காஞ்சிபுரம் அருகே அதிவேகமாக பைக்கில் சென்று விபத்தில் சிக்கிய டிடிஎஃப் வாசன் மீது 2 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
’twin thotlers’ என்ற யூடியூப் சேனலில் இருசக்கர வாகனங்களில் அதிவேகமாக செல்லும் வீடியோக்களை பதிவிட்டதன் மூலம் பிரபலமடைந்தவர் டிடிஎஃப் வாசன். இவர் சாலை விதிகளை மீறியும், பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் அதிவேகமாக இரு சக்கர வாகனங்களில் சாகசம் செய்ததாலும் காவல் துறையினர் பல முறை எச்சரித்து அபராதம் விதித்துள்ளனர். சாலை விதிகளை மீறுவதாக அவர் மீது வழக்குப் பதிவுகளும் செய்யப்பட்டுள்ளன.
தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கி வந்த டிடிஎஃப் வாசன் மஞ்சள் வீரன் என்ற திரைப்படத்தில் கதாநாயகனாகவும் நடித்து வருகிறார்.
இந்நிலையில் தான் நேற்று (செப்டம்பர் 17) காஞ்சிபுரத்திற்கு அருகே சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் தன் இருசக்கர வாகனத்தில் வேகமாக சென்று கொண்டிருக்கும் போதே முன் சக்கரத்தைத் தூக்கி வீலிங் செய்துள்ளார்.
அப்போது எதிர்பாராத விதமாக கட்டுப்பாட்டை இழந்த வாகனம் 2 முறை தலைகீழாக பல்டி அடித்து சுழன்று சாலையோரத்தில் விழுந்தது. இதில் டிடிஎஃப் வாசன் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தார்.
அப்போது அந்த வழியாக வந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். மருத்துவர்கள் பரிசோதித்ததில் டிடிஎஃப் வாசனுக்கு வலது கை முறிவு மற்றும் உடலில் காயங்களும் ஏற்பட்டதுள்ளது என்று தெரியவந்தது.
பின்னர் சிகிச்சை அளிக்கப்பட்டு கை முறிவிற்கு கட்டுப் போடப்பட்டது. தொடர்ந்து டிடிஎஃப் வாசன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த நிலையில் அதிவேகமாக பைக் ஓட்டுவதன் மூலம் பொதுமக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்துதல், கவனக்குறைவாக செயல்படுதல் ஆகிய 2 பிரிவுகளில் டிடிஎஃப் வாசன் மீது காஞ்சிபுரம் பாலுசெட்டிசத்திரம் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
மோனிஷா
சுருண்டது ஆஸ்திரேலியா… தொடரை வென்றது தென்னாப்பிரிக்கா!
வேலைவாய்ப்பு: எஸ்பிஐ வங்கியில் பணி!