பார்த்திபனுக்கு ப்ளூ சட்டை மாறன்  எழுப்பிய 14 கேள்விகள்!

சினிமா

இரவின் நிழல் திரைப்படம் ஜூன்15 அன்று வெளியானது. அந்தப் படத்தைத் தனது வலைத்தளப் பக்கத்தில் எதிர்மறையாக விமர்சனம் செய்த தமிழ் டாக்கீஸ் ப்ளூ சட்டை மாறன் இரவின் நிழல் படம் உலகின் முதல் சிங்கிள் ஷாட் நான் லீனியர் திரைப்படம் இல்லை. அது எந்தப்படம் என்பதையும், அதற்கான ஆவணங்களையும் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். அதற்குப் பார்த்திபனும் நக்கல் நய்யாண்டியுடன் பதில் கூறியிருந்தார்.

இந்த நிலையில் மாறன் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் புதுச்சேரி நாடக நடிகர்கள் சங்கத்தினர் முன் அறிவிப்பு இன்றி அரசியல் கட்சி தலைவர்கள் கொடும்பாவி எரிப்பதை போன்று ப்ளூசட்டை மாறன் பொம்மைக்கு செருப்பு மாலை அணிவித்து கொடும்பாவி கொளுத்தினர்.

இதனை தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு புதுமையான பாராட்டிற்கு நன்றி பார்த்திபன் சார். உங்கள் நாகரீக செயல் தொடரட்டும் என அந்த புகைப்படங்களை அவரே பகிர்ந்திருந்தார்.

தமிழ்நாடு முழுவதும் இரவின் நிழல் படம் திரையிட்ட திரையரங்குகளுக்கு நேரடியாக சென்று படம் பார்க்க வந்த பார்வையாளர்களை சந்தித்து வந்த பார்த்திபன் அவ்வப்போது ப்ளூ சட்டை மாறன் பதிவுகளுக்கு பதில் அளித்துவந்தார் அப்படி வெளியான ஆடியோ பதிவு ஒன்றில் ஒரு திரைப்படத்தை பாராட்டி பேச மூன்று லட்சம் ரூபாய் வரை மாறன் கேட்பதாக தயாரிப்பாளர் ஒருவர் தன்னிடம் கூறியதாக கூறியிருந்தார்

அதனை தனக்கு சாதகமாக்கி” சொன்னது சொன்னீர்கள் ஒரு கோடி ரூபாய் கேட்பதாக” கூறியிருந்தால் கெளரவமாக இருந்திருக்குமே என மாறன் தனது டிவிட்டர் பக்கத்தில் பார்த்திபனை கிண்டல் செய்தார். தற்போது பார்த்திபனை நோக்கி 14 கேள்விகளை எழுப்பியுள்ளார்.

அதில், அறிவுஜீவி, இடியட் என்று நக்கல் அடித்து பயனில்லை. உருப்படியான பதில் மட்டுமே இங்கு மதிக்கப்படும். ஏற்கனவே தனித்தனியாய் கேள்வி எழுப்பியும் எந்த பதிலும் பளிச்சென்று வரவில்லை.சோஷியல் மீடியாவில் யாரோ எழுதியதை ஆதாரம் என்கிறீர்கள். ஆகவே இதோ முழு கேள்வித்தொகுப்பு. இக்கேள்விகள் ஒவ்வொன்றுக்கும் ஈயம் பூசாமல் பதில் சொல்லுங்கள். தமிழ் சினிமா ரசிகர்கள் தெரிந்து கொள்ளட்டும் என கேள்விகளை எழுப்பியுள்ளார் மாறன்.

1.உலகின் முதல் சிங்கிள் ஷாட் நான் லீனியர் படமென இரவின் நிழல் புரமோஷன்களில் கூறுகிறீர்கள். உலகின் முதல் என்றால். அதை கின்னஸ் சாதனைக்கு அனுப்பாதது ஏன்? அல்லது அனுப்பியும் அவர்கள் ரிஜெக்ட் செய்து விட்டார்களா?

2.1905 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டு, இன்றுவரை உலகத்தினர் பலரால் படிக்கப்பட்டு வரும் வெரைட்டி சினிமா இதழில், Fish and Cat 2013 ஈரானிய படம் நான் லீனியரில் கதை சொல்கிறது என்று தெளிவாக எழுதிய ஆதாரத்தைத் தந்தும்.. அதைப்பற்றி இதுவரை வாய் திறக்காமல்… சமூக வலைதளத்தில் யாரோ சிலர் எழுதியதை ஸ்கிரீன் ஷாட் எடுத்து ‘Fish and Cat’ நான் லீனியர் படமில்லை’ என்று மடைமாற்றுவது ஏன்?

3.Fish and Cat படத்தில் காட்சிகள் லீனியரில் இருந்தாலும்… வாய்ஸ் ஓவரில் நான் லீனியராக கதை செல்வதாக ஒரு ட்வீட் ஆதாரத்தை தந்தீர்கள்.

4.சரி.. உங்கள் விருப்பத்திற்கே வருவோம். நான் லீனியரில் கதை சொன்னாலும் அது நான் லீனியர் படம்தானே? அதிலென்ன உங்களுக்குக் குழப்பம்?

5.நீங்கள் நடித்த ஒத்த செருப்பு படத்தை ஒரே நபர் நடித்த முதல் தமிழ்ப் படம் என்று ஓயாமல் புரமோட் செய்தீர்களே? அதில் நீங்கள் மட்டுமா நடித்தீர்கள்? பலரது குரலும் ஒலித்தது அல்லவா?

6.குரலும் நடிப்பின் ஒரு பிரிவுதானே? அப்படியெனில் ஒத்த செருப்பு என்பது எப்படி ஒருவர் மட்டும் நடித்தது என்றாகும்?

7.இதைத்தானே Fish and Cat படத்திலும் செய்தார்கள்? உங்களுக்கு வந்தால் ரத்தம் மற்றவர்களுக்கு வந்தால் தக்காளி சட்னியா?

8.ஒத்த செருப்பு படம் வெளியான ஆண்டு 2019. ஆனால் 2015 ஆம் ஆண்டே தனி நபர் நடித்து, எழுதி, இயக்கி. தயாரித்த முதல் தமிழ்ப் படமான கர்மா வெளியாகிவிட்டது என்றும், அதுகுறித்து உங்களுக்கு நன்கு தெரியும் என்றும் அதன் இயக்குநர் அரவிந்த் கூறியுள்ளாரே. அதற்கு உங்கள் நேர்மையான பதில் என்ன?

9.சிங்கிள் ஷாட் படத்திற்கான கின்னஸ் விருதை 2012 ஆம் ஆண்டு பெற்று, 2013 இல் தியேட்டர்களில் வெளியான படம் அகடம். அதன் இயக்குனர் முகம்மது இசாக். ஒளிப்பதிவாளர் நவுஷத்.

10. இரவின் நிழல் கதை, ஷூட்டிங் ஆரம்பித்தது முதல் இன்று நீங்கள் World’s First Single Shot Non linear என தம்பட்டம் அடித்துக்கொண்டு இருக்கும்வரை.. அகடம் படம் பற்றி உங்களுக்குத் தெரியவே தெரியாதா?

11.இதுகுறித்து நான் பலமுறை கேள்வி எழுப்பியும் பதில் அளிக்காமல் இருப்பது ஏன்?

12.ஒத்த செருப்பு, இரவின் நிழல் படங்களில் இருப்பது போல ஆஸ்கார் வின்னர்கள் மற்றும் வெளிநாட்டுத் தொழில்நுட்ப கலைஞர்கள் அகடம் மற்றும் கர்மாவில் பணியாற்றவில்லை. சிறிய பட்ஜெட்டில்… புதியவர்கள் செய்த சாதனைகள் அவை.

13.பலரது பிறந்தநாள் மற்றும் திருமண நாள்களுக்கு வித்யாசமான பரிசுகளை அளிக்கும் நீங்கள்.. இவர்களை அழைத்து இன்றுவரை கௌரவிக்காதது ஏன்?

14.அவர்களின் புகழ் வெளியே தெரிந்து விடும். உமது குட்டு வெளிப்பட்டு விடும் எனும் பதட்டமா?

இதில் அனைத்து கேள்விகளுக்கும் ஒன்று விடாமல் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பதில் தாருங்கள். முடியாவிட்டால் ஒரு கேள்விக்காவது மழுப்பாமல் பதில் தாருங்கள். 24 மணிநேரமும் கஷ்டப்பட்டு உழைத்தேன், தமிழனுக்குத் தமிழனே எதிரி, எனக்கு முன்பே எதுவும் தெரியாது என்பதைப் பலமுறை கூறிவிட்டீர்கள். போதும், நேரடியான பதில்களை தந்தால் நன்று. அறிவுஜீவியும், ஒயிட் காலர் நடிகருமான பார்த்திபனின் பதிலுக்குத் தமிழக சினிமா ரசிகர்களைப் போலக் காத்திருக்கும் ப்ளூ காலர் விமர்சகன். Without the Gun.” என்று குறிப்பிட்டு உள்ளார்.

இராமானுஜம்

+1
0
+1
0
+1
0
+1
3
+1
0
+1
1
+1
1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *