கடந்த மாதம் இரவின் நிழல் படம் வெளியானதை தொடர்ந்து அப்படத்தின் இயக்குநர் பார்த்திபன் மற்றும் திரைப்பட விமர்சகர் ப்ளூ சட்டை மாறனுக்கு இடையே சமூக வலை தளத்தில் கடும் வார்த்தைப் போர் நடந்து வருகிறது.
உலகின் முதல் நான் லீனியர் சிங்கிள் ஷாட் படம் என்ற பெருமையுடன் பார்த்திபன் நடித்து இயக்கிய இரவின் நிழல் திரைப்படம் கடந்த மாதம் 15ம் தேதி வெளியானது. ஆனால் அதற்கு மறுநாள் இரவின் நிழல் குறித்து ப்ளூ சட்டை மாறன் போட்ட ட்விட் பரபரப்பை ஏற்படுத்தியது.
அந்த ட்விட்டில், இரவின் நிழலுக்கு முன்னதாகவே ஈரானிய படமான ’ஃபிஷ் அண்ட் கேட்’ தான் முதல் நான் லீனியர் சிங்கிள் ஷாட்டில் எடுக்கப்பட்ட படம் என்று மாறன் குறிப்பிட்டு இருந்தார். அதற்கு பார்த்திபனும் தனது ஸ்டைலில் விளக்கம் கொடுக்க, அதுமுதல் இருவருக்கும் இடையேயான முட்டல், மோதல் தொடங்கி விட்டது.
ப்ளு சட்டை மாறன் உருவ பொம்மை எரிப்பு!
பார்த்திபனின் ரசிகர்கள் மாறனின் உருவ பொம்மைக்கு செருப்பு மாலை அணிவித்தும், உருவ பொம்மையை எரித்தும் நிகழ்த்திய போராட்டங்கள் சினிமா ஆர்வலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தின. ஆனால் இதனை பார்த்திபன் கண்டிக்காத நிலையில் தொடர்ந்து இருவரும் சமூகவலைத் தளங்களில் ஒருவரையொருவர் தாக்கி பேசி வருகின்றனர்.
மாறன் பகிர்ந்த சர்ச்சை வீடியோ!
இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் ஒரு நிகழ்ச்சியில் பேசிய வீடியோ பதிவினை தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து, பார்த்திபனை மறைமுகமாக தாக்கி உள்ளார் ப்ளூ சட்டை மாறன். அந்த வீடியோவில், ”எனக்கு ரொம்ப கஷ்டம், எனக்கு வேர்த்துச்சி, இடுப்பு வலிச்சதுனு ஆடியன்ஸ்ட்ட சொல்லிட்டு இருக்க முடியுமா? என் கால் உடஞ்சிருக்கும் போதும், நான் நல்லா ஆடுறனான்னு அவங்க பாக்குறது தான் முக்கியம். அதான் அவங்க வேல.
எனக்கு இந்த எடத்துல அடிப்பட்டு இருக்குங்கனு, கோவில் வாசல்ல உட்கார்ந்துருக்குற பிச்சக்காரன் மாறி என் புண்ணக் காட்டி காசு வாங்க மாட்டேன். என் திறமைய காட்டி தான் காசு வாங்குவேன்” என்று கமல் பேசி உள்ளார். இதனை கமலின் இயல்பான மற்றும் வெளிப்படையான பேச்சு என்று பாராட்டியுள்ளார் மாறன்.
பார்த்திபனை வம்பிழுக்கும் மாறன்!
அதேவேளையில் ”கஷ்டப்பட்டு உழைத்து ரசிகர்களுக்கு மொக்கைப்படம் தருவதை விட இஷ்டப்பட்டு வேலை செய்து நல்ல படம் தாருங்கள். இது World’s 1st, கெட்டுப்போன பிரியாணி சாப்பிட்டேன், 24 Hrs தூங்கவில்லை என்று அனுதாபம் தேடும் அறிவுஜீவிகளுக்கு சிறப்பாக பொருந்தும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
இரவின் நிழல் திரைப்படத்திற்காக கெட்டு போன பிரியாணி சாப்பிட்டேன் என்றும், படத்திற்காக பல நாட்கள் தூங்காமல் இருந்ததாக மேக்கிங் வீடியோவில் பார்த்திபன் குறிப்பிட்டு இருந்தார். இந்நிலையில் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரம் கமலின் வீடியோவை போட்டு பார்த்திபனை குத்திக் காட்டி மீண்டும் கீச்சுலகத்தில் தீப்பொறியை பற்ற வைத்துள்ளார் ப்ளூ சட்டை மாறன்.
–கிறிஸ்டோபர் ஜெமா
பா.ரஞ்சித்தின் நட்சத்திரம் நகர்கிறது: ஆகஸ்ட் 31-ல் ரிலீஸ்!
புளு சைட்டை மாறன் சொல்வது சரிதான். அந்த படம் சரியான மொக்கப்படம், நீ single shotல எடுத்த என்ன, 50 shotல படம் எடுத்த எனக்கென்ன. மொக்க படத்தை வச்சுக்கிட்டு இன்னும் சண்டை மட்டும் போடா தெரியுது பார்த்திபனுக்கு .