வார்னர் பிரதர்ஸுடன் இணைந்ததைத் தொடர்ந்து ரசிகர்கள் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் ’நாங்கள் சாகவில்லை’ என்று கார்ட்டூன் நெட்வொர்க் பதிலளித்துள்ளது.
அமெரிக்காவைச் சேர்ந்த கார்ட்டூன் நெட்வொர்க் என்பது 80s மற்றும் 90s கிட்ஸ்களின் பேவரைட் சேனல்களில் ஒன்று மட்டுமல்ல அது அவர்களின் பால்ய கால வாழ்க்கையின் ஆனந்த கண்ணாடி.
1992ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த சேனலில் பென் 10, கிரிம் அட்வென்ச்சர்ஸ் ஆஃப் பில்லி மற்றும் மாண்டி, ரோபோ பாய், ரெகுலர் ஷோ, அட்வென்ச்சர் ஷோ, பவர்பஃப் கேர்ள்ஸ் போன்ற தொடர்கள் குழந்தைகளிடையே மிகவும் பிரபலம்.
இப்படி கார்ட்டூன் சேனல்களிலேயே உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர் பட்டாளத்துடன் இந்த சேனல் வெகுவாக ரசிக்கப்பட்டு வந்தது.

வார்னர் பிரதர்ஸுடன் சிஎன்!
இந்நிலையில் கார்ட்டூன் நெட்வொர்க் சேனல் கடந்த 12ம் தேதியன்று வார்னர் பிரதர்ஸின் டிஸ்கவரியுடன் இணைந்தது.
இதனால் கலங்கிய அதன் ரசிகர்கள், ’ஆயிரக்கணக்கான கதைகளைச் சொல்லிவந்த கார்ட்டூன் நெட்வொர்க் சேனல் கதை முடிந்துவிட்டது. இனி நாம் எங்கே சென்று பேவரைட் கார்ட்டூன் தொடர்களை பார்க்கப்போகிறோம்?’ என்று சமூகவலைதளங்களில் குமுறி வந்தனர்.
அத்துடன் #RIPCartoonNetwork என்ற ஹேஷ்டேக்கையும் கார்ட்டூன் நெட்வொர்க் சேனல் குறித்த தங்களது மறக்கமுடியாத நினைவுகளை மீம்ஸாக பதிவிட்டு வந்தனர்.

வார்னர் பிரதர்ஸ் அதிரடி!
இதனைத் தொடர்ந்து கார்ட்டூன் நெட்வொர்க் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் ” நாங்கள் எங்கும் செல்லவில்லை. வார்னர் பிரதஸுடன் இணைந்துள்ளோம் அவ்வளோதான்” என்று தெளிவுபடுத்தியது.
இரண்டு நிறுவனங்களும் ஒன்று சேர்ந்த நிலையில் கார்ட்டூன் நெட்வொர்க்கின் 26% ஊழியர்களை வார்னர் பிரதர்ஸ் டெலிவிஷன் அதிரடியாக பணிநீக்கம் செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது
இதனால் தொடர்ந்து கார்ட்டூன் நெட்வொர்க் சேனல் குறித்த கவலையை சமூகவலைதளங்களில் தொடர்ந்து வெளிப்படுத்தி வந்தனர்.

ஜஸ்ட் 30 வயசு தான்!
இந்நிலையில் ரசிகர்களின் பிரியாவிடை பதிவுகளுக்கு கார்ட்டூன் நெட்வொர்க் சேனல் பதிலளித்துள்ளது.
அதில், “நாங்கள் சாகவில்லை, எங்களுக்கு 30 வயது தான் ஆகிறது. எங்கள் ரசிகர்களை விட்டு நாங்கள் எங்கும் செல்ல மாட்டோம்.
நாங்கள் எப்போதும் புதுமையான கார்ட்டூன் தொடர்களை அளித்து, உங்களது அன்புக்குரியவர்களாக இருப்போம். விரைவில் பல அறிவிப்புகள் வரும்” என்று தெரிவித்துள்ளது.
மேலும் இன்று We Baby Bears என்ற புதிய எபிசோடுடன் HBO மேக்ஸில் உங்களை சந்திக்கிறோம் என்று மாஸான அப்டேட்டையும் வெளியிட்டது.
கார்ட்டூன் நெட்வொர்க்கின் இந்த பதிலால் உற்சாகமடைந்த அதன் ரசிகர்கள், கடவுளுக்கு நன்றி… நாங்கள் மீண்டும் கிளாசிக்கான கார்ட்டூன் தொடர்களை பார்க்க போகிறோம் என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.
கிறிஸ்டோபர் ஜெமா
மூடுவிழா கண்ட கார்ட்டூன் நெட்வொர்க்: ஆழந்த வருத்தத்தில் 90s கிட்ஸ்!
உலக பட்டினி குறியீடு: மோசமான நிலையில் இந்தியா!