மலையாள சினிமாவில் இந்த வருடம் “பிரமயுகம்” திரைப்படம் அதிகளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராகுல் சதாசிவன் இயக்கத்தில் மம்முட்டி நடித்துள்ள ‘பிரமயுகம்’ திரைப்படமானது, மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் கறுப்பு-வெள்ளை படமாகவே பிப்ரவரி 15 அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தில் அர்ஜுன் அசோகன், சித்தார்த் பரதன், அமல்டாலிஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ராமச்சந்திர சக்கரவர்த்தி மற்றும் எஸ்.சஷிகாந்த் தயாரித்துள்ள இந்த படத்துக்கு கிறிஸ்டோ சேவியர் இசையமைத்துள்ளார்.
சமீபத்தில் ‘பிரமயுகம்’ படத்தின் டீசர் வெளியாகி கவனம் பெற்றது. நைட் ஷிப்ட் ஸ்டூடியோஸ் மற்றும் ஒய் நாட் ஸ்டூடியோஸ் இணைந்து தயாரித்துள்ள பிரமயுகம் படத்தின் டிரெய்லர் படக்குழுவால் நேற்று வெளியிடப்பட்டுள்ளது.
டிரெய்லர் எப்படி?
டிரெய்லர் முழுவதும் கருப்பு – வெள்ளையில் இருள்சூழ் காட்சிகளுடன் திரையில் விரிந்து வித்தியாச அனுபவத்தை வழங்கி பார்வையாளர்களை சீட் நுனிக்கு கொண்டு வருகிறது.
பதட்டம், பயம், விறுவிறுப்பு, குழப்பம் என நகரும் காட்சிகள் எதையும் கணிக்கவிடாமல் மம்மூட்டியின் தோற்றம் பார்வையாளர்களை கட்டிப்போடுகிறது.
“நீ ரெண்டு தடவ விதியோட விளையாட முடியும்னு நெனைக்கிறீயா?”, “இது பிரமயுகம் கலியுகத்தோட கோர முகம்” என்ற வசனங்கள் படம் முழுக்க மர்மத்தை உள்ளிடக்கியிருப்பதை உறுதி செய்கிறது. மம்மூட்டியின் புதிர் சிரிப்பு, ஒளிப்பதிவும், பின்னணி இசையும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.