விருமன் படத்தை தொடர்ந்து தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் அரதப்பழசாகிப் போன ஜாதிய வன்மங்களை, மோதல்களை திரைக்கதையாக்கி படங்களை இயக்கி வருபவர் முத்தையா.
ராமநாதபுரத்தை பின்புலமாக கொண்டு இராவண கோட்டம், கழுவேத்தி மூர்க்கன் இரண்டு படங்களும் ஜாதி – அரசியல் பேசியிருந்தன. இரண்டு படங்களும் வணிகரீதியாக தியேட்டர் வசூலில் வெற்றிபெறவில்லை.
இந்நிலையில் அதே மாவட்டத்தை கதைக்களமாக கொண்டு முத்தையா இயக்கத்தில் தயாராகி கடந்த 2ஆம் தேதி வெளிவந்துள்ள திரைப்படம் தான் காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம்.
கதாநாயகனாக ஆர்யா நடிக்க சித்தி இத்னானி கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் பிரபு, பாக்கியராஜ், ஆடுகளம் நரேன், விஜி சந்திரசேகர், இயக்குநர் தமிழ் உள்ளிட்ட பல நட்சத்திரங்களும் இப்படத்தில் நடித்திருந்தனர்.
ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படம் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் குழப்பமான திரைக்கதை, கதைக்குள் ஒரு கதை அதற்குள் ஒரு கதை என படம் இருப்பதாக பார்வையாளர்களாலும் விமர்சகர்களாலும் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.
மொத்தம் 14 ரீல்களை கொண்ட திரைப்படத்தில் 9 சண்டைக் காட்சிகள் இவை எல்லாம் படம் பார்க்க வந்தவர்களை இடைவேளையில் பார்த்தவரை போதும் என தியேட்டரைவிட்டு வெளியேற செய்கிறது என்கின்றனர் தியேட்டர் உரிமையாளர்கள் வட்டாரத்தில்.
இப்படத்தின் தமிழ்நாடு விநியோக உரிமையை எட்டு கோடி ரூபாய்க்கு அவுட்ரேட் முறையில் கேட்டு தயாரிப்பு தரப்பில் 12 கோடி ரூபாய் கொடுத்தால் வியாபாரத்தை முடிக்கலாம் எனக் கூறப்பட்டது. இறுதிவரை வியாபாரம் முடியாமல் ரெட் ஜெயண்ட் மூவீஸ் 4 கோடி ரூபாய் அட்வான்ஸ் கொடுத்து படத்தை தமிழ்நாட்டில் வெளியிட்டுள்ளனர்.
கடந்த மூன்று நாட்களில் காதர்பாட்சா என்கிற முத்துராமலிங்கம் 4.18 கோடி ரூபாய் மொத்த வசூல் செய்துள்ளது. இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பிற்கு இது மிகமிக குறைவான வசூல் என்கின்றனர் விநியோகஸ்தர்கள் வட்டாரத்தில்.
இராமானுஜம்
ஒடிசாவில் மீண்டும் அதிர்ச்சி: தடம் புரண்ட சரக்கு ரயில்!
வெயில் தாக்கம்: பள்ளிகள் திறப்பு தேதி மீண்டும் மாற்றம்!