டி கே புரொடக்ஷன்ஸ் சார்பாக வி துரைராஜ் தயாரிப்பில் ஜான் கிளாடி இயக்கத்தில் சையது மஜீத், மேக்னா எலன் மற்றும் விஜி சேகர் ஆகியோர் நடிப்பில் முழுக்க முழுக்க புறா பந்தயத்தை மையமாக வைத்து உருவாகியுள்ள திரைப்படம் பைரி.
வரும் பிப்ரவரி 23 அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் சென்னையில் படத்தின் இசை வெளியீட்டு நிகழ்வு நேற்று (பிப்ரவரி 12) நடைபெற்றது.
யாரும் வாங்கி வெளியிட முன்வரவில்லை!
அதில் பைரி திரைப்படத்தின் இயக்குநர் ஜான் கிளாடி பேசுகையில், “புறாக்களை வேட்டையாடும் குணம் கொண்ட கழுகு இனம் தான் பைரி. இந்த புறா பந்தய கதைக்களம் என்பது என் வாழ்வில் நான் பார்த்து வளர்ந்த வாழ்வியல் சம்பவங்களின் அடிப்படையில் எடுத்தாளப்பட்டிருக்கிறது.
அனைவருமே படத்தைப் பார்த்து நன்றாக இருக்கிறது என்று பாராட்டினாலும் யாரும் அதை வாங்கி வெளியிட முன்வரவில்லை. எந்தவிதமான சப்போர்ட்டும் கிடைக்காமல் என்ன செய்வது என்று முழித்துக் கொண்டு இருந்தோம். அப்பொழுது தான் சக்திவேலன் சார் இப்படத்தை பார்த்தார்.
புது இயக்குநர், புது டீம், ஆடியன்ஸுக்கு பரிச்சயமான நடிகர் நடிகைகள் இல்லை என்றெல்லாம் யோசிக்காமல் இப்படத்தை வாங்க அவர் முன் வந்ததால் தான் இன்று எங்களுக்கு இப்படி ஒரு ப்ளாட்பார்ம் கிடைத்திருக்கிறது.
படம் கண்டிப்பாக சிறப்பாக இருக்கும். நீங்களும் படம் பார்க்கும் போது அதை உணருவீர்கள் என்று நம்புகிறேன். படத்தில் 950 சிஜி ஷாட்கள் இருக்கின்றன, 4 நிமிடத்திற்கு 75 இலட்ச ரூபாய் செலவாகும் என்றார்கள். ஆனால் சிஜி சேகர் 35 நிமிடத்திற்கு சிஜி ஷாட்களை மிகக் குறைந்த பட்ஜெட்டில் மிக சிறப்பாக வடிவமைத்துக் கொடுத்திருக்கிறரர் என்பது சிறப்பு” என்றார்.
இந்த வருடத்தின் மிகப்பெரிய சம்பவம்!
தொடர்ந்து யாத்திசை பட இயக்குநர் தரணி ராசேந்திரன் பேசுகையில், “பைரி என்கின்ற திரைப்படம் எனக்கு முதன் முதலாக சக்திவேலன் சார் மூலமாகத் தான் அறிமுகமானது. நான் அவரை பார்க்கும் போதெல்லாம் அப்படத்தினைப் பற்றிப் பேசுவார். இயக்குநர் பேசும் போது வெகுளியாகப் பேசினார். ஆனால் அவருடைய படமும், அந்த கிராப்டிங்கும், அவர் ப்ரேமை கட்டமைத்த விதமும், அதில் கதாபாத்திரங்களை நடிகர்களை கையாண்ட விதமும் மிகச் சிறப்பாக ஆச்சரியப்பட வைக்கிறது.
ஒரு படத்தை ஆடியன்ஸுக்கு நெருக்கமாக மாற்றுவது என்பது ஒர் தொழில்நுட்பம் சார்ந்த அறிவு. இது வெறும் புறா சண்டையாக நின்று போவதில்லை. அதனையும் மீறி மனிதர்களின் உணர்வு, அரசியல், அந்த சமூகத்தின் அரசியலைப் பேசுகிறது.
புதுப்பேட்டை, ஆடுகளம் படங்களைப் போல் பைரி திரைப்படம் இருக்கும். இன்னும் சொல்லப் போனால் இந்த வருடத்தின் மிகப்பெரிய சம்பவமாக பைரி இருக்கும். இவ்வருடத்தின் மிக முக்கியமான படங்களில் பைரி கண்டிப்பாக இருக்கும் என்று நம்புகிறேன்” என்று அவர் பேசினார்.
அடையாளமாக மாறும்!
சக்தி ஃப்லிம் பேக்டரி சக்திவேலன் பேசுகையில், “நான் இப்படத்திற்கு அடையாளம் கொடுக்கவில்லை. பைரி திரைப்படம் தான் எங்கள் சக்தி ஃபிலிம் பேக்டரிக்கு அடையாளமாக மாற இருக்கிறது என்று சொல்லிக் கொள்கிறேன். கண்டிப்பாக இந்த ஆண்டிற்கான வெற்றிப்படங்கள் மற்றும் சிறந்த படங்கள் என்று ஒரு பட்டியல் எடுத்தால் அதில் கண்டிப்பாக “பைரி” இருக்கும்.
பதினைந்து வருடமாக கஷ்டப்பட்ட அத்தனை பேரும் சேர்ந்து ஒரு நல்ல படத்தை எடுத்திருக்கிறார்கள். பைரி படத்தின் வெற்றியை சத்தம் போட்டு சொல்ல வேண்டும் என்று விரும்புகிறேன்” என்று அவர் தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
அதிக சம்பளம் கேட்ட தனுஷ் : பதறிய தயாரிப்பு நிறுவனம்!
வேலைவாய்ப்பு: தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் பணி!
இந்தச் செயலிகள் உங்கள் செல்போனில் இருக்கிறதா? உடனே நீக்குங்கள்!
வெற்றி துரைசாமி உடல் இன்று மாலை தகனம்!