கேரவன் விவகாரம் தொடர்பாக கேரள சிறப்பு புலனாய்வுக்குழுவிடம் விளக்கம் தான் அளித்தேன், புகார் அளிக்கவில்லை என நடிகை ராதிகா சரத்குமார் தெரிவித்துள்ளார்.
ஹேமா கமிட்டி அறிக்கையால் ஒட்டுமொத்த கேரள திரையுலகமே பதற்றத்தில் உள்ளது. அந்த அறிக்கையினை தொடர்ந்து பிரபல நடிகர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் மீது அடுக்கடுக்கான பாலியல் புகார்களை நடிகைகள் உள்ளிட்ட பெண் கலைஞர்கள் சுமத்தி வருகின்றனர்.
மேலும் இயக்குநர் ரஞ்சித், நடிகர்கள் சித்திக், முகேஷ், ஜெயசூர்யா, மணியன்பிள்ளை ராஜூ உள்ளிட்டோர் மீது வழக்கும் பதிவாகி இருக்கிறது.
இதற்கிடையே தமிழ் திரையுலகின் மூத்த நடிகையான ராதிகா சரத்குமார் அளித்த பேட்டியில், ”கேரளாவில் படப்பிடிப்பின் போது வழங்கப்பட்ட கேரவனில் ரகசியமாக கேமராக்களை பொருத்தி நடிகைகள் ஆடைகளின்றி காட்சி அளிக்கும் வீடியோக்களை பதிவு செய்கின்றனர்” எனக் கூறி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார்.
இந்த குற்றச்சாட்டு தொடர்பாக கேரளா அரசால் அமைக்கப்பட்ட சிறப்பு புலனாய்வுக்குழு ராதிகாவிடம் போனில் தொடர்பு கொண்டு விசாரணை நடத்தியது.
இதனையடுத்து ராதிகா செய்தியாளர்களை சந்தித்து அளித்த பேட்டியில், “என்னிடம் 4 நாட்களுக்கு முன்னர் கேரள சிறப்பு புலனாய்வு குழு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். அப்போது கேரவனில் கேமிரா விவகாரம் தொடர்பாக விளக்கம் மட்டும் தான் அளித்தேன். புகார் அளிக்கவில்லை.
ஹேமா கமிட்டி குறித்து ரஜினி உட்பட பிரபல நடிகர்கள், பேசாமல் மவுனம் காப்பது தவறாக தெரிகிறது. பெரிய நடிகர்கள் குரல் கொடுத்தால் எங்களைப் போன்ற பெண்களுக்கு ஆறுதலாக இருக்கும். தமிழ் சினிமாவில் இருக்கும் எல்லா நடிகர்களுக்கும் ஏதோ ஒரு வகையில் அரசியல் ஆசை இருக்கிறது. நீங்கள் மக்களுக்காக பேசபோகிறீர்கள் என்றால் முதலில் உங்கள் கூட இருக்கின்ற பெண்களுக்காக ஒரு வார்த்தை பேசுங்கள்.
80களில் இருந்து பார்க்கிறேன். பாலியல் தொல்லை பற்றி பல நடிகர்கள் என்னிடம் புகார் கூறியதுண்டு. பாலியல் சீண்டலில் ஈடுபட்ட நடிகர்களின் பெயரை சொல்லமாட்டேன். சொல்லவும் முடியாது. இதில் பெரிய பெயர்கள் சம்பந்தப்பட்டுள்ளது. இப்போது புகார் சொன்னாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாது. அது எனக்கு தெரியும்.
ஹேமா கமிட்டி போன்று தமிழ் திரையுலகிலும் ஒரு கமிட்டி அமைக்க வேண்டும். இதுகுறித்து விஷால் என்னிடம் கேட்டால் அறிவுரை கூறத் தயார். தமிழ் திரையுலகில் தற்போது பாலியல் சுரண்டல்கள் குறைந்துவிட்டன” என்று ராதிகா தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
அந்த மோசமான ஆம்பள நரி : ஸ்ரீரெட்டி யாரை சொல்கிறார்?
என் மகனை வைத்து கபில்தேவை பழி வாங்கி விட்டேன்: யுவராஜ்சிங் தந்தை ஆவேசம்!