சென்னையின் புறநகர்ப்பகுதிகளான அரக்கோணம், திருவள்ளூர், காஞ்சிபுரம் போன்ற மாவட்டங்களின் வாழ்வியலை ‘அட்டக்கத்தி’ படத்தின் மூலம் திரையில் பதிவு செய்து தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார் இயக்குநர் பா.இரஞ்சித்.
அதைப் போலவே அவரது பட்டறையிலிருந்து அவரது நெருங்கிய நண்பரான ஜெயக்குமார், அரக்கோணம் மக்களின் வாழ்வியல், அரசியல், விளையாட்டு, காதல் போன்றவைகளை கையில் எடுத்து தமிழ் சினிமாவிற்கு சிறப்பாக எண்ட்ரீ கொடுத்துள்ளார். ஊரில் ஆடப்படும் தெருக் கிரிக்கெட், அதற்குள் உள்ள அரசியல், ஜாதிய வேறுபாடு போன்றவைகளை முடிந்த அளவு பிரச்சார நடையின்றி கூற முயற்சித்துள்ளார் இயக்குநர் ஜெயக்குமார்.
இந்தியாவைப் பொறுத்தவரை கிரிக்கெட் என்பது நாட்டுப்பற்றுடன் இணைக்கப்பட்டே பார்க்கப்படும் சூழல் தான் தற்போது வரை நிலவி வருகிறது. ஆனால், கதாநாயகி, ‘நீ இந்தியன் டீமுக்கு ஆடுவியா?’ எனக் கேட்க, ‘ச்சீ.. அதுக்குலாம் யார் ஆடுவா..? நான் என் ஊருக்காக ஆடப் போறேன்’ என சொல்லும் நாயகன்.
‘இந்தியன் டீமுக்கு ஆடப் போனா அங்க பிளேயர்ஸா இருக்க எல்லாரும் பாலிடிக்ஸ் பண்றாங்க. நான் ஆடுனா வெஸ்ட் இண்டீஸ்க்கு தான் ஆடுவேன்’ எனச் சொல்லும் ஒரு சிறப்பான கிரிக்கெட் வீரர் கதாபாத்திரம் என கிரிக்கெட்டின் அரசியலை நக்கலாக இயக்குநர் கையாண்ட விதம் சிறப்பு. படத்தின் டைட்டில் கார்டிலேயே பின்னணியில் ஒலிக்கும் அரக்கோணத்தின் ரயில் சப்தங்கள், ஊர் மக்களின் ஒலி என அக்கணமே நம்மை அரக்கோணத்துக்கு அழைத்து செல்கிறார் இயக்குநர்.
ஒரு நேர்த்தியான தொழில்நுட்ப குழுவின் உதவியால் மட்டுமே ஒரு அறிமுக இயக்குநரால் இத்தகைய ஸ்போர்ட்ஸ் பீரியட் டிராமா படத்தை இவ்வளவு நேர்த்தியாக கையாளமுடியும். அந்த வகையில் இயக்குநருக்கு உறுதுணையாக இருந்த ஒலிவடிவமைப்பாளர் சுரேன், கேமரா மேன் தமிழ், எடிட்டர் செல்வா என அனைவரும் தங்களின் சிறப்பான பங்களிப்பை இப்படத்திற்கு தந்துள்ளனர்.
கோவிந்த் வசந்தாவின் பாடல்கள் ஏற்கனவே படத்திற்கான செலவில்லாத விளம்பரங்களை தேடித் தந்து விட்ட நிலையில், பின்னணி இசையிலும் மிரட்டியிருக்கிறார். படத்தின் ஆரம்பத்தில் ஹீரோ, ஹீரோயின் பேசிக்கொள்ளும் ஒரு காட்சியில் படத்தொகுப்பு கையாளப்பட்டிருக்கும் விதம் ஒரு நேர்த்தியான படத்தொகுப்பிற்கான உதாரணம்.
படத்தில் நடித்துள்ள அசோக் செல்வன், சாந்தனு, பிரித்வி, கீர்த்தி பாண்டியன், திவ்யா துரைசாமி என அனைவரும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். குறிப்பாக காதலியிடம் ’ஆந்தி, ஆந்தி(ஆனந்தி)’ என சென்னைத் தமிழில் கொஞ்சிப் பேசியும், மைதானத்தில் அனல்மிக்க பார்வையுடனும் ஜொலிக்கிறார் அசோக் செல்வன்.
சாந்தனு பாக்யராஜிற்கு இது நிச்சயம் கிடைக்க வேண்டிய வெற்றி. நீண்ட கால வெற்றித் தேடலில் அவரது நடிப்பின் வளர்ச்சி படத்தில் நன்றாகவே தெரிகிறது.
நம் ஊர் பக்கம் பார்க்கும் தைரியமான பக்கத்து வீட்டு பெண்ணை அப்படியே பிரதிபலிக்கிறார் கீர்த்தி பாண்டியன். பிரித்வி கதாபாத்திரத்தின் கொடூர கவிதைகள் வரும் காட்சிகள் தியேட்டரில் சிரிப்பலையை உண்டாக்குகிறது. மேலும், அந்தக் கதாபாத்திரம் ’அட்டக்கத்தி’ தீனாவையும் நியாபகப்படுத்துகிறது.
ஊர் இளைஞர்களுக்கு கிரிக்கெட் சொல்லிக்கொடுக்கும் பக்ஸின் ’இம்மானுவேல்’ கதாபாத்திரம் ஒரு சிறந்த குணச்சித்திர கதாபாத்திரமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. எதற்கெடுத்தாலும் ஏசப்பாவிடம் ஜெபம் செய்யும் அம்மா கதாபாத்திரமாக லிஸா என அனைத்து கதாபாத்திரங்களும் சிறப்பாக எழுதப்பட்டிருப்பது கூடுதல் சிறப்பு.
10 நிமிடம் மட்டுமே வரும் ‘புல்லட் பாபு’ என்கிற கதாபாத்திரத்திற்கு தனி ரசிகர்கள் உண்டாக வாய்ப்புண்டு. இங்கு நிஜ எதிரி யார்? ஒன்று சேருவதின் பலம், நிதானத்தின் முக்கியத்துவம் என பல விஷயங்களை மிக பொறுப்பாகவே சொல்ல முயற்சி செய்துள்ளார் இயக்குநர் ஜெயக்குமார். அதற்குள் படத்தின் களமான கிரிக்கெட் பற்றிய, குறிப்பாக ஊரில் விளையாடப்படும் கிரிக்கெட் பற்றிய தெளிவான காட்சியமைப்பு, ஒவ்வொரு கிரிக்கெட் காட்சிகளையும் சுவாரஸ்யமாக்குவது என ஒரு ஸ்போர்ட்ஸ் டிராமாவாகவும் நேர்த்தியாகவே படத்தை கையாண்டுள்ளார் இயக்குநர்.
அரக்கோணத்தின் அரசியல் பிரபலங்கள், ஊர்த் திருவிழா, கலாச்சாரம் என தான் வாழ்ந்த மண்ணின் வெப்பத்தை திரையில் அப்படியே அப்பியுள்ளார் என்றே சொல்ல வேண்டும்.
ஆனால் ஒரு சில ஸ்டிரியோடைப்கள் (stereotypes) எனக் கூறப்படும் வழக்கமான கையாடல்களை தவிர்த்திருந்தால் மேலும் சிறப்பாக அமைந்திருக்கக் கூடும். படத்தின் இறுதிகட்டத்தின் திரைக்கதையில் கொஞ்சம் தொய்வையும் உணர முடிந்தது.
மற்றபடி சமூக அரசியலை கலை நுணுக்கம் குறையாமல் பேசிய இந்த ‘ப்ளூ ஸ்டார்’ இந்த ஆண்டின் முதல் சிறந்த திரைப்படம் எனக் கூறினால் மிகையாகாது.
– ஷா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
முகமது ஜூபேருக்கு கோட்டை அமீர் மத நல்லிணக்க விருது!
பியூட்டி டிப்ஸ்: கைகளில் அரிப்பு, எரிச்சல், வறட்சி.. தீர்வு என்ன?
திமுக எம்.எல்.ஏ மகன், மருமகளுக்கு நீதிமன்றக் காவல்!
விஜயகாந்துக்கு பத்மபூஷன் விருது!