லகான், ஜோதா அக்பர் உள்ளிட்ட படங்களில் பணியாற்றிய பிரபல கலை இயக்குனர் நிதின் தேசாய் இன்று (ஆகஸ்ட் 2) தனது ஸ்டூடியோ வளாகத்திலேயே தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பாலிவுட் திரையுலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
பாலிவுட் திரையுலகில் பிரபல கலை இயக்குநராக விளங்கியவர் நிதின் தேசாய் (வயது 58). இவர் லகான், டாக்டர். பாபாசாகிப் அம்பேத்கர், தேவதாஸ், ஹம் தில் தே சுகே சனம், ஜோதா அக்பர் உள்ளிட்ட உலக புகழ்பெற்ற பல படங்களுக்கு கலை இயக்குனராக பணியாற்றியுள்ளார்.
பல்வேறு படங்களில் அவரது செட் வடிவமைப்பு பலரையும் ஈர்த்துள்ள நிலையில் இதுவரை 4 தேசிய விருதுகளை வென்றுள்ளார்.
கலை இயக்குநராக மட்டுமின்றி நடிகராகவும், இயக்குநராகவும் நிதின் தேசாய் சில படங்களில் பணியாற்றியுள்ளார். மேலும் மும்பையின் கலபூர் தாலுகாவில் உள்ள ராய்காட்டில் மிகப்பெரிய அளவில் சொந்தமாக ஸ்டுடியோவையும் திறந்துள்ளார்.
மேலும் நிதின் தேசாய் என்.டி. ஆர்ட் வேர்ல்ட் பிரைவேட் லிமிடெட் (ND’s Art World Pvt Ltd) என்ற நிறுவனத்தையும் தொடங்கி நடத்தி வருகிறார்.
இந்த நிறுவனத்தின் மூலம் வரலாற்று நினைவுச்சின்னங்களின் பிரதிகளை ஒழுங்கமைத்தல், பராமரித்தல், ஹோட்டல்கள், தீம் உணவகங்கள், வணிக வளாகங்கள் மற்றும் பொழுதுபோக்கு மையங்கள் தொடர்பாக வசதிகள் மற்றும் சேவைகளையும் வழங்கி வருகிறது.
இந்த நிறுவனம் கடந்த 2016 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளில் ECL ஃபைனான்ஸிடமிருந்து இரண்டு முறை ரூ. 185 கோடியை கடனாகப் பெற்றுள்ளது.
ஆரம்பத்தில் கடனை சரியாக கட்டி வந்த நிலையில், கொரோனா பேரிடர் கொண்டு வந்த முடக்கம் காரணமாக 2020ஆம் ஆண்டு முதல் கடனை திருப்பிச் செலுத்துவதில் சிக்கல் எழுந்தது. அதனால் பைனான்ஸ் நிறுவனத்திற்கு கட்ட வேண்டிய கடன், வட்டியுடன் சேர்த்து ரூ. 252 கோடியை எட்டியது.
இதற்கிடையே கடந்த 2021ஆம் ஆண்டு மே 7 அன்று ஸ்டுடியோவில் மிகப்பெரிய தீ விபத்து ஏற்பட்டு பெரும் சேதத்தை சந்தித்தது.
இதனால் கடனை செலுத்துவதற்கு தொடர்ந்து சிக்கல் நீடித்த நிலையில், திவால்நிலைத் தீர்வு செயல்முறையைத் தொடங்க எடெல்வீஸ் சொத்து மறுசீரமைப்பு நிறுவனம் நிறுவனம் மனுத்தாக்கல் செய்தது.
கடந்த மாதம் 25ஆம் தேதி நிதின் தேசாய் நிறுவனத்தின் திவால் மனுவை தேசிய நிறுவன சட்டத் தீர்ப்பாயத்தின் (NCLT), மும்பை அமர்வு நீதிமன்றம் கடந்த வாரம் ஏற்றுக்கொண்டது.
இந்த நிலையில், என்.டி ஸ்டுடியோ வளாகத்தில் இன்று காலை நிதின் தேசாய் உடல் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக இன்று காலை கண்டெடுக்கப்பட்டது. இதுகுறித்து படப்பிடிப்பில் இருந்த ஒரு தொழிலாளி மூலம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அவரது உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் நிதின் தேசாய் தற்கொலை செய்து கொண்டதாக சந்தேகிக்கும் ராய்காட் எஸ்பி தலைமையிலான போலீசார் இதுதொடர்பாக விசாரணையை தீவிரப்படுத்தினர்.
தொடர்ந்து நடத்திய விசாரணைக்கு பிறகு, நிதின் தேசாய் நிதி நெருக்கடியால் தற்கொலை செய்துகொண்டதாக கர்ஜத் தொகுதியின் உள்ளூர் பாஜக ஆதரவு எம்.எல்.ஏ.வான மகேஷ் பல்டி உறுதிபடுத்தியுள்ளார்.
பிரபலமாக வந்த நிதின் தேசாயின் மறைவு செய்திகேட்டு பாலிவுட்டின் பிரபல திரையுலக பிரபலங்கள் சமூக வலைதளங்களில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
கிறிஸ்டோபர் ஜெமா
திமுக ஒன்றிய செயலாளர் வீட்டில் அமலாக்கத்துறை திடீர் சோதனை!
எம்.ஜி.ஆர் சிலை மீது பெயிண்ட் : ஜெயக்குமார் எச்சரிக்கை!