பெண் இயக்குனரின் படம் என்றால் ரொமான்ஸ், காமெடி, டிராமா என்று எல்லாமும் இருக்கும். ஆனால், கமர்ஷியலாக படம் இருக்காது. இந்த வாதத்தைப் பல இயக்குனர்கள் சுக்குநூறாக உடைத்தபோதும், ’இறுதிச்சுற்று’ தந்து ஒரு பெண் இயக்குனராக இருப்பதற்கான எல்லைகளைப் பெரிதாக்கியவர் சுதா கொங்கரா. தன்னால் முடிந்தவரை அந்த எல்லைக்கற்களை வெகுதூரத்திற்கு வீசி எறிந்திருக்கிறார் பிருந்தா.
நடன இயக்குனராக மட்டுமே அறியப்பட்ட இவர், ‘ஹே சினாமிகா’வுக்கு அடுத்தபடியாகத் தற்போது ‘குமரி மாவட்டத்தின் தக்ஸ்’ படம் தந்திருக்கிறார். இது ஒரு ஆக்ஷன் படம் என்பதுதான் ரசிகர்கள் விழிகள் விரித்து ஆச்சர்யப்படக் காரணமாகியிருக்கிறது.
ஒரு ஜெயில் கதை!
நாகர்கோவில் சிறைச்சாலை. அதன் கண்காணிப்பாளர் ஆரோக்கியதாஸ் (ஆர்.கே.சுரேஷ்) கெடுபிடியானவர்; அடக்குமுறைகளுக்குப் பெயர் போனவர். அச்சிறைச்சாலைக்குள் வேறொரு உலகமே இயங்குகிறது. அங்கு கைதிகளாக வந்தவர்கள் பெயில் கிடைக்கும் வரை அல்லது விடுதலை அடையும் வரை அங்கிருக்கும் வாழ்க்கைக்குப் பழகுவதைத் தவிர வேறு வழியில்லை.
மாறாக, வந்த முதல் நாளே அந்த சிறையில் இருந்து தப்ப எண்ணுகிறார் சேது (ஹிர்து ஹாரூண்). அந்த திட்டத்திற்குச் சொந்தக்காரர் வேறொரு நபர் (சரத் அப்பாணி); அவர் தன் சகாக்களோடு தப்பிக்கத் தீட்டிய திட்டம். சேதுவால் நொடியில் பாழாகிறது; அதனால், சேதுவை வஞ்சம் தீர்க்கக் காத்திருக்கிறார் அந்த நபர்.
சிறைக்கு வந்த சில நாட்களிலேயே, அங்கிருந்து தப்பிக்க ஆள் சேர்க்கிறார் சேது. எளிதாகச் சிறையை விட்டு வெளியே செல்ல முடியாதவர்கள் மட்டுமே அவரது இலக்கு. அப்போது, மூன்று இளைஞர்களைக் கொன்றுவிட்டு சிறைக்கு வந்த வடசேரி மார்க்கெட் ரவுடி துரை (பாபி சிம்ஹா) அறிமுகமாகிறார். அதன்பிறகு, பெரிய திருடனான மருது (முனீஸ்காந்த்) அந்த அறைக்கு வந்து சேர்கிறார். அதன்பிறகு, கஞ்சா கடத்தல் வழக்கில் சிக்கிய இரட்டையர்களான ரமேஷ், ராஜேஷ் இருவரும் வருகின்றனர்.
பூட்டிய சிறைக்கதவு, பெரிய காம்பவுண்ட் சுவர், பலத்த காவல் இதையெல்லாம் மீறி தனக்கென ஒரு குழுவை உருவாக்கிக்கொண்ட சேது அச்சிறையை விட்டு தப்பித்தாரா இல்லையா என்பதே ‘குமரி மாவட்டத்தின் தக்ஸ்’ கதை. அவர்கள் தப்பிப்பதாக முடிந்தால் மட்டுமே படம் ஓடும் என்பது ரசிகர்களுக்கும் தெரியும்.
‘ஒரு ஜெயில். ஒருநாள் கைதிங்க எல்லாம் அங்க இருந்து தப்பிச்சுட்டாங்களாம்’ எனும் வகைமை கதை என்றாலும், திரைக்கதையின் தொடக்கத்தில் உண்டான இறுக்கம் இறுதிவரை ஒரேமாதிரியாகத் தொடர்வதே இதன் சிறப்பு.

ரீமேக் படமா?
1994இல் வெளியான ‘ஷஷாங்க் ரிடெம்ப்ஷன்’, சில்வஸ்டர் ஸ்டாலோன் நடித்த ‘லாக் அப்’, ‘எஸ்கேப் பிளான்’ முதல் உலகம் முழுக்கப் பல படங்கள், சீரிஸ்கள் சிறைச்சாலையை மையப்படுத்தி வந்திருக்கின்றன. பிரியதர்ஷன் இயக்கிய ‘சிறைச்சாலை’ கூட அப்படியொரு படம் தான். ஆனால், 2018இல் வெளியான ‘ஸ்வந்தர்யம் அர்த்தராத்திரியில்’ மலையாளப்படத்தின் அப்பட்டமான ரீமேக் ஆக அமைந்திருக்கிறது இப்படம். இதுவரை இயக்குனர் பிருந்தாவோ, படக்குழுவினரோ அதனைப் பெரியளவில் தங்களது பேச்சில் முன்வைக்கவில்லை.
இவ்வளவு ஏன், படம் முடிந்தபிறகு ஓடும் டைட்டிலில் கூட வடிவமைத்து தயாரித்தது என்று தயாரிப்பாளர் ஷிபு தமீன்ஸ் பெயரே வருகிறது. ‘ரீமேக் படம்னு சொன்னா ஒரு மாத்து குறையும்’ என யார் சொன்னார்களென்று தெரியவில்லை.
மலையாளத்தில் இக்கதையைப் பார்க்காதவர்களுக்கு இப்படம் ஆச்சர்யம் தரும். காரணம், சிறைக்குள் நடக்கும் கதை என்றாலும் ஆங்காங்கே சிரிக்க, சிலிர்க்க, நகம் கடிக்க வைக்கும் இடங்கள் திரைக்கதையில் உண்டு. தப்பிப்பதற்கான முதல் அடியைத் தங்களது அறையில் இருந்தே தொடங்குவது முதல் இறுதியாக போலீஸ் பிடியில் இருந்து நழுவி வேறொரு இடம் நோக்கிச் செல்வது வரை பல இடங்களில் ஆச்சர்யம் காத்திருக்கிறது.
லாஜிக் மீறல்கள் என்று எடுத்துக்கொண்டால், இந்த கதையில் கொத்துக்கொத்தாக கண்ணில் படலாம். அதற்காக, இதனை உண்மை என்றும் எண்ண இயலாது. அவ்வாறு நிகழ்ந்தால், அடிக்கொரு தரம் ’சிறைச்சாலையில் இருந்து கைதிகள் தப்பித்தார்கள்’ எனும் தகவலைக் கேள்விப்பட வேண்டியிருக்கும்.
சிறையின் நடைமுறைகள் பற்றியோ, அங்கு நடக்கும் கொடுமைகள் பற்றியோ, அங்கிருந்து வெளியேற முடியாத காரணத்தால் குறிப்பிட்ட நபர்கள் அனுபவிக்கும் வெறுமை குறித்தோ திரைக்கதை இன்னும் அழுத்தமாகப் பேசியிருக்க வேண்டும் என்பதே நம் ஆதங்கம். சிறையிலிருக்கும் ஒரு கைதியாக பார்வையாளர் தம்மை உணரும் இடங்கள் இதில் குறைவு.
இவற்றையெல்லாம் தாண்டி, ஒரு நல்ல விறுவிறுப்புடன் கூடிய திரைக்கதையைக் கொண்டிருக்கிறது ‘குமரி மாவட்டத்தின் தக்ஸ்’. ‘தக் லைஃப்’ என்ற வார்த்தை சமூகவலைதளங்களில் பிரபலம் என்றாலும், அதெல்லாம் பிடிபடாத சராசரி சினிமா ரசிகனை இந்த டைட்டில் கொஞ்சமும் ஈர்க்காது.
நடிப்பு எப்படியிருக்கு?
தயாரிப்பாளர் ஷிபு தமீன்ஸின் மகன் தான் நாயகன் ஹிர்து ஹாரூண். அதனாலேயே, கொஞ்சம் பதவிசாகவே அவரைத் திரையில் காட்டியிருக்கிறார் இயக்குனர் பிருந்தா. பார்க்க வெளிநாட்டு கால்பந்து வீரர் போலிருக்கிறார். ஆனாலும், தன்னை அழகுறக் காட்டும் கதையைத் தேர்ந்தெடுக்காமல் இப்படியொரு படத்தில் அறிமுகமாகியிருப்பதே ‘சபாஷ்’ சொல்லக்கூடிய விஷயம் தான்.
பாபி சிம்ஹாவுக்கு முரட்டு தாதா பாத்திரம் தரப்பட்டிருக்கிறது. ‘ஜிகிர்தண்டா’வை தாண்டி வந்தவர் என்பதால் அலட்சியமாக அப்பாத்திரத்தை ஏற்றிருக்கிறார். ஆர்.கே.சுரேஷும் சிறை அதிகாரியாக கம்பீரத்துடன் தோன்றியிருக்கிறார். அப்பாணி சரத் இறுதிக்காட்சிகளுக்குப் பலம் சேர்த்திருக்கிறார்.
சேவல் பண்ணையாக காட்சியளிக்கும் சிறைச்சாலைக்கு நடுவே திரையில் தோன்றும் பெண்களாக அனஸ்வராவும் ரம்யா சங்கரும் மட்டுமே உள்ளனர். ஒரு காட்சியில் வந்தாலும் ரம்யா நம் மனதில் நிற்கிறார்; அனஸ்வரா வழக்கமான இளம்பெண் ப்ளஸ் காதலி பாத்திரத்தில் பாந்தமாகப் பொருந்துகிறார்.
இவர்கள் தவிர்த்து முனீஸ்காந்த், சேகர், அருண் அரவிந்த் இரட்டையர்கள் சம்பந்தப்பட்ட காட்சிகள் சிரிப்பதற்கு இடம் தருகின்றன. இவர்களைத் தாண்டி பி.எல்.தேனப்பனும் படத்தில் இருக்கிறார்.

இவர்கள் அனைவருமே துண்டு துண்டாகத் தெரிகிறார்களே தவிர ஒரே இடத்தில் வாழ்கின்றனர் என்ற உணர்வை ஏற்படுத்த தவறியிருக்கின்றனர். வசனங்களும் கூட நாகர்கோவில் வட்டாரத்தை முழுதாகப் பிரதிபலிக்கச் செய்யவில்லை.
ஒளிப்பதிவாளர் பிரியேஷ் குருசாமி, தயாரிப்பு வடிவமைப்பாளர் ஜோசப் நெல்லிக்கல் இருவரும் இணைந்து நாம் ஒரு சிறைச்சாலையைப் பார்க்கிறோம் என்ற உணர்வை அதிகப்படுத்துகின்றனர். அதேபோல, அக்காட்சிகள் நம் மனதில் அழுத்தமாகப் பதிய வழிவகை செய்கிறது சாம் சி.எஸ்ஸின் பின்னணி இசை. சமீபகாலமாக ஒவ்வொரு காட்சிக்கும் வெவ்வேறு இசைக்கோர்வைகளைக் கேட்ட சந்தர்ப்பங்கள் மிகக்குறைவு என்பதே அவருக்கான தனித்துவமாக மாறியிருக்கிறது.
பிரவீன் ஆண்டனியின் படத்தொகுப்பு காட்சிகளை நறுக்கென்று ‘கட்’ செய்து கிளைமேக்ஸை இறுக்கமானதாக மாற்றியிருக்கிறது. முன்பாதியில் அதே உழைப்பை அவர் கொட்டாத காரணத்தால், தேவையற்ற சில பிசிறுகள் திரையில் தென்படுகின்றன.
பிருந்தாவின் மாயாஜாலம்!
இப்படியொரு கதைக்கு ஹாரூண் போன்ற புதுமுகம் சரியா என்ற கேள்வியைக் கேட்க முடியாது. ஏனென்றால், அவரது இருப்புதான் இப்படத்தையே தமிழுக்குத் தந்திருக்கிறது. அதேநேரத்தில், அவரது நடிப்பும் குறை கூறும் அளவுக்குச் சாதாரணமானதாக இல்லை. கதாபாத்திரங்களின் முகத்தில் தப்பித்தே தீர வேண்டும் என்ற வேட்கை இல்லாததும், தப்பிக்கும் அளவுக்கு அச்சிறை ஒரு கொடூர வதைக்கூடமாக இருக்கிறதா என்ற கேள்விக்குப் பதில் தெரியாததும் திரைக்கதையைக் கொஞ்சம் பலவீனப்படுத்தியிருக்கிறது.
அவற்றைக் கடந்துவிட்டால், இரண்டு மணி நேரம் விறுவிறுப்பான ஆக்ஷன் படமொன்றைப் பார்த்த திருப்தியைத் தந்துவிடுகிறார் இயக்குனர் பிருந்தா.
ஏற்கனவே மலையாளத்தில் வெளியான ஒரு படத்தின் அப்பட்டமான தழுவல் என்பதால், புதிதாகக் காட்சிகள் எதுவும் இல்லை. அப்படத்தில் கிடைத்த புத்துணர்வு இதில் கிடைக்கவில்லை. அதேநேரத்தில், ஒரிஜினலில் இருந்த அதே தாக்கம் இதிலும் இருக்க வேண்டுமென்று இயக்குனர் பிருந்தா மெனக்கெட்டிருப்பதை ஒப்புக்கொள்ள வேண்டும்.
இறுதியாக ஒலிக்கும் பாடல் மட்டுமே அவருக்கான நடனத் திறமையைக் காட்டும் இடமாக அமைந்துள்ளது. மற்ற இடங்களெல்லாம் உணர்வுகளைப் பிரதிபலிப்பவை என்றுணர்ந்து, அவற்றை முன்னிறுத்த முயற்சித்திருக்கிறார்.
இதனை வழக்கமான மசாலா படம் என்றோ அல்லது முழுமையான கலைப்படம் என்றோ சொல்லிவிடவும் முடியாது. ஒரு சாதாரண ரசிகன் இப்படம் பார்க்கப் பெரிதாகக் காரணங்கள் இல்லை. அதேநேரத்தில், ஒரு புதிய களத்தைக் கண்ட திருப்தியை விரும்புபவர்களுக்கு பிருந்தா காட்டியிருப்பது ஒரு மாயஜால உலகம் தான். அவர்களுக்காகவே இப்படம் ஓடும் தியேட்டரில் டிக்கெட் கவுண்டர்கள் காத்திருக்கின்றன.
உதய் பாடகலிங்கம்
“பாஜகவின் அனைத்து சவால்களையும் எதிர்கொள்வோம்”: மல்லிகார்ஜூன கார்கே
ரூ.1000 : மு.க.ஸ்டாலின் மீது அதிமுக புகார்!