bose venkat and vemal sir movie review!

சார் : விமர்சனம்!

’மெசேஜ் இருக்கு.. ஆனா..’!?

’எல்லாமே நல்லாயிருக்கு, ஆனா ஏதோ ஒண்ணு குறையுது’ என்பது போன்ற வார்த்தைகளைத் திரையுலகில் நிறையவே காண முடியும். அதுவும் புதிதாக வந்த திரைப்படத்தைப் பார்த்துவிட்டு இயக்குனர் வாய்ப்பைப் பெறப் போராடுபவர்கள் நடத்தும் விவாதங்களில் தவறாமல் கேட்க முடியும்.

அதற்கான உதாரணங்களாக, அவ்வப்போது சில படங்கள் வெளியாகும். படத்தை உருவாக்குவதன் பின்னிருக்கும் நோக்கமும், அதற்குச் செலுத்தப்பட்ட உழைப்பும் செம்மையாக இருந்தும், அவற்றை மீறி அப்படைப்புகள் அப்படியொரு நிலையை அடையும்.

’சார்’ திரைப்படத்திற்கும் மேற்சொன்னவற்றுக்கும் என்ன சம்பந்தம் என்று யோசிக்கிறீர்களா? நிச்சயமாகச் சம்பந்தம் இருக்கிறது.

கல்வியின் அவசியம்!

ராமநாதபுரம் அருகேயுள்ள மாங்கொல்லை எனும் கிராமம். 1950, 1960, 1980ஆம் ஆண்டுகளில் அங்கு நடக்கும் நிகழ்வுகளாக, இக்கதை வடிக்கப்பட்டுள்ளது.

மாங்கொல்லையில் ஒரு அரசு நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. அங்கு பொன்னரசன் (சரவணன்) தலைமையாசிரியராக இருந்து வருகிறார்.

அவரது தந்தை அண்ணாதுரை உருவாக்கிய பள்ளி அது. ஆரம்பப்பள்ளியாக இருந்த அதனை, பொன்னரசன் நடுநிலைப்பள்ளியாக மாற்றப் பெரும்பாடு பட்டிருக்கிறார்.

அதனை மேல்நிலைப்பள்ளியாக ஆக்க வேண்டும் என்பது பொன்னரசனின் கனவு. அதனை நனவாக்குவதற்குள், அவர் ஓய்வு பெறும் வயதை அடைகிறார்.

தனக்குப் பின்னால் வரும் அரசு ஆசிரியருக்கு அந்த கனவு இருக்குமோ இருக்காதோ என்ற எண்ணத்தில், தனது மகன் சிவஞானத்தை (விமல்) அப்பள்ளிக்கு ஆசிரியராக மாற்றலாகி வரச் செய்கிறார். வேறு யாரேனும் வந்தால், பள்ளியின் செயல்பாடே பாதிக்கும் என்று பயப்படுகிறார்.

பொன்னரசன் இப்படி எண்ணும் அளவுக்கு என்ன ஆபத்து?

அதற்குப் பதிலளிக்கும் வகையில், அந்த ஊரில் கோலுச்சியார் (விஐச ஜெயபாலன்) குடும்பம் இருந்து வருகிறது. ஒடுக்கப்பட்ட சமூகத்தினர் கல்வி கற்றால் தங்களுக்குச் சமமான இடத்தைக் கேட்பார்கள் என்பது அவரது எண்ணம். அது, அவரது உறவினர்களிடத்திலும் இருக்கிறது.

பேட்டை சாமி உலா வரும் இடம் என்று கூறி, பள்ளி கட்ட இடம் கேட்டபோது மறுத்தவர் கோலுச்சியார். ஆனால், அவரது சகோதரரிடம் (கஜராஜ்) நிலம் வாங்கி அத்தடையைத் தகர்க்கிறார் சிவஞானத்தின் தாத்தா அண்ணாதுரை.

ஆனால், சில ஆண்டுகள் கழித்து அண்ணாதுரைக்குப் புத்தி பேதலித்துவிட்டதாகக் கதைகள் கட்டி விடுகின்றனர் கோலுச்சியாரின் ஆட்கள். அதன் தொடர்ச்சியாக, அவரும் மனநிலை பாதித்தவராக வாழ்ந்து மரணமடைகிறார்.
அண்ணாதுரையை அந்த நிலைக்கு ஆளாக்கியவர் யார் என்று பொன்னரசனுக்கும் தெரியவில்லை (திரைக்கதையில் சொல்லப்படவில்லை.

அதன்பிறகு, பொன்னரசன் அந்தப் பள்ளியை வளர்த்து வரும் போதும் அக்குடும்பத்தினர் இடையூறுகள் செய்கின்றனர். இந்த நிலையிலேயே, அந்தக் குடும்பத்தின் மூன்றாவது தலைமுறையான சக்தி (சிராஜ்) அவ்வூரில் செல்வாக்குடன் திகழ்கிறார்.

சிறு வயது நண்பன் என்பதால், சக்தியோடு நெருங்கிப் பழகுகிறார் பொன்னரசன். பள்ளிக்கு மாற்றலாகி வந்தபிறகும் அது தொடர்கிறது.

நிறையவே சோம்பேறித்தனம் கொண்ட சிவஞானம், பெரிதாக ஆர்வம் இல்லாமல் ஆசிரியர் பணியைச் செய்து வருகிறார். அது பொன்னரசனை உறுத்துகிறது.

ஒருநாள், ‘நீ உண்மையான ஆசிரியராகப் பணியாற்றுகிறாயா’ என்று அவரிடம் கேட்கிறார் பொன்னரசன். அதன்பிறகு, சிவஞானத்தின் செயல்பாட்டில் மாற்றம் தென்படுகிறது.

தந்தையின் மேல்நிலைப் பள்ளி கனவை நனவாக்கும் பணிகளில் அவர் ஈடுபட்டு வருகிறார். உடன் வேலை செய்யும் ஆசிரியை வள்ளி (சாயா தேவி) அவருக்குத் துணையாகச் செயல்படத் தொடங்குகிறார்.

இந்த நிலையில், தோட்டத்தில் உழவு ஏரின் மீது விழுந்து பொன்னரசன் தலையில் அடிபடுகிறது. மருத்துவமனையில் சிகிச்சையளிக்கும் மருத்துவர், அவர் நினைவுகளை முற்றிலுமாக இழந்துவிட்டதாகச் சொல்கிறார். பள்ளியைத் தவிர வேறெதுவும் அவருக்கு நினைவில் இல்லை.

’பைத்தியம்’ என்று தாத்தாவைச் சிறு வயதில் சொன்ன சிறுவர்களைப் பார்த்து ஆத்திரமுற்றவர் சிவஞானம். அவருக்குத் தந்தையின் நிலை கவலையைத் தருகிறது.

அதனூடே, அவர் தனது பள்ளியில் செவ்வனே பணி செய்யத் தொடங்குகிறார். அதே நேரத்தில், சிவஞானத்தின் மீதும் பைத்தியம் என்ற முத்திரையை குத்தச் சிலர் சதி செய்கின்றனர். அவர்கள் யார்? ஏன் அவ்வாறு செய்கின்றனர் என்ற கேள்விகளுக்குப் பதிலளிக்கிறது இப்படத்தின் மீதி.

ஒரு மனிதனுக்குக் கல்வி அவசியம் என்று சொல்கிறது ‘சார்’ திரைப்படம். கடந்த காலத்தில் எப்படிப்பட்ட தடைகளைக் கடந்து, தமிழகம் முழுவதும் பல ஊர்களில் பள்ளிகள் செயல்பட்டன, வளர்ந்தன என்று சொல்லத் துடித்திருக்கிறார்.

ஆனால், ‘மெசேஜ் இருக்கு.. ஆனா..’ என்று இழுக்கும் நிலையில் இதன் திரைக்கதையை அமைத்திருக்கிறார். அதுதான் இப்படத்தின் பலவீனம்.

எங்கு நிகழ்ந்தது தவறு?

நடிகர் போஸ் வெங்கட் இப்படத்தின் கதை, திரைக்கதையை எழுதி இயக்கியிருக்கிறார். சுகுணா திவாகர் இதற்கு வசனம் எழுதியிருக்கிறார்.

’வாகை சூட வா’ பாணியில் கல்வியின் அவசியம் பேசுகிற ஒரு கதை. அதனைக் காட்சிகளாக மாற்றுகிற இடத்தில் தவறு நிகழ்ந்திருக்கிறது என்று கூடச் சொல்ல முடியவில்லை.

ஆனால், கதையில் எந்த இடத்திற்கு முக்கியத்துவம் தர வேண்டும், எதனைத் தாண்டிச் செல்ல வேண்டும் என்பதில் போஸ் வெங்கட் தடுமாறியிருக்கிறார் என்று மட்டும் உறுதியாக சொல்ல முடியும்.

இந்தக் கதையின் பொன்னரசன் – சிவஞானம் பாத்திரங்களுக்கு இடையிலான முரண், எண்ணவோட்டத்தில் இருக்கும் வேறுபாடு தான் கதையின் மையம். அதனை இயக்குனர் திரையில் அடிக்கோடிட்டுக் காட்டவே இல்லை.

போலவே, கோலுச்சியார் குடும்பம் குறித்த பொன்னரசனின் தனிப்பட்ட விமர்சனங்கள் ஒரு காட்சியில் கூட இல்லை.
ஊராட்சி மன்றத் தலைவர் ஒருவர் (விஜய் முருகன்) பள்ளிக் கட்டடத்தை இடிக்க முயற்சிக்க, அவரைத் தனது வார்த்தைகளால் ஒவ்வொரு முறையும் பொன்னரசன் தடுத்து நிறுத்துவதாகக் காட்சிகள் இருக்கின்றன. அவரைப் பற்றியும் இதில் குறிப்புகள் இல்லை.

தாத்தாவையும் தந்தையையும் மனநலம் குன்றியவர்களாகப் பார்த்தபிறகு, சிவஞானம் மனதுக்குள் ‘தானும் இப்படி ஆகிவிடுவோமோ’ என்கிற பயம் வருகிறது. அதுவும் காட்சிரீதியில் சொல்லப்படவில்லை.

அனைத்துக்கும் மேலே, வள்ளியை விரும்புவதாகத் தந்தையிடம் சொல்கிறார் சிவஞானம். அப்போது, ‘நீ ஆசிரியராக ஒழுங்காகப் பணியாற்றுகிறாயா’ என்று வகுப்பெடுக்கிறார் பொன்னரசன். அப்போது, ‘இதை எதுக்கு சம்பந்தமில்லாமச் சொல்றாரு? ஆசிரியரா இருந்தா காதலிக்கக் கூடாதா, கல்யாணம் பண்ணக் கூடாதா’ என்கிற எண்ணமே தோன்றுகிறது.

படத்தொகுப்பாளர் ஸ்ரீஜித் சாரங்கின் பங்களிப்பு கூட இந்த குழப்பத்தைத் தீர்க்க உதவவில்லை.

உண்மையைச் சொன்னால், இதே கதையைக் கலைத்துப் போடப்பட்ட சீட்டுக்கட்டு போலத் திரையில் ‘நான் லீனியர்’ முறையில் சுவாரஸ்யமாகச் சொல்லியிருக்க முடியும். ஏனோ படத்தொகுப்பாளரும் அதனைச் செய்ய முற்படவில்லை.
சுமார் பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டிருக்கும் இப்படத்திற்குத் தன் வண்ணமயமான ஒளிப்பதிவு மூலம் உயிரூட்டியிருக்கிறார் இனியன் ஜே ஹரிஷ். அதேநேரத்தில், அதிகாலை 4 மணிக்கு ஊர்க்குளத்தில் நாயகி குளிப்பதை அழகியலுடன் காட்டியிருப்பது, ‘லாஜிக் கட்டுப்பாடுகள்’ குறித்துக் கொஞ்சம் கூட யோசிக்கவில்லை என்பதை உணர்த்துகிறது.

நாற்பத்தைந்து ஆண்டுகளுக்கு முந்தைய கதை என்று நம்பும்படியாக, இதில் கலை வடிவமைப்பைக் கையாண்டிருக்கிறார் பாரதி புத்தர்.

சித்துகுமாரின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். முதல் பாதியில் பின்னணி இசை அருமை. என்ன, இரண்டாம் பாதிதான் ‘எதனைக் கவனிப்பது’ என்ற தடுமாற்றத்தில் நம்மைத் தள்ளுகிறது. நடிப்பைப் பொறுத்தவரை, எண்பதுகளில் வந்த படத்தைப் பார்த்த எபெக்டை தருகிறது ‘சார்’.

’பாக்யராஜ் மாதிரி நடிச்சா போதுமா’ என்கிற தொனியிலேயே பாதிக் காட்சிகளில் வந்து போயிருக்கிறார் விமல்.
நாயகியாக வரும் சாயா தேவி தனது மேக்கப்பைக் குறைத்திருக்கலாம். திரையில் வரும் ஷாட்களில் எல்லாம் வசனம் பேசிக்கொண்டும், பாவனைகளை வெளிப்படுத்திக் கொண்டும் இருக்கிறார். ‘மூச்சுவிடுவதற்கான இடத்தை’ இப்படத்தில் இயக்குனர் அவருக்கு அளிக்கவே இல்லை.

இவர்கள் தவிர்த்து சரவணன், ரமா, சரவண ஷக்தி, இதர ஆசிரியர்களாக வருபவர்கள், விஐச ஜெயபாலன், அவரது பேரனாக வரும் சிராஜ், அவர்களது நண்பர்கள், உறவினர்களாக வருபவர்கள் என்று பலர் இப்படத்தில் வந்து போயிருக்கின்றனர்.

இதில் விமலுக்கு டீ வாங்கித் தரும் மாணவராக ஒரு சிறுவன் நடித்திருக்கிறார். அவர் வருமிடங்கள் கவனிக்க வைக்கின்றன.

’கன்னிமாடம்’ படத்திற்குப் பிறகு இரண்டாவதாக ‘சார்’ இயக்கியிருக்கிறார் போஸ் வெங்கட்.

மிகச்சில காட்சிகளில் நடிகர்களிடம் அவர் நடிப்பை வாங்கியிருக்கும் விதம், காட்சிப்படுத்தியிருக்கும் விதம் ‘ஆஹா’ என்றிருக்கின்றன.

திராவிடக் கழகத்தின் சிந்தனைகளை வசனங்களில் சொல்லும் முயற்சியையும் கைக்கொண்டிருக்கிறார். பெரியாரின் தோற்றத்தை நினைவூட்டும் ஷாட்கள், அண்ணாதுரை என்கிற பெயர், நாயகனுக்கு மா.பொ.சி என்ற பெயர் சுருக்கம் என்று இப்படத்திற்கு இன்னொரு வண்ணம் தர முயன்றிருக்கிறார்.

எல்லாமே சரி தான். ஆனால், ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் ‘க்ளிஷேக்களின் உச்சம்’ என்றளவிலேயே இருக்கிறது ‘சார்’. ஒருவேளை இதன் திரைக்கதையை இன்னொருவர் எழுதியிருந்தால் இந்தக் குறை தவிர்க்கப்பட்டிருக்கலாம்.

’மெசேஜ்’ சொல்கிற படங்களைத் தந்துள்ள போஸ் வெங்கட், அடுத்த படைப்பை அவருக்கு மிகவும் பிடித்த இயக்குனரான சுந்தர்.சியின் ‘கலகலப்பு’ போன்ற ஒரு கமர்ஷியல் படமாகத் தர வேண்டும். அதற்கு உண்டான கூறுகள் இந்தப் படத்தில் ஆங்காங்கே ஒளிந்திருக்கின்றன. அதைத் தவிர வேறெதுவும் சொல்வதற்கில்லை..!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

உதயசங்கரன் பாடகலிங்கம்

”உண்மை நிலவரம் தெரிந்து பேசுங்க” : ஆளுநருக்கு ப.சிதம்பரம் அட்வைஸ்!

தீபாவளிக்கு மறுநாள் அரசு விடுமுறை! – தமிழ்நாடு அரசு உறுதி செய்தது!

[latest_youtube_video channel="UCgFSoS8vu0ONak4z5OBORHw" width="100%" height="450"]

Similar Posts