‘ப்ளூலாக்: எபிசோடு நாகி’ – விமர்சனம்!

சினிமா

உதயசங்கரன் பாடகலிங்கம்

துடிப்பேற்றும் ‘ஸ்போர்ட்ஸ் ட்ராமா’!

ஜப்பானிய அனிமேஷன் படங்களுக்குத் தற்போது இந்தியாவிலும் ரசிகர்கள் அதிகரித்துள்ளனர். வாசிக்கும் வகையிலான ‘மங்கா’ காமிக்ஸ்களை அப்படியே காட்சிப்பதிவாக்கம் செய்யும் முயற்சிகளுக்குப் பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது.

அவை உலகெங்கும் பல மொழிகளில் ‘மாற்றம்’ செய்யப்பட்டும் வரவேற்பைப் பெறுகின்றன. அந்த வரிசையில், தற்போது ‘ப்ளூலாக்: எபிசோடு நாகி’ வந்திருக்கிறது.

கால்பந்து விளையாட்டை மையப்படுத்தும் கதையைக் கொண்டிருக்கும் இப்படமானது, வீடியோ கேம் மீது பித்து கொண்டிருக்கும் ஒரு பதின்ம வயதுச் சிறுவன் எவ்வாறு உலகம் போற்றும் கால்பந்து வீரனாகிறான் என்பதைச் சொல்கிறது. அந்த ஒரு வரிக்கதையே இப்படத்தை நாம் காணலாமா, வேண்டாமா என்பதைத் தீர்மானிப்பதாக இருக்கிறது.

கால்பந்தில் ஆர்வம்!

ஒரு கோடீஸ்வரர் வீட்டில் பிறந்த சிறுவன். பள்ளியில் பல நண்பர்கள் இருந்தாலும், சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த ஒரு மாணவனோடு அவன் நட்பு கொள்ளத் துடிக்கிறான்.

அந்த மாணவனோ, எந்நேரமும் வீடியோ கேமே கதி என்று கிடப்பவன். வாழைப்பழ சோம்பேறி என்ற வார்த்தைக்கு சொல்லும் அளவுக்கு, தனது வாழ்வில் செயல்படுபவன். ஒருநாள், ’நான் அமைத்துள்ள கால்பந்து குழுவில் நீதான் முக்கியமான இடம் வகிக்கப் போகிறாய்’ என்கிறான் அந்த கோடீஸ்வரச் சிறுவன். இவனோ, ‘நான் அதுக்கெல்லாம் சரிப்பட மாட்டேன்’ என்கிறான்.

தொடர்ந்து அவன் வலியுறுத்துவதும், இவன் மறுப்பதுமாகக் கழிகிறது. ஒரு நன்னாளில், அவன் வார்த்தைக்கு இவன் செவி சாய்க்கிறான். அப்போதுதான், அந்த கோடீஸ்வரச் சிறுவன் தனக்கென்று ஒரு குழுவையே சேர்த்திருப்பது தெரிய வருகிறது.

அந்த வட்டாரத்தில் கால்பந்துக்கென்று புகழ் பெற்றிருக்கும் அணியோடு அவர்கள் மோதுகின்றனர். அந்த ஆட்டத்தில், வீடியோ கேம் விளையாடுவது போல ‘கோல்’ அடிக்கிறான் இவன். அந்த நுட்பம், அவனை வெகுவாகக் கவர்கிறது.
அவன் பெயர் ரியோ மிகாகே. இவன் பெயர் செஷிரோ நாகி.

நாகியும் தானும் சேர்ந்து விளையாடினால், ஜப்பான் தேசிய அணிக்கே தேர்வாகலாம் என்பது ரியோவின் எண்ணம். அடுத்த சில நாட்களில் அந்த எண்ணம் பலிக்கிறது.

ஜப்பான் ஜூனியர் அணிக்கான தேர்வுப்பட்டியலில் இருவரும் இடம்பெறுகின்றனர். அதற்காக நடக்கும் முகாமில் பங்கேற்கின்றனர். அங்கு அவர்களைப் போன்று நூற்றுக்கணக்கானோர் இருக்கின்றனர்.

அனைவரையும் முந்தி, இருவரும் ஜப்பான் கால்பந்து விளையாட்டின் முக்கிய வீரர்களாக ஆனார்களா, இல்லையா என்பதைச் சொல்கிறது ‘ப்ளூலாக்: எபிசோடு நாகி’ படத்தின் மீதி.

இந்தப் படத்தில் ரியோ சொல்வதைக் கேட்டு கால்பந்து ஆடத் தொடங்கும் நாகிக்கு, ஒருகட்டத்தில் தானாகவே அதன் மீது ஆர்வம் பிறக்கிறது. அந்தக் கணம் எது? அதன்பிறகு அவனது தேடல் என்னவாக இருந்தது என்பதைச் சொன்ன வகையில் இப்படம் ரசிகர்களை அசரடிக்கிறது. அந்தக் காட்சிகளே இப்படத்தின் முக்கியமான துருப்புச்சீட்டாக விளங்குகின்றன.

குழந்தைகளைக் காணச் செய்யலாம்!

நாகி, ரியோ பாத்திரங்களோடு சேர்ந்து வெவ்வேறு அணி வீரர்களாகச் சில பாத்திரங்கள் காட்டப்படுகின்றன. அவை ஒவ்வொன்றும் சில சிறப்பம்சங்களுடன் காட்டப்படுகின்றன. அதனால், ஒரு விளையாட்டை தொலைக்காட்சியில் பார்ப்பது அல்லது மைதானத்தில் நேரில் பார்ப்பது போன்ற உணர்வு ஏற்படுகிறது.

அந்த வகையில், இந்தக் கதையில் சாண்டெட்சு, இசாகி, பசிரா, குனிகாமி, சிகிரி, இடோஷி, ஜின்பாசி ஈகோ போன்ற பல பாத்திரங்கள் தனித்துவமாக வடிவமைக்கப்பட்டுள்ளன.

இப்பாத்திரங்களுக்கு ஜப்பானில் புகழ்பெற்ற நடிகர் நடிகைகள், டப்பிங் கலைஞர்கள் குரல் கொடுத்திருக்கின்றனர்.
இசையமைப்பாளர் ஜுன் முரயாமாவின் பணியானது, தொடர்ந்து கால்பந்து ஆட்டத்தை மையப்படுத்தி வரும் காட்சிகளில் நிறைந்திருக்கும் பரபரப்பினை அதிகப்படுத்த உதவியிருக்கிறது.

கலை இயக்குனர் அகிரா ஹிரோசவா, ஒளிப்பதிவாளர் யசுஹிரோ அசாகி உட்படப் பல்வேறு தொழில்நுட்பக் கலைஞர்கள் ஒன்றிணைந்து, இதில் ரியோ, நாகியின் உலகை வடிவமைத்திருக்கின்றனர். அதில் இருக்கும் உயிர்ப்புத்தன்மை நம்மைப் படத்தோடு ஒன்ற வைக்கிறது.

ஜப்பானில் கால்பந்து விளையாட்டை ஊக்குவிக்கும் வகையில் மங்கா காமிக்ஸ்கள், தொடர்கள், திரைப்படங்கள் வெளியாகி வருகின்றன. அவற்றுள் ஒன்றாக இடம்பெற்ற ‘ப்ளூலாக்’ எனும் சீரிஸை தழுவி இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இதன் ஒரிஜினல் கதையை எழுதியவர் முனேயுகி கனேஷிரா.

அந்த ‘அனிம்’ கதையைத் திரைப்படத்திற்கேற்ப மாற்றி எழுதியிருக்கிறார் டகு கிஷிமோடோ. இப்படத்தை ஷுன்சுகே இஷிகவா இயக்கியிருக்கிறார்.

இன்றைய இளைய தலைமுறை மட்டுமல்ல, எல்லா காலகட்டத்திலும் குறிப்பிட்ட வயதில் மனிதர்கள் சாப்பிட, தூங்க, நடக்க, படிக்க, விளையாட என்று எதற்கெடுத்தாலும் சோம்பேறித்தனப்படுவார்கள். அவர்களில் ஒருவராக நாகியைக் காட்டுகிறது இப்படம்.

ரியோ போலவும் சில சிறுவர்கள் இருப்பார்கள். அதனால், இப்படத்தைக் கும்பலாகச் சேர்ந்து பார்க்கும்போது பெரும்பாலானோரால் இக்கதையுடன் ஒன்ற முடியும். அதுவே இப்படத்தின் யுஎஸ்பி. வழக்கமான ‘ஸ்போர்ட்ஸ் டிராமா’ என்றபோதும், இப்படம் நம்மைத் துடிப்பேற்றும் விதத்தில் உருவாக்கப்பட்டிருக்கிறது. ஒரு படத்தைக் காண இதைவிட வேறென்ன வேண்டும்?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

தினுசு தினுசா பிரச்சனை வருதே – அப்டேட் குமாரு

‘அஃப்ரெய்ட்’: விமர்சனம்!

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *