மதுப்பிரியர்களின் மனதை அசைத்தால் நன்று!
’இருபது வருஷத்துக்கு முன்னால இவ்வளவு பேர் குடிச்சாங்களான்னு தெரியலை’, ‘முப்பது வருஷத்துக்கு முன்னால இவ்ளோ கடைகள் கிடையாது தெரியுமா’, ‘நாப்பது வருஷத்துக்கு முன்னால எல்லாம் குடிக்கறவனை கேவலமாதான் நினைப்பாங்க’, ‘பொடி போடுறது, போயிலை போடுறதையே மோசமான பழக்கங்களா நினைச்ச காலம் ஒண்ணு உண்டு’.
கடந்த நூற்றாண்டின் ஒவ்வொரு பத்தாண்டுகளிலும் இப்படிப் போதை குறித்த கருத்துகள் மாறி வந்திருப்பதைக் காண முடியும். Bottle Radha Movie Review
‘மது குடிக்காதவர்களின் எண்ணிக்கையை விரல் விட்டு எண்ணிவிடலாம்’ என்கிற நிலையை இன்று அது அடைந்திருக்கிறது.

இந்தச் சூழலில், குடியின் தீமைகளை விளக்குவதாகத் திரைப்படமொன்றை உருவாக்கினால் எடுபடுமா? இந்தக் கேள்விக்கு, ‘அது எத்தனை பேரைச் சென்றடையும் என்பதை விட, எத்தனை பேருக்கு அது தேவை என்பதே முக்கியமானது’ என்று பதிலளிக்கும் வகையில் அமைந்திருக்கிறது ‘பாட்டல் ராதா’ திரைப்படம்.
பா.ரஞ்சித் தயாரிப்பில், தினகரன் சிவலிங்கம் இயக்கியிருக்கிற இப்படத்தில் குரு சோமசுந்தரம், சஞ்சனா நடராஜன், ஜான் விஜய், லொள்ளு சபா மாறன், ஆண்டனி, பாரி இளவழகன், கருண பிரசாத், மாலதி அசோக் நவீன், சுஹாசினி சஞ்சீவ், சேகர் நாராயணன் உட்படப் பலர் நடித்துள்ளனர். ஷான் ரோல்டன் இதற்கு இசையமைத்திருக்கிறார்.
சரி, இப்படம் சுவாரஸ்யமான கதை சொல்லலைக் கொண்டிருக்கிறதா?
பாட்டலும் கையுமாய்..!
’மதுவில் ஊறிய வாழ்க்கை’ எனும்படியாக, ஒரு நாளின் பெரும்பொழுதுகளைப் போதையின் துணையோடு கடக்கிற மனிதன் ராதாமணி (குரு சோமசுந்தரம்). சென்னை ஆவடி அருகேயுள்ள ஒரு சிற்றூரில் வாழ்கிறார். மனைவி அஞ்சலம் (சஞ்சனா நடராஜன்), ஒரு மகன், ஒரு மகள் என்று மூன்று பேர் அவரை நம்பி வாழ்ந்து வருகின்றனர்.
ஆனால், அது பற்றிய நினைவுகளை மறக்கிற அளவுக்குத் தினமும் மதுவில் திளைக்கிறார் ராதா. சுருக்கமாகச் சொன்னால் எந்நேரமும் ‘பாட்டலும் கையுமாய்’ திரிகிறார். ‘பாட்டல்’ என்று அக்கம்பக்கத்தினரால் அழைக்கப்படும் அளவுக்கு அவரது நிலை மாறுகிறது.
அதனால், உடன் பிறந்த சகோதரரின் (ஆண்டனி) மேற்பார்வையில் நடந்துவரும் கட்டடப் பணியில் அவரால் ஒழுங்காகப் பங்கேற்க முடிவதில்லை. இத்தனைக்கும் ’டைல்ஸ் பதிப்பதில் ராதாவைப் போல் யாருமில்லை’ என்ற பெயர் அந்த வட்டாரத்தில் அவருக்குண்டு.
வேலையில் ஒழுங்காக ஈடுபடுவதில்லை. மேஸ்திரியாக இருக்கும் சகோதரனின் மச்சான் உடன் ‘ஈகோ’ மோதல். பணி நடக்குமிடத்தில் இருக்கும் பொருட்களைத் திருடி விற்றுக் குடிக்கிற அளவுக்குப் போதை மீதான ஈர்ப்பு. இப்படிப் பல குற்றச்சாட்டுகளைக் குடும்பத்தினரிடம் மட்டுமல்லாமல் தெருவில் வசிப்பவர்கள், சுற்றத்தினரிடமும் பெற்று, பல அனாவசியச் சண்டைகளுக்குக் காரணமாகிறார் ராதா.

ஒருநாள் காவல்நிலையம் வரை பிரச்சனை செல்ல, ’ஸ்டோர் ரூம்மை க்ளீன் பண்ணச் சொல்லுங்க’ என்கிறார் இன்ஸ்பெக்டர். அப்போது, சோதனையில் கைப்பற்றப்பட்டு சீல் வைக்கப்பட்டிருந்த மது பாட்டில்களை பிரித்துக் குடித்துவிடுகிறார் ராதா. அப்புறமென்ன, அடுத்த சில மணி நேரத்தில் அங்கிருப்பவர்களின் அனைத்து அர்ச்சனைகளையும் ஏந்திக் கொள்கிறார் அஞ்சலம்.
’இந்த மனுஷன் குடியை நிறுத்த மாட்டாரா’ எனும் பல்லாண்டு கால விருப்பம் ஆதங்கமாகி ஆத்திரமாக மாறும் நிலையை எட்டுகிறது. அது, பாட்டல் ராதாவை ஒரு போதை மறுவாழ்வு மையத்திற்குக் கொண்டுபோய்விடும் அளவுக்குச் செல்கிறது.
புத்தா போதை மறுவாழ்வு மையத்தை நடத்தி வரும் அசோகன் (ஜான் விஜய்), அங்கு வரும் ஒவ்வொருவரையும் மது நோயாளியாக நடத்துகிறார். அவர்கள் மனம் மாறி, மது போதையை நாடாமல் குடும்பத்தோடு நல்வாழ்வு வாழ வேண்டுமென்று சில காரியங்களைச் செய்கிறார். ஆனால், அந்த இடமே பாட்டல் ராதாவுக்கு நரகமாகத் தெரிகிறது.
அதன்பிறகு அவர் என்ன செய்தார்? மது போதையைக் கைவிடத் துணிந்தாரா? தனது குடும்பத்தோடு மகிழ்ச்சிகரமாக வாழ்ந்தாரா என்று சொல்கிறது இப்படத்தின் மீதி.
இந்த திரைப்படத்தைக் காண மேற்சொன்ன விளக்கமே போதுமானது. பின்வரும் கருத்துகள் ‘ஸ்பாய்லர் ரகம்’ என்பதால், ‘அது தேவையில்லையே’ என்பவர்கள் இதோடு நிறுத்திக் கொள்ளலாம்.
தேவையான கருத்து!
மதுவே கதி என்றிருக்கும்போதும், அதன் வாசனை கூட இல்லாமல் போதை மறுவாழ்வு மையத்தில் அடைக்கப்பட்டிருக்கும்போதும், மது குறித்த நினைவுகளைக் கைவிட முடியாமல் தன்னைத்தானே நொந்துகொள்ளும்போதும், மீண்டும் மதுவை நாடிச் செல்லும்போதும், தனது உடல்மொழியில் நாயகன் குரு சோமசுந்தரம் காட்டுகிற வேறுபாடுகள் ‘அடிபொலி’ ரகம்.
’ஃபேஜ் 3’யில் வரும் அளவிலான பார்ட்டி கொண்டாட்ட வாழ்க்கைமுறையைத் திரையில் பிரதிபலிக்கிறவராய் வந்த சஞ்சனா, இதில் சமூகத்தின் அடித்தட்டில் வாழ்கிற ஒரு பெண்ணாகத் தோன்றியிருக்கிறார். படம் முழுக்க வெளிப்படுத்தியிருக்கிற பாவனைகளின் ஒரு துளியாக, இதன் கிளைமேக்ஸ் ஷாட்டில் அமைந்திருக்கிறது அவரது நடிப்பு.

பா.ரஞ்சித்தின் இயக்கத்தில் மட்டுமல்லாமல் அவர் தயாரிக்கும் படங்களிலும் நல்ல பாத்திரங்களை ஏற்று வருகிறார் ஜான் விஜய். இதிலும் அவருக்கு ஒரு வித்தியாசமான பாத்திரம்.
குரு சோமசுந்தரத்தின் சகோதரராக வரும் ஆண்டனி, சகோதரியாக வரும் சுஹாசினி சஞ்சீவ், போதை மறுவாழ்வு மையத்தில் காட்டப்படும் லொள்ளுசபா மாறன், அபி ராமையா, மாலதி அசோக் நவீன், கருணபிரசாத், சேகர் நாராயணன் என்று இப்படத்தில் ஒவ்வொருவரும் பல கலைஞர்கள் நம்மை வசீகரிக்கின்றனர். பாகுபலி எனும் பாத்திரத்தில் வருபவரையும் இப்பட்டியலில் சேர்த்தாக வேண்டும்.
‘ஜமா’ படத்தின் நாயகனும் இயக்குனருமான பாரி இளவழகன், இப்படத்தில் நாயகனின் மது போதை நண்பர்களில் ஒருவராக வருகிறார். இது போன்று இப்படத்தில் பாராட்டுக்குரிய விஷயங்கள் பல இருக்கின்றன.
இப்படத்தின் ‘காஸ்ட்டிங்க்’கை கவனமாகத் தேர்ந்தெடுத்து ஆக்கியது போன்று இதர தொழில்நுட்பங்களிலும் பெருங்கவனம் செலுத்தப்பட்டிருக்கிறது.
’தண்ணி தொட்டி தேடி வந்த கன்னுக்குட்டி நான்’ எனும் ‘சிந்துபைரவி’ பாடல் பின்னணியில் ஒலிக்க, ஆவடி பகுதியைப் பறவைப் பார்வையில் காண்பிக்கும் ஷாட்டில் இருந்து திரைக்கதை தொடங்குகிறது. அது, ’பெரும்பாலான சமூகம் மதுவில் ஆழ்ந்திருப்பதாகச் சொல்கிறதோ’ என்று எண்ண வைக்கிறது.
ஒளிப்பதிவைப் பொறுத்தவரை, ரூபேஷ் ஷாஜியின் கேமிரா சந்துபொந்துகளிலெல்லாம் பயணித்திருக்கிறது. ‘கேமிரா வைக்கிற அளவுக்கு க்ளீனா இல்லையே’ என்று தயங்குகிற இடங்களிலும் படம்பிடித்திருப்பது, திரைக்கதையோடு பார்வையாளரை ஒன்ற வைக்கிற உத்திகளில் ஒன்று.
ராஜராஜின் கலை வடிவமைப்புக்கு அதில் பெரிய பங்குண்டு. ட்ரெய்லரில் அவரது பெயர் ஏன் குறிப்பிடப்படவில்லை என்பது படக்குழுவினருக்கே வெளிச்சம்.
சங்கத்தமிழனின் படத்தொகுப்பானது, தரையில் சிந்திய மது மண்ணில் ஊறித் தனது எல்லையை விரிப்பது போன்று திரையில் கதை சொல்ல உதவியிருக்கிறது. காட்சி எந்த இடத்தில் முடிகிறது, தொடங்குகிறது என்று உணர்வதற்கு வழி இல்லாமல் செய்திருக்கிறது.
இப்படியொரு படத்தில் ஒலி வடிவமைப்புக்குப் பெரும் பங்கு இருக்க வேண்டும். சுரேன் – அழகியகூத்தன் கூட்டணியானது வசனம், இசை, பின்னணி ஒலிகள் இடம்பெறுகிற விகிதத்தைச் செம்மையாக அமைத்திருக்கிறது.
இது போக ஒப்பனை, ஆடை வடிவமைப்பு உட்படச் சில நுட்பங்கள் சிலாகிக்கிற அளவில் இருக்கின்றன.
இசையமைப்பாளர் ஷான் ரோல்டன், இப்படத்தில் தனது பங்கு என்ன என்று உணர்ந்து செயலாற்றி இருக்கிறார்.

’என் வானம் நீ’ எளிதாக மனதோடு ஒட்டிக்கொள்ளும் மெலடி; ஆனால், அது ‘கபாலி’யில் வரும் ‘மாயநதி’யை நினைவூட்டுகிறது. ’யோவ் பாட்டிலு’ பாடல் ஒரு அக்மார்க் ‘டாஸ்மாக் பார்’ பாடல். ’நா குடிகாரன் நானா குடிகாரன்’, ‘தண்ணியில கிறுக்கு’, ’கண்களின் ஈரம்’ பாடல்களும் சட்டென்று ஈர்க்கும் ரகத்தில் இருக்கின்றன.
வாழ்வில் தீராத சோகத்தைக் காட்டுவதிலும், ‘விடியல் வராதா’ என்ற ஏக்கத்தைச் சொல்வதிலும், நடித்தவர்களின் பங்களிப்பை அடிக்கோடிட்டிருக்கிறது ஷான் ரோல்டனின் பின்னணி இசை.
ஒரு திரைப்படமாக இக்கதையை ஆக்க, பலரது உழைப்பை ஒருங்கிணைக்க, இயக்குனர் தினகரன் சிவலிங்கம் கடுமையான உழைப்பையும் நேரத்தையும் செலவிட்டிருப்பார். அனைத்தும் நிறைவுற்றபிறகும் கூட அவர் இதன் வெளியீட்டிற்காகக் காத்திருந்திருக்கிறார்.
இப்படம் கடந்த ஆண்டு ஏப்ரல் 12ஆம் தேதியே தணிக்கைச் சான்றிதழ் பெற்றிருப்பது அதனை உணர்த்துகிறது.
‘மதுபானக்கூடம்’ உட்படச் சில படங்கள் மதுவின் தீமையை உணர்த்துகிற வகையில் தமிழில் ஏற்கனவே வெளியாகியிருக்கின்றன. ஏன், அறுபதுகளில் கூட சிவாஜி அத்தகைய மதுப்பிரியராகத் திரையில் தோன்றி ‘மது மனிதனுக்குத் தேவையில்லை’ என்று உணர்த்தியிருக்கிறார். எம்ஜிஆரின் எத்தனையோ படங்கள் அதனை நீதியாகப் புகட்டியிருக்கின்றன.
அந்த வரிசையில் இதனைச் சேர்க்கலாமா என்றால் ‘வேண்டாம்’ என்றுதான் சொல்ல வேண்டும். ஏனென்றால், ’தினமும் மதுவில் திளைக்கிற ஒருவர் இப்படத்தைப் பார்த்தால் மனம் திருந்திவிட மாட்டார்களா’ என்கிற ஆதங்கத்தை முன்வைக்கிறது ‘பாட்டல் ராதா’. அது நிகழுமா என்றால் ‘வாய்ப்பிருக்கிறது’ என்றே சொல்லத் தோன்றுகிறது.
மலையாளத்தில் டொவினோ தாமஸ் நடிப்பில் ‘தீவண்டி’ என்றொரு படம் வந்தது. சிகரெட் பிடிப்பதைக் கைவிட முடியாமல் தவிக்கும் இளைஞனின் தகிப்பை அப்படம் சொன்னது. அதனைப் பார்க்கும் ஒருவர் சிகரெட் தனது கையைச் சுடுவதாக உணர்வார்.

அது போலவே, ‘மதுப்பிரியர்களின் மனதை அசைத்தால் நன்று’ என்ற எண்ணத்தில் உருவாக்கப்பட்டிருக்கிற இப்படம் மதுப்பிரியர்களால் வாடும் அவர்களது குடும்பத்தினர், சுற்றத்தினர், சமூகத்தின் ஏக்கக்குரலாக அமைந்துள்ளது.
இந்தப் படம் தமிழ் மட்டுமல்லாமல் மலையாளத்திலும் தயாரிக்கப்பட்டிருப்பதாகச் சொல்கிறது விக்கிபீடியா. Bottle Radha Movie Review
’அதற்குப் பதிலாக மலையாளத்தில் தயாரித்து தமிழில் டப் செய்திருந்தால் அதிக வரவேற்பு கிடைத்திருக்கும்’ என்று சொல்கிற நிலை ஏற்படாத அளவுக்கு நல்லதொரு வெற்றியை ’பாட்டல் ராதா’ திரைப்படம் பெற வேண்டும். அதற்கேற்ற உள்ளடக்கம் இதில் உள்ளது என்று நிச்சயமாகச் சொல்ல முடியும். அதனால், இதில் இருக்கிற குறைகளைப் பிற்பாடு பேசிக் கொள்ளலாம்!