பொம்மை: விமர்சனம்!

Published On:

| By Selvam

ஒரு படம் ஒன்றுக்கு மேற்பட்ட வகைமையில் அமைந்தாலும், அதற்கான நியாயங்களைத் திரைக்கதையில் பொதித்து வைத்தால் போதும். அதுவே திரையில் இருந்து நம் பார்வையை விலக்கிவிடாமல் ஒன்றச் செய்துவிடும். ஆனால் எந்த வகைமையில் இதனைச் சேர்ப்பது என்று குழம்பும் வகையில் காட்சியாக்கம் அமைந்துவிடக் கூடாது. எஸ்.ஜே.சூர்யா, பிரியா பவானிசங்கர் நடிப்பில், யுவன்சங்கர் ராஜா இசையில், ராதாமோகன் இயக்கியுள்ள ‘பொம்மை’ படமும் அப்படியொரு சிக்கலுக்கு ஆளாகியிருக்கிறது.

பேண்டஸியான, த்ரில் ஊட்டுகிற ஒரு முழுமையான ரொமான்ஸ் படமாக அமைய வேண்டியது தனது பாதையில் இருந்து தடம் புரண்டுள்ளது.

பொம்மையைக் காதலிப்பவன்!

ராஜ்குமார் (எஸ்.ஜே.சூர்யா) ஒரு அற்புதமான ஓவியர். துணிக்கடைகளில் அலங்காரமாக வைக்கப்படும் பொம்மைகளுக்கு கண்கள், உதடுகளை தத்ரூபமாக வரைந்து உண்மையான மனிதர்தானோ என்று எண்ண வைப்பவர். ஆனால், அவரது வாழ்க்கை எந்தச் சுவையுமின்றி நகர்கிறது. அவர் மன பாதிப்புகளைச் சரி செய்யும் மருந்துகளை உட்கொண்டு வருகிறார்.

பொம்மைகளுக்குத் தன் கலையால் உயிர் கொடுக்கும் அந்தக் கலைஞன், சிறிதே சேதமுற்ற ஒரு பொம்மையைக் கண்டதும் மனம் மாறுகிறார். அதனைக் காதலிக்கத் தொடங்குகிறார். காரணம், சிறுவயதில் அவரோடு நெருங்கிப் பழகி பின்னர் காணாமல்போன தோழி நந்தினியை நினைவூட்டுகிறது அந்தப் பொம்மை. அதன் தாடையில் இருக்கும் சேதாரம் நந்தினியின் மச்சத்தைப் போலிருக்கிறது.

ஒருகட்டத்தில் அந்த பொம்மையை ராஜ்குமார் பிரிய நேர்கிறது. அதனால், அதற்குக் காரணமானவர்களைக் கொலை செய்யும் அளவுக்குச் செல்கிறார். அவர் போலீசின் பிடியில் சிக்கினாரா? ஒரு பொம்மையைத் தான் காதலிக்கிறோம் என்பதை உணர்ந்தாரா என்பதுடன் முடிவடைகிறது ‘பொம்மை’.

சாதாரண மனிதர்கள் எவரும் பொம்மையைப் பார்த்துக் காதல்வயப்பட மாட்டார்கள். அது நிகழ்ந்தால், அவர்களது மனநலம் நிச்சயம் சோதிக்கப்பட வேண்டியது. இந்தக் கதையில் நாயகன் இப்படிப்பட்டவர்தான் என்பதை முதலிலேயே தெளிவுபடுத்திவிடுகிறார் இயக்குனர் ராதாமோகன். பிளாஷ்பேக்கில் அதற்கான காரணத்தையும் உடைத்துவிடுகிறார். ஆனால், அதன்பிறகும் எந்தத் திருப்பமும் இல்லாமல் திரைக்கதை பயணிப்பதுதான் நம்மைச் சோர்வுக்கு உள்ளாக்குகிறது.

அந்த ஒரு காட்சி!

‘பொம்மை’ படம் முழுக்கக் காதலே நிரம்பியுள்ளது. கிளைமேக்ஸை நெருங்கும்போது அது வசனங்களில் வெளிப்படுகிறது என்றாலும், தொடக்கத்திலேயே நம்மால் அதனைப் புரிந்துகொள்ள முடிகிறது. அதற்கேற்றவாறு நந்தினியாக வரும் பிரியா பவானிசங்கர், ராஜ்குமாராக வரும் எஸ்.ஜே.சூர்யா இடையிலான காட்சிகள் அமைந்துள்ளன. ஒருவரையொருவர் நன்கு புரிந்துகொண்ட ஒரு ஆணும் பெண்ணும் பேசிப் பேசி காதல் வளர்ப்பது போல அவை வார்க்கப்பட்டுள்ளன.

ஆனால், பிரச்சனையே அங்குதான் இருக்கிறது. ராஜ்குமார் என்ற பாத்திரம் கற்பனை செய்யும் உலகமும் யதார்த்தமும் வேறு வேறு என்பதைச் சொல்லும்விதமாகத் திரைக்கதை நகரவில்லை.

ராஜ்குமாரின் நண்பராக வரும் உதவி இயக்குனரைத் தவிர, அவர் சம்பந்தப்பட்ட வேறெவரும் திரையில் காட்டப்படவில்லை. நந்தினி உயிரோடு இருக்கிறாரா இல்லையா என்பதுவோ, அவரது குடும்பத்தினரோ சொல்லப்படவில்லை. குறைந்தபட்சமாக ராஜ்குமாரைச் சுற்றியிருப்பவர்கள் அவரை எப்படி நோக்குகின்றனர் என்பதுவும் கூடக் கதையில் விவரிக்கப்படவில்லை. அதனைச் சுட்டியிருந்தால் மட்டுமே, ராஜ்குமாரின் மனப்பிறழ்வு எத்தகையது என்பதை முழுமையாகப் புரிந்துகொள்ள முடியும்.

அது போன்ற திருப்பங்களுக்கு ஏதுவான சூழல்களைப் புறந்தள்ளியிருப்பது ரொம்பவே நேர்க்கோடான திரைக்கதையை எதிர்கொள்ள வைக்கிறது. வெறுமையாகத் திரிந்த நாயகனின் முகமலர்ச்சியை மட்டுமே வைத்துக்கொண்டு எவ்வளவு நேரம்தான் நாம் பொறுமை காப்பது?

வழக்கமாக, ராதாமோகன் படங்களில் மெலிதாகச் சிரிக்க அனேக சந்தர்ப்பங்கள் கிடைக்கும். ஆங்காங்கே ஒன்லைனர்கள் நம்மைப் புன்னகைக்க வைக்கும். பொன்.பார்த்திபன் வசனங்களில், ஆதித்யா டிவி செந்தில் பேசும் சில வரிகள் மட்டுமே அந்த வேலையைச் செய்கின்றன.

அதேநேரத்தில் ராதாமோகனின் படங்களில் வன்முறையோ, ரத்த வாடையோ இருக்காது எனும் நியதியை ‘பொம்மை’ உடைத்திருக்கிறது என்பதைக் குறிப்பிட்டாக வேண்டும். கிளைமேக்ஸ் மோதலுக்கு முந்தைய காவல்நிலைய காட்சியில் ’அந்நியன்’ அம்பி போல எஸ்.ஜே.சூர்யா மாறுவது நிச்சயம் செயற்கையாகத் தெரியாது. அதில் அவர் நடித்திருக்கும் விதம், தமிழ் சினிமாவில் தடம் பதித்த நடிப்புக் கலைஞர்கள் வரிசையில் அவருக்கும் ஒரு இருக்கையைப் பெற்றுத் தந்திருக்கிறது.

மீண்டும் ஒரு ’குணா’

சோகம், ரௌத்திரம், நகைச்சுவை, காதல் என்று விதவிதமாக உணர்வுகளைக் கொட்டும்போது ஒரு இளம் நாயகனாகவே உருமாறியிருக்கிறார் எஸ்.ஜே.சூர்யா. கலைஞனுக்கு வயது தடையில்லை என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்திருக்கிறார். இறுதிக்கட்டத்தில் அவரது குரலில் வெளிப்படும் மிரட்டல் அபாரம்.

மாடர்ன் உடைகளுக்கான விளம்பர மாடல் போல, படம் முழுக்க அழகழகாகத் தோன்றியிருக்கிறார் பிரியா பவானிசங்கர். இன்றைய இளம்பெண்களின் பிரதிநிதி போல பேசி நடித்திருப்பது இன்னும் அழகு.

சிறுவயது ராஜ்குமாராக வரும் ஹிதேஷ் பரத்வாஜ் அருமையாக நடித்திருக்கிறார். நந்தினியாக வரும் சிறுமி அழகுச் சிரிப்புடன் நம் மனதைக் கொள்ளை கொள்கிறார்.

நாயகன் நாயகியைத் தவிர வேறு எவருக்குமே முக்கியத்துவம் இல்லாத இக்கதையில் டவுட் செந்தில், அருள் உட்பட மிகச்சிலரே வந்து போயிருக்கின்றனர்.

ரிச்சர்ட் எம்.நாதனின் ஒளிப்பதிவில் ஒவ்வொரு பிரேமும் கண்ணில் ஒற்றிக்கொள்ளும்படியாக உள்ளது.

ஆண்டனியின் படத்தொகுப்பில் கதை சீராக நகர்கிறது. த்ரில்லருக்கு உண்டான பரபரப்பு திரையில் தென்படாவிட்டாலும், அது மெலிதாக நம் மனதில் படிகிறது.

கே.கதிரின் தயாரிப்பு வடிவமைப்பில் பொம்மை ஆலையும் ஜவுளிக்கடை செட்டப்பும் நாமே அந்த இடத்திற்குச் சென்ற உணர்வை ஏற்படுத்துகின்றன. ஆனால், காவல்நிலைய வடிவமைப்போ கிளைமேக்ஸ் படம்பிடிக்கப்பட்ட இடமோ அந்த மாயாஜாலத்தை நிகழ்த்தவில்லை. பட்ஜெட் அதற்குக் காரணமாக இருக்கலாம்.

’பொம்மை’யில் நாயகன் நாயகியின் காதலைத் தாங்கிப் பிடிக்க வேண்டிய பொறுப்பு இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜாவிடம் தரப்பட்டிருக்கிறது. அதனை உணர்ந்து ’இந்தக் காதலில்’, ‘எனதுயிர் எங்கே’, ‘முதல் முத்தம்’ என்று மூன்று முத்துகளைத் தந்திருக்கிறார். அதோடு ‘உல்லாசப் பறவைகள்’ படத்திற்காகத் தன் தந்தை தந்த ‘தெய்வீக ராகம்’ பாடலுக்குப் புதிதாக முலாம் பூசியிருக்கிறார்.

முன்பாதி முழுக்கப் புத்துணர்ச்சியைத் தர யுவனின் பின்னணி இசையே காரணம். அதிலும் மனநல நிபுணரை எஸ்.ஜே.சூர்யா சந்திக்கும் காட்சியில் மிகச்சில வாத்தியங்களைக் கொண்டு யுவன் தந்திருக்கும் இசை அப்பாத்திரத்தின் உணர்வை நமக்குக் கடத்தியிருக்கிறது.

ஒரு இயக்குனராக ராதாமோகனுக்கு இப்படம் நிச்சயம் வித்தியாசமானதொரு முகத்தைத் தந்திருக்கிறது. அடுத்து ஒரு ஆக்‌ஷன் படம் தரலாம் எனும் அளவுக்கு இதில் நாயகனை மிரட்டலாகக் காட்டியிருக்கிறார். அதேநேரத்தில் காதலைத் திரையில் இழை இழையாகச் செதுக்கியிருக்கிறார். கொஞ்சம் பேண்டஸியான காதல் ஊடே ஒரு சைக்கோ த்ரில்லருக்கான இடத்தையும் தொட முயற்சித்திருக்கிறார். இவையனைத்தும் ஒன்றுசேரும்போது சந்தானபாரதியின் இயக்கத்தில் கமல் நடித்த ‘குணா’ நம் நினைவுக்கு வருகிறது. அந்த வகையில், இப்படத்தை அதற்கு அர்ப்பணிக்கப்பட்ட மரியாதை என்றே கொள்ள வேண்டும்.

குணாவில் நாயகன் நாயகியின் காதலைப் பிரிக்கச் சுற்றியிருப்பவர்கள் முயற்சி செய்வது வில்லத்தனத்திற்கான இடத்தைப் பூர்த்தி செய்யும். இதில் அது மிஸ்ஸிங். சைக்கோதனமான பாத்திரங்களைக் கண்டு வக்கிரங்களைக் காண்பிக்கும் வழக்கம் இதில் இல்லாதது பாராட்டுக்குரிய விஷயம்.

முழுக்கவே நாயகனின் மனதில் நிலை கொண்டிருக்கும் காதலே பிரதானப்படுத்தப்பட்டிருக்கிறது. ஆனால், படத்தின் கிளைமேக்ஸ் நிச்சயமாக அதற்கு நியாயம் செய்யவில்லை. மிக முக்கியமாக, காணாமல் போன அந்த சிறுவயது தோழி என்னவானாள் என்பதை விடை தெரியா புதிராகவே விட்டிருக்கிறார் இயக்குனர். அது இக்கதையினை பேண்டஸியாக, த்ரில்லராக மட்டுமல்லாமல் 360 டிகிரியில் ஒரு ரொமான்ஸ் படம் பார்த்த அனுபவத்தையும் உடைத்து போடுகிறது.

கொஞ்சம் வித்தியாசமான, எஸ்.ஜே.சூர்யாவின் அபாரமான நடிப்பை ரசிக்கிற, பிரியா பவானிசங்கரை ஒரு தேவதையாகத் திரையில் பார்க்க விரும்புகிற பிரியர்களுக்கு இப்படம் ஒரு நல்ல காட்சியனுபவத்தைத் தரும்!

உதய்பாடகலிங்கம்

விஜய் விருது வழங்கும் நிகழ்ச்சி: மதிய சாப்பாடு என்ன தெரியுமா?

பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யா கைது!