற்றும் மகாராஷ்டிரா முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விஷால் கேட்டுக் கொண்டார்.
இந்த பரபரப்பான புகாருக்கு பதிலளித்த மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை, விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தது.
இந்த நிலையில், சென்சார் போர்டு லஞ்சம் பெற்றதாக விஷால் கூறிய புகாரை தொடர்ந்து, சிபிஐ இன்று வழக்குப் பதிவு செய்துள்ளது.
இதுதொடர்பாக சிபிஐ இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ” கடந்த மாதம் இந்தியில் மொழிமாற்றம் செய்யப்பட்ட ஒரு திரைப்படத்திற்கு மும்பையில் உள்ள சிபிஎஃப்சியில் இருந்து தேவையான சென்சார் சான்றிதழைப் பெறுவதற்காக ரூ. 7,00,000 லஞ்சம் பெறுவதற்காக சதித்திட்டம் தீட்டியதாக குற்றம் சாட்டப்பட்டது.
அதன்பேரில், மும்பை மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியத்தின் பொது ஊழியர்கள் மூன்று பேர் மீது மத்திய புலனாய்வு அமைப்பு வழக்கு பதிவு செய்துள்ளது” என்று சிபிஐ தெரிவித்துள்ளது.
கிறிஸ்டோபர் ஜெமா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…