கடந்த 4 ஆம் தேதி புஷ்பா படத்தின் பிரீமியர் ஷோ ஹைதரபாத் சந்தியா தியேட்டரில் திரையிடப்பட்டது. இந்த படத்தை பார்க்க நடிகர் அல்லு அர்ஜுன் வந்ததால், கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில், சிக்கிய ரேவதி என்ற பெண் இறந்து போனார். இவரின் மகன் ஸ்ரீதேஜ் என்ற 9 வயது சிறுவன் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தான். ஹைதரபாத்தில் உள்ள கே.ஐ.எம்.எஸ் மருத்துவமனையில் சிறுவனுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில், சிறுவன் மூளைச்சாவு அடைந்து விட்டதாக ஹைதராபாத் போலீஸ் கமிஷனர் சி.வி ஆனந்த் கூறியுள்ளார். மேலும், ‘கூட்ட நெரிசலில் சிக்கிய போது, அவனுக்கு போதிய ஆக்சிஜன் கிடைக்காததால் மூளை செயல் இழப்புக்கு காரணமாக சொல்லப்படுகிறது. எனினும், சிறுவனுக்கு வெண்டிலேட்டர் வழியாக சிகிச்சை தொடர்ந்து வருகிறது’ என்றும் கமிஷனர் தெரிவித்துள்ளார்.
தெலங்கானா மாநில சுகாதாரத்துறை செயலர் கிறிஸ்டினா , ‘சிறுவனின் உடல் நிலை முன்னேற்றமடைவதற்கான வாய்ப்புகள் குறித்து ஆராய்கிறோம்’ என்று தெரிவித்துள்ளார்.
சிறுவன் எளிதாக சுவாசிக்கும் வகையில் தொண்டை பகுதியில் ட்ரக்கியோஸ்டமி துளையிடப்பட்டுள்ளது. சிறுவனுக்கு காய்ச்சல் குறைந்துள்ளது. உணவுகள் நீராகாராகமாக கொடுக்கப்படுகிறது. உணவை எடுத்துக் கொள்வதில் எந்த பிரச்னையும் இல்லை என்று மருத்துவமனை தரப்பில் தெரிவித்துள்ளனர்.
இந்த விவகாரத்தில் அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டு ரூ. 50 ஆயிரம் ரூபாய் பிணையில் விடுவிக்கப்பட்டார். போலீசார் எச்சரிக்கையை மீறி அல்லு அர்ஜுன் சந்தியா தியேட்டருக்கு சென்றதுதான் கூட்ட நெரிசல் ஏற்பட காரணமாக இருந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும், அவருக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்யவும் நீதிமன்றத்தை அணுக ஹைதரபாத் போலீசார் முடிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
-எம்.குமரேசன்
ஈராக்கில் போப் பிரான்சிஸை கொல்ல முயன்ற வெடிகுண்டு பெண்; போப் எழுதிய ‘ஹோப்’ புத்தகத்தில் தகவல்!