ப்ரோமான்ஸ்: விமர்சனம்!

Published On:

| By uthay Padagalingam

Bromance Malayalam Movie Review

துடிப்பேற்றும் கோவிந்த் வசந்தாவின் இசை!

கடந்த ஆண்டு காதலர் தினத்தையொட்டி வெளியான படங்களில் பெரும் சாதனையைப் படைத்தது ‘பிரேமலு’. எந்தப் படத்தையும் கறாராக, கடுமையாக விமர்சிப்பவர்களையும் கூட, ‘கதையே இல்லாம படம் எடுத்தாலும், பார்க்க ஜாலியா இருக்கு’ என்று சொல்ல வைத்தது. கிட்டத்தட்ட அப்படியொரு எண்ணத்தை ஏற்படுத்தின ‘ப்ரோமான்ஸ்’ மலையாளப் படத்திற்கான புரோமோஷன் உத்திகள்.

‘லியோ’வில் விஜய்யின் மகனாக நடித்த மேத்யூ தாமஸ், ‘பிரேமலு’ புகழ் சந்தோஷ் பிரதாப், அதில் வில்லனாக வந்த ஷ்யாம் மோகன், மஹிமா நம்பியார், கலாபவன் சாஜன் உள்ளிட்ட பலர் இதில் நடித்துள்ளனர். Bromance Malayalam Movie Review

அருண் டி ஜோஸ் கதை எழுதி இயக்கியிருக்கும் இந்தப் படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்திருக்கிறார். ’96’ படம் பார்த்துவிட்டு ‘மெலடியா மீசிக் போடுவாரு போல’ என்றெண்ணியவர்கள் பின்னங்கால் பிடறியில் பட ‘டான்ஸ்’ ஆடும் அளவுக்குத் துள்ளலான இசையைத் தந்திருக்கிறார்.

இந்த படத்தின் ‘ஜூக்பாக்ஸ்’ கேட்டுவிட்டு தியேட்டருக்கு சென்றால், திரையனுபவம் இன்னும் சிறப்பாகக் கிடைக்க வாய்ப்புண்டு. இப்படிப் புகழும் அளவுக்கு, ‘ப்ரோமான்ஸ்’ படத்தில் என்ன இருக்கிறது? Bromance Malayalam Movie Review

ஒரு தேடல்! Bromance Malayalam Movie Review

காணாமல்போன ஒரு நபரை அவரது இளைய சகோதரர் தேடிக் கண்டறிவதாகவும், அதற்குச் சிலர் உதவுவதாகவும் ‘ப்ரோமான்ஸ்’ கதை அமைக்கப்பட்டுள்ளது.

‘இதெல்லாம் ஒரு கதையா’ என்று மனதுக்குள் ஒரு எண்ணம் முளைக்கலாம். ஆனால், ’படம் பார்க்கறப்போ அதுக்கு வேலை இருக்காது’ எனும்படியாக ‘ப்ரோமான்ஸ்’ திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது. Bromance Malayalam Movie Review

குறிப்பாக, பிரதான பாத்திரங்கள் அனைத்துமே ‘வித்தியாசமானதாக இருக்குமாறு பார்த்துக் கொண்டிருக்கிறது இயக்குனர் அருண் டி  ஜோஸ் மற்றும் திரைக்கதை வசனங்களை ஆக்கிய ரவீஷ் நாத், தாமஸ் செபாஸ்டியன் இணை.

ஷிண்டோ (ஷ்யாம் மோகன்) எனும் நபர், கொச்சியில் இருந்து சொந்த ஊருக்குச் செல்கிறார். கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி அக்கிராமமே விழாக்கோலம் பூண்டிருக்கிறது. ஆனாலும், நீண்ட நாட்கள் கழித்து ஊர் திரும்பியிருக்கிற அண்ணனைக் கண்டு தம்பி பிண்டோவுக்கு (மேத்யூ தாமஸ்) மகிழ்ச்சி இல்லை. ‘உன் அண்ணனை மாதிரியே நீ இல்லைன்னு சொல்லியே ஊர்ல இருக்குறவங்க எல்லோரும் என்னைக் கொன்னெடுக்குறாங்க’ என்று ஆத்திரப்படுகிறார்.

பதிலுக்கு கோபப்படாமல், ‘நியூ இயர் பிளான் என்ன’ என்கிறார். கர்நாடகாவில் இருக்கும் குடகு வட்டாரத்திற்குச் செல்லவிருப்பதாகச் சொல்ல, உடனே தம்பியின் வங்கிக்கணக்கில் 20,000 ரூபாய் இடுகிறார் ஷிண்டோ. அது பிண்டோவை ஆச்சர்யப்படுத்துகிறது. டிசம்பர் 31ஆம் தேதியன்று அது அதிர்ச்சியாக மாறுகிறது.

கொச்சியில் இருக்கும் ஷபீர் (அர்ஜுன் அசோகன்) என்பவர் போன் செய்து, ‘உன் அண்ணன் ஷிண்டோவை காணலை’ என்கிறார். உடனே, குடகு மலையில் இருந்து கொச்சிக்குத் திரும்புகிறார் பிண்டோ. Bromance Malayalam Movie Review

வந்த இடத்தில், ஷிண்டோவுக்கும் ஐஸ்வர்யா எனும் பெண்ணுக்கும் காதல் இருப்பது தெரிகிறது. அவரைத் தேடிச் சென்று, தலைக்கேறும் தனது ஆத்திரத்தைக் கொட்டுகிறார். பதிலுக்கு கெட்ட வார்த்தைகளை உதிர்க்கும் அந்த ஐஸ்வர்யா (மஹிமா நம்பியார்), ‘என்னை வேணாம்னு சொல்லிட்டு போனது உன்னோட அண்ணன் தாண்டா’ என்கிறார்.

அதன்பிறகு, ஷிண்டோ தேடிச் சென்றது இன்னொரு ஐஸ்வர்யாவை என்பது தெரிய வருகிறது. அவர் எங்கிருக்கிறார் என அறிவதற்குள் பிண்டோ, ஷபீர், ஐஸ்வர்யா உடன் ஹேக்கர் ஹரிஹரசுதன் (சந்தோஷ் பிரதாப்), ரவுடி கூரியர் பாபு (கலாபவன் சாஜன்) அக்கூட்டணியில் இணைகின்றனர்.

பிறகு, ஷிண்டோவைத் தேடி குடகு மலைக்கு மீண்டும் செல்கிறார் பிண்டோ. அங்கு, அவருக்கு மேலும் பல அதிர்ச்சிகள் காத்திருக்கின்றன. அவற்றைக் கடந்து, சகோதரன் ஷிண்டோவை அவர் கண்டுபிடித்தாரா, இல்லையா? உடன் வருபவர்கள் அவருக்கு உதவினார்களா என்று சொல்கிறது ‘ப்ரோமான்ஸ்’ படத்தின் மீதி.

பெரிதாகப் பாசத்தை வெளிக்காட்டாத, அப்படியொன்று இருப்பதை அறியாமல் இருக்கிற ஒரு இளைஞன், தனது சகோதரனைத் தேடிச் செல்லும் பயணத்தில் உயிரையே பணயம் வைப்பதாகச் சொல்கிறது இப்படம். Bromance Malayalam Movie Review

ஒரு மேடை நாடகம் போன்று அமைய வேண்டிய திரைப்படம் இது. அப்படியொரு கதையில் வழக்கத்திற்கு மாறான காட்சியமைப்பை உருவாக்கி, அதனுள் சிறப்பான நடிப்புக்கலைஞர்களைப் புகுத்தி, கூடவே இசை உள்ளிட்ட தொழில்நுட்பங்களையும் பொருத்தமாக ஒருங்கிணைத்து, நல்லதொரு திரையனுபவத்தைத் தந்திருக்கிறார் இயக்குனர் அருண் டி ஜோஸ்.

‘லாஜிக் பார்த்தால் மேஜிக் நடக்காது’ எனும் ரகத்தில் அமைந்த கதை ஆனாலும், ‘இதுவும் யதார்த்தம் தான்’ என்பது போன்று திரைக்கதை ட்ரீட்மெண்டை அமைத்து சுவாரஸ்யம் சேர்த்திருக்கிறார். அதுவே இப்படத்தின் யுஎஸ்பி.

மீண்டும் அந்த ‘மாயாஜாலம்’!

நீளமான திரி கொண்ட சரவெடியைப் பற்ற வைத்துவிட்டு வேடிக்கை பார்ப்பது போன்று ‘ப்ரோமான்ஸ்’ படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது. அதனால், கதையுடன் நாம் ஒன்றச் சில நிமிடங்கள் ஆகும். அது நிகழும்வரை பொறுமை காத்தால், ‘அடிபொலி களிப்பு’க்கு உத்தரவாதம் தருகிறார் இயக்குனர் அருண் டி ஜோஸ்.

’கேயாஸ் தியரி’ பாணியில், திரைக்கதையில் ஒவ்வொரு பாத்திரமாக அறிமுகப்படுத்தும் உத்தி அற்புதம். Bromance Malayalam Movie Review

நிமேஷ் தன்னூரின் தயாரிப்பு வடிவமைப்பு, அகில் ஜார்ஜின் ஒளிப்பதிவு, சமன் சாக்கோவின் படத்தொகுப்பு, சுப்ரீம் சுந்தர் & மாபியா சசியின் சண்டைக்காட்சி வடிவமைப்பு உட்பட இப்படத்தின் தொழில்நுட்ப உழைப்பு, இயக்குனரின் கற்பனையைப் பல மடங்கு அதிகமாகத் திரையில் பெருக்கிக் காட்டியிருக்கிறது.

மசார் ஹம்சாவின் ஆடை வடிவமைப்பு, இன்றிருக்கும் இளைய தலைமுறையை நேரில் காண்கிற உணர்வை ஏற்படுத்துகிறது. கிளைமேக்ஸ் பாடல் காட்சியில் முக்கியப் பாத்திரங்கள் ‘விருந்து நிகழ்ச்சிக்கான உடை’யை அணிந்து வரும்போது தியேட்டரில் கைத்தட்டல் பலமாகக் கேட்கிறது.

இன்னும் டிஐ, விஎஃப்எக்ஸ், ஒலி வடிவமைப்பு என்று பல நுட்பங்கள் இதில் சிறப்பாக ஒருங்கிணைக்கப்பட்டிருக்கின்றன.

நடிப்பைப் பொறுத்தவரை, எல்லா பாத்திரங்களுமே கொஞ்சம் ‘ஓவர் ஆக்டிங்’ செய்வதாக முதலில் தோன்றும். ஆனால், கதை நகர நகர அந்த எண்ணம் மட்டுப்பட்டு, அந்த பெர்பார்மன்ஸ் தான் பலம் என்பதாக மாறி நிற்கும். மேத்யூ தாமஸ், அர்ஜுன் அசோகன், மஹிமா நம்பியார், கலாபவன் சாஜன், சந்தோஷ் பிரதாப், வில்லனாக வரும் பரத் போபண்ணா என்று பலரும் அந்தக் கருத்தை மெய்ப்பிக்கும் வகையில் தோன்றியிருக்கின்றனர்.

சப் இன்ஸ்பெக்டராக வரும் பினு பாப்பு தொடக்கத்தில் சில காட்சிகளில் வந்துபோனாலும், அவரது பாத்திரமும் திரைக்கதையில் முக்கியப் பங்கு வகிக்கிறது. இது போகச் சுமார் ஒரு டஜன் பாத்திரங்கள் இதில் உண்டு. இவர்களது நடிப்புதான் இத்திரைக்கதையைத் தூணாகத் தாங்கிப் பிடித்திருக்கிறது.

அனைத்துக்கும் மேலாக, இப்படத்தில் கண்களுக்குப் புலப்படாத பாத்திரமாக உலவுகிறது கோவிந்த் வசந்தாவின் பின்னணி இசை. ஒரே இசைத்துணுக்கை ‘லூஃப்’பில் ஒலிக்கவிடாமல், ஒவ்வொரு பாத்திரத்தின் எழுச்சியையும் வித்தியாசப்படுத்திக் காட்டும் வகையில் பின்னணி இசை அமைத்திருக்கிறார். பாடல்கள் இன்னும் ஒரு படி மேலே.

கிளைமேக்ஸில் வரும் கல்யாணப் பாடல், ஜென்ஸீ பாடல், இறுதி சண்டைக்காட்சியில் வரும் பாடல் என்று அவர் தந்திருக்கும் அத்தனை இசைத்துணுக்குகளும் துள்ளலை விதைக்கின்றன. இனி ‘டான்ஸ் ப்ளோர்’களில் இப்பட பாடல்கள் ஆக்கிரமிப்பது உறுதி.

சாதாரணமான கதை, வித்தியாசமான காட்சிகள், இரண்டையும் பிணைக்கிற விதமான பாத்திர வார்ப்பு, தொழில்நுட்ப உழைப்பின் மேன்மை என்று மேலும் மேலும் அலங்கரிப்பைக் கொட்டியிருக்கிற திரைப்படமாக இதனைத் தந்திருக்கிறார் அருண் டி ஜோஸ். அந்த உழைப்பு திரையில் ஒரு மாயாஜாலத்தை நிகழ்த்தியிருக்கிறது. அது கவரும் பட்சத்தில், திருப்தியோடு தியேட்டரை விட்டு வெளியே வரலாம்.

ஒருவேளை ‘ப்ரோமான்ஸ்’ கதை சொல்லலும், அதிலிருக்கும் திரைக்கதை உத்திகளும் சிலருக்கு எரிச்சலைத் தரலாம். ‘என்னடா படம் இது’ என்று சலிப்பு கொள்ள வைக்கலாம். அது இப்படத்தின் பலவீனம். Bromance Malayalam Movie Review

எதிர்பார்ப்புகள் ஏதுமில்லாமல், ‘கொஞ்சம் வித்தியாசமான படம் பார்ப்போமே’ என்பவர்களுக்கு ஏற்றது ‘ப்ரோமான்ஸ்’. இது தமிழில் மொழிமாற்றம் செய்யப்படுகையில் நம்மவர்களின் வரவேற்பு எப்படி என்பது தெரிந்துவிடும்..!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share