பம்பர்: விமர்சனம்!

சினிமா

கோயம்புத்தூர் வட்டாரமென்றால் ‘என்ரா..’ அல்லது ‘ங்ண்ணா..’, மதுரை என்றால் ‘போறாய்ங்க வாராய்ங்க’, திருநெல்வேலி என்றால் ‘ஏலே.. என்னலே..’ என்று சில வார்த்தைகளின் துணையோடு மொத்தப்பட வசனத்தையும் எழுதிவிடும் வழக்கம் ஒருகாலத்தில் உண்டு. இன்று, திரைக்கதையின் இண்டு இடுக்குகளில் இருக்கும் சின்னச் சின்ன விஷயங்களையும் வட்டமிட்டுக் காட்டி சமூகவலைதளங்களில் ட்ரெண்டிங் ஆக்கிவிடும் பழக்கம் மிகுந்திருக்கிறது. இந்தச் சூழலில், ஒரு குறிப்பிட்ட வட்டாரத்தைக் காட்டிவிட்டுப் பொத்தாம்பொதுவாக வசனங்களைப் பேசிக் கடந்துவிட முடியாது. அப்படிப்பட்ட ரசிகர்களின் நாடித்துடிப்பை உணர்ந்தே, முழுக்க முழுக்க நம்மை தூத்துக்குடிக்கும் புனலூருக்கும் இழுத்துச் சென்ற உணர்வையூட்டுகிறது வெற்றி, ஷிவானி நாராயண் நடித்த ‘பம்பர்’. இதனைப் புதுமுக இயக்குனர் எம்.செல்வகுமார் இயக்கியுள்ளார்.

குற்றத் தருணங்கள்!

தூத்துக்குடியில் சின்னச் சின்ன திருட்டுகளிலும் அடாவடிச் செயல்களிலும் ஈடுபட்டுக் காவல் நிலையங்களில் தன் புகைப்படத்தை இடம்பெறச் செய்கிறார் புலிப் பாண்டி (வெற்றி). ஒரு நாயகனுக்குரிய கெத்தோடு திரியும் அவரோடு செந்தூரன், சூடாமணி, பூதத்தான் மூன்று நண்பர்கள் எப்போதும் சேர்ந்தே இருக்கின்றனர். அதனால், அவர்கள் மீதும் வழக்குகள் உண்டு. பணத்திற்காக என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்றிருக்கும் இந்தக் கும்பல் ஒரு கொலை முயற்சியிலும் இறங்குகிறது. அது தோல்வியில் முடிகிறது.

bumper movie review

இந்த நிலையில், தூத்துக்குடிக்குப் புதிதாக பெஞ்சமின் எனும் எஸ்பி வருகிறார். ரவுடிகளை எல்லாம் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையிலடைக்கிறார். அவரிடம் இருந்து தப்பிப்பதற்காக, ஐயப்ப சேவா சங்கமொன்றில் நால்வரும் நுழைகின்றனர். அவசர அவசரமாக ஐயப்பனுக்கு மாலையிடுகின்றனர். அந்த நேரத்தில், அவர்களை பெஞ்சமின் கைது செய்வது சர்ச்சையாகிறது. அதன்பிறகு, நால்வரும் விரதமிருந்து சபரிமலைக்குச் செல்கின்றனர்.

திரும்பும் வழியில், அவர்கள் லாட்டரி விற்கும் ஒரு இஸ்லாமிய பெரியவரைச் சந்திக்கின்றனர். புலிப்பாண்டி அவரிடம் ஒரு பம்பர் லாட்டரியை வாங்குகிறார். அந்த இடத்திலேயே தொலைத்தும்விடுகிறார். அதனைப் பத்திரமாக எடுத்து வைக்கிறார் அந்த பெரியவர்.

சில நாட்கள் கழித்து, அந்த லாட்டரிக்குப் பத்து கோடி ரூபாய் பரிசு விழுந்ததாக அறிவிப்பு வெளியாகிறது. வீட்டில் தாண்டவமாடும் வறுமை, இரண்டாவது மகளின் திருமணம், ஏலத்திற்குப் போகும் வீடு என்று பல பிரச்சனைகளோடு வாழ்ந்தாலும், அந்த லாட்டரி தன்னுடையதில்லை என்பதில் பிடிவாதமாக நிற்கிறார் அந்த பெரியவர்.

புலிப்பாண்டியிடம் அதனை ஒப்படைப்பதற்காகத் தூத்துக்குடி செல்கிறார். ஒருவழியாக அவரைத் தேடிக் கண்டுபிடிக்கிறார். அந்த தருணங்கள், புலிப்பாண்டியைச் சக மனிதர்கள் மத்தியில் மரியாதை மிக்கவராக மாற்றுகின்றன.

பரிசுப் பணம் வாங்க கேரளா சென்றபிறகு, புலிப்பாண்டியின் நடவடிக்கைகள் அடியோடு மாறுகிறது. உடனிருக்கும் நண்பர்களிடம் எரிந்து விழுகிறார். ‘நான்..’, ‘என்னுடைய பணம்’ என்று பேசத் தொடங்குகிறார். அது அவர்களிடையே விரிசலை உருவாக்குகிறது.

லாட்டரி பிரிவு அலுவலகத்தில் ஆதார், பான் அட்டை வேண்டும் என்று கேட்கப்படும்போது, புலிப்பாண்டியால் அதனைத் தர முடியவில்லை. அதனால், அந்தப் பெரியவரின் வங்கிக்கணக்கிலேயே அப்பணத்தை ‘டெபாசிட்’ செய்வது எனவும், பின்னர் அதனை எடுத்துக்கொள்வது எனவும் முடிவாகிறது. அதனால், வீட்டுக்காவலில் இருப்பது போல புலிப்பாண்டியும் அவரது நண்பர்களும் எந்நேரமும் தங்களோடு தங்கியிருக்கும் பெரியவரைக் கண்காணிக்கின்றனர். அதேநேரத்தில், பெரியவரின் மூத்த மகனும் மருமகனும் சில நபர்களின் துணையோடு அவரைக் கொல்ல முடிவெடுக்கின்றனர்.

bumper movie review

அப்போது நிகழும் சில சம்பவங்கள், புலிப்பாண்டி உள்ளிட்ட நால்வரின் கண்களுக்கு அந்த இஸ்லாமியப் பெரியவரை மோசடியாளராகத் தெரியச் செய்கிறது. அதன்பிறகு என்ன நடந்தது என்பதைச் சொல்வதோடு படம் முடிவடைகிறது.

’குற்றங்களுக்கான தருணங்களை எதிர்கொள்ளாதவரை எல்லோரும் நல்லவர்களே’ எனும் தொனியில் மொத்த திரைக்கதையும் அமைந்துள்ளது. அதற்கு நடுவே, எதற்கும் வளைந்து கொடுக்காத உறுதியுடன் வாழ்நாள் முழுக்க ஒழுக்கங்களோடு வாழும் ஒரு பெரியவரின் அறமிகு வாழ்வு பெருமிதப்படுத்தப்படுகிறது. அதுவே இப்படத்தின் சிறப்பம்சம்.

பணம் பத்தும் செய்யும்!

சொந்தமாய் நிலம், வீடு எதுவுமில்லாமல், உறவினர்களின் ஆதரவில்லாமல், எப்போதும் எதிரே வருபவர்களின் அவமானமிக்க பார்வைகளைச் சுமப்பது புலிப்பாண்டியை எரிச்சலடைய வைக்கிறது. ஆனால், ‘பணம் பத்தும் செய்யும்’ என்பது போல அவரது நண்பர்களும் அதே வேட்கையோடு திரிவதுதான் வேடிக்கை. அதுவே, பணத்தை ஒரு பொருட்டாக எண்ணாத அந்த இஸ்லாமியப் பெரியவர் பாத்திரத்தைக் கொண்டாடச் செய்கிறது. இந்த முரணை மிகச்சரியாகத் திரையில் பிரதிபலித்திருக்கிறார் இயக்குனர் செல்வகுமார். அதுவே, கடைசி அரை மணி நேரத்தில் திரைக்கதையில் நிகழ்ந்த ஒழுங்கற்ற மாற்றங்களைச் சகிக்க வைக்கிறது.

வசனங்கள் முழுவதிலும் ‘அக்மார்க்’ தூத்துக்குடி வாசனை. ‘கிடக்கு’, ‘இருக்கு’ என்பது போன்ற வசனங்கள் நேராக அந்த உப்புக்காற்றைச் சுவாசிக்கும் உணர்வை உண்டாக்கிவிடுகின்றன. அது போதாதென்று ‘சேக்காளிகள்’ சகிதம் புலிப்பாண்டி திரியும் காட்சிகள் ரசிக்க வைக்கின்றன.

புலிப்பாண்டியாக வரும் வெற்றியும் சரி; அவரது நண்பர்களாக வரும் தங்கதுரை, கல்கி, மற்றும் செந்தூரானாக நடித்தவரும் சரி. திரையில் மிக இயல்பாகத் தோன்றியுள்ளனர். அவர்களுக்கு இணையாக, ஏட்டாக வரும் கவிதா பாரதி கலக்கியுள்ளார். முழுக்க வில்லத்தனமிக்க அவரது பாத்திரம் ரசிகர்கள் எழுந்து கூச்சலிடும் அளவுக்கு உள்ளது. எஸ்பியாக வரும் மதன் தட்சிணாமூர்த்தியும் கலக்குகிறார்.

இந்தப் படத்தில் ஹரீஷ் பேரடியின் பாத்திரமே பிரதானம். அவர் அதனை உணர்ந்து நடித்துள்ளார். இது போன்ற படங்களில் மலையாள வசனங்கள் இடம்பெறும்போது அவற்றில் சரிபாதி தமிழ் கலந்து இருப்பது வழக்கம். இதில் அந்த நிலைமை இல்லை. மலையாளத்தை விளங்கிக்கொள்ள ‘சப்டைட்டில்’ துணை நிற்கிறது. மலையாளம் என்பது பழந்தமிழே என்பவர்களுக்கு அதனைப் புரிந்துகொள்வதில் பெரிதாகப் பிரச்சனை இராது.

மலையாள நடிகர் டிடோ வில்சன் உட்பட அனைவரும் சிறப்பான பங்களிப்பைத் தந்துள்ளனர். கேரளாவின் புனலூரில் செயல்படும் லாட்டரி ஏஜென்சியை நடத்துபவர்களைத் தமிழர்களாகக் காட்டியுள்ளார் இயக்குனர். ஒரு வகையில் அது படத்தயாரிப்பு நிறுவனத்திற்கான விளம்பரமாகவும் மாறியுள்ளது.

ஷிவானி நாராயண் இதில் நாயகியாக நடித்துள்ளார். அவரது வசன உச்சரிப்பு, நடிப்பு ஓகே எனும் வகையில் உள்ளது; ஆனால், ’அவர் ஒரு இன்ஸ்டாகிராம் அழகி’ என்பதைக் காட்டிக்கொடுக்கிறது ஒப்பனை. அதிலும், அவரது செம்பட்டை தலைமுடியைப் பார்த்தவுடன் ‘அடுத்த ரீல்ஸ் எப்போ’ என்றே கேட்கத் தோன்றுகிறது.

நாயகனின் தாயாக வரும் ஆதிராவின் நடிப்பு திரைக்கதைக்குப் பலம் சேர்க்கிறது. போலவே, ஷிவானியின் தாயாக நடிப்பவர் தொடங்கி வெற்றி நண்பர்களின் உறவினர்கள் வரை பலரது நடிப்பும் மெச்சும்படியாக உள்ளது.

bumper movie review

இத்தனை நாள்வரை தொலைக்காட்சி பிரபலமாக இருந்த ஜிபி முத்துவின் புகழை மிகச்சரியாக அறுவடை செய்திருக்கிறார் இயக்குனர் செல்வகுமார். அவர் வரும் காட்சிகளுக்கு தியேட்டரில் சிரிப்பு அள்ளுகிறது. இந்த கைத்தட்டலை முத்து கெட்டியாகப் பிடித்துக் கொள்ள வேண்டும்.

வினோத் ரத்தினசாமியின் ஒளிப்பதிவில் தூத்துக்குடி, புனலூர் பகுதிகள் அழகுறப் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆனால், அழகுணர்ச்சியை விடக் காட்சிகளின் தன்மைக்கே முன்னுரிமை தந்திருப்பது திரைக்கதையைக் கூர்மையாக்கியுள்ளது. சுபேந்தரின் கலை வடிவமைப்பு பல இடங்களில் கதைக்கான களங்களைக் காட்ட உதவியிருக்கிறது. மு.காசி விஸ்வநாதனின் படத்தொகுப்பில் கதை நகர்வு மிகச்சீராக அமைந்துள்ளது.

கோவிந்த் வசந்தாவின் இசையில் பாடல்கள் காதுகளை வருடுகின்றன; தாலாட்டுகின்றன; மனதைத் துவள வைக்கின்றன. போலவே, கிருஷ்ணாவின் பின்னணி இசை நம்மைக் காட்சியோடு ஒன்றச் செய்கிறது.

நல்ல வரவு!

இந்த ஆண்டின் சிறந்த புதுமுக இயக்குனர்களில் ஒருவராக எம்.செல்வகுமாருக்கு நிச்சயம் ஒரு இடம் கிடைக்கும். படத்தின் உள்ளடக்கம் பட்ஜெட்டை பறை சாற்றுவதால், அடுத்தடுத்த வாய்ப்புகளும் எளிதாக வாய்க்கும் என்றே தோன்றுகிறது.

கடைசி 20 நிமிடங்களில் வெற்றியும் அவரது நண்பர்களாக நடித்தவர்களும் எதிரே இருப்பவர்களை ஒருமையில் விளிக்கின்றனர்; மரியாதைக் குறைவாக நடத்துவதாகக் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. அவை மட்டுமே சிறிய அளவில் முகம் சுளிக்க வைக்கிறது.

இந்தக் கதையில் நாயகிக்கென்று பெரிதாக முக்கியத்துவம் இல்லை. ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’ போலவே நண்பர்களின் குடும்பத்தினருக்குத் திரைக்கதையில் பெரிதாக இடம் தரப்படவில்லை. அதற்குக் காரணம், வெற்றி வெர்சஸ் ஹரீஷ் பேரடி என்ற அளவிலேயே முழுத்திரைக்கதையையும் இயக்குனர் வடிவமைத்திருப்பது தான். அந்த தெளிவும் தைரியமும் பாராட்டுக்குரியது.

அதே நேரத்தில், இப்படம் லாட்டரிச் சீட்டு மோகத்தை உசுப்பிவிடும் விளம்பரப்படமாகவும் உள்ளது என்பதை ஒப்புக்கொண்டாக வேண்டும். மலையாளத்தில் கூட இப்படியொரு திரைக்கதை இதுவரை வரவில்லை.

இயல்பென்று எண்ண வைக்கும் காட்சியாக்கத்தோடு, ஒரு புதிய களத்தினை அறிமுகப்படுத்திய படம் என்ற வகையில் ஒரு நல்வரவாக எண்ண வைக்கிறது ‘பம்பர்’.

பின்பாதியில் இடம்பெற்ற ஒரு பாடல் காட்சியில், திடீரென்று சாலையின் ஓரத்தில் பாய் விரித்து இஸ்லாமியப் பெரியவர் தொழுகை செய்வதாக ஒரு ஷாட் உண்டு. அப்போது, அருகில் நிற்கும் நபர் அவர் மீது நிழல் விழும் வகையில் ஒரு அட்டையைத் தாங்கிக்கொண்டு நிற்பார். அவருடனே சில இடங்களுக்குப் பயணிப்பார். அவர் மனப்பிறழ்வுக்கு ஆளானவரா அல்லது மனிதத்தைப் போதிக்கும் சித்தரா என்று நம்மால் பிரித்தறிய முடியாது. ஆனால், அவரது நெற்றி முழுக்கக் குங்குமம் படர்ந்திருப்பதைக் காண முடியும்.

படத்தில் இந்த ஷாட்கள் ‘சொடுக்கு’ இடுவதற்குள் நம்மைக் கடந்துவிடும். ஆனால், அதனை அடிக்கோடிட்டுக் காட்ட வேண்டுமென்று இயக்குனர் மெனக்கெட்டிருக்க மாட்டார். இந்தப் படம் கூட மனிதத்தின் மாண்பினையே தாங்கி நிற்கிறது. அந்த திரைமொழிக்காகவே ‘பம்பர்’ கொண்டாடப்பட வேண்டும். நிச்சயம் கொண்டாடப்படும்..!

உதய் பாடகலிங்கம்

மீண்டெழுகிறதா உக்ரைன்?

பிரான்ஸ் கலவரம்: ஐரோப்பிய நாடுகளுக்கும் பரவும் அபாயம்!

தூத்துக்குடி பனிமய மாதா திருவிழா: ரயில் முன்பதிவு தொடக்கம்!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
3
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *