சாதிய பிரச்சனையின் மையக்கதை?: இராவணக் கோட்டம் டிரெய்லர்!
மதயானைக் கூட்டம் திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் விக்ரம் சுகுமாரன். வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான ஆடுகளம் படத்திற்கு வசனம் எழுதியதன் மூலம் பிரபலமானார்.
பாலுமகேந்திராவிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய விக்ரம் சுகுமாரன் 2013ஆம் ஆண்டு மதயானைக் கூட்டம் படம் வெளியாகும் முன்பே விக்ரம் சுகுமாரன் இயக்கத்தில் நடிக்கவும், படத்தை தயாரிக்கவும் நடிகர்களும், தயாரிப்பாளர்களும் ஆர்வம் காட்டினார்கள்.
படம் வெளியான பின்பு என்னுடைய லெவல் வேறாக இருக்கும் அப்போது சம்பளத்தைப் பேசிக் கொள்ளலாம் என அதீத நம்பிக்கையுடன் தேடிவந்த வாய்ப்புக்களைத் தட்டிக்கழித்தார் விக்ரம் சுகுமாரன்.
மதயானை கூட்டம் வணிக ரீதியாக வெற்றி பெறவில்லை, சாதிய ரீதியான படம் என விமர்சிக்கப்பட்டது. அதன் பின் விக்ரம் சுகுமாரனுக்கு புதிய பட வாய்ப்புக்கள் எட்டாக்கனியாகிப் போனது. சாந்தனு பாக்யராஜ் கதாநாயகனாக நடித்துள்ள இராவண கோட்டம் படத்தை 9 ஆண்டுகளுக்குப் பின் இயக்கி உள்ளார் விக்ரம் சுகுமாரன். அந்தப்படத்தின் ட்ரெய்லர் நேற்று(ஏப்ரல் 5) வெளியிடப்பட்டுள்ளது.
ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ள இந்த படத்தில். கயல் ஆனந்தி, பிரபு, சத்யா என்.ஜே உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கண்ணன் ரவி தயாரித்துள்ளார்.
ட்ரெய்லர் எப்படி?
தென்மாவட்டங்களில் பிரபலமான ஒப்பாரி பாடலுடன் படத்தின் ட்ரெய்லர் தொடங்குகிறது. ‘சாவு எங்கள குறிப் பாத்திருக்குறது தெரியாம கபடி விளையாடிட்டு இருந்தோம்’ என்கிற வசனத்துடன் தொடங்கும் காட்சிக்குப் பின்னர் காதல் ஆசுவாசப்படுத்துகிறது.
தொடர்ந்து வரும் ‘இரண்டு சாதிக்குள் நடந்த கலவரம்’ என்ற டயலாக் படம் தென்மாவட்டங்களின் சாதிய பிரச்சினை திரைப்படத்தின் மையக்கதையாக இருக்கும் என்பதை உணர்த்துகிறது.
அடுத்தடுத்து துப்பாக்கிச் சத்தம், சண்டை, ரத்தம் என நீளும் சண்டைக் காட்சிகள் என மொத்த ட்ரெய்லரில் புதுமையாக எதுவும் இல்லை என்பதுடன் தென்மாவட்டங்களில் நிலவும் சாதிய மோதல்களை கபடி விளையாட்டின் மூலம் காட்சிப்படுத்தியிருக்கலாம் என்கிற உணர்வை ஏற்படுத்துகிறது இராவண கோட்டம் ட்ரெய்லர்.
இராமானுஜம்
சித்திரை விழா: சென்னையில் இருந்து கேரளாவுக்கு சிறப்பு ரயில்!
டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!