நீங்கள் சினிமாவுக்கு வந்து 21 ஆண்டுகள் ஆகி விட்டது என்று கேள்வி கேட்டு, என்னை மிக வயசான ஆள் போல் காட்டி விட வேண்டாம் என நடிகர் ஜீவா தெரிவித்துள்ளார்.
அறிமுக இயக்குநர் கே.ஜி.பாலசுப்ரமணியம் இயக்கத்தில் ஜீவா, பிரியா பவானி சங்கர், விவேக் பிரசன்னா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் ‘பிளாக்’. இந்தப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.
அதில் கலந்துகொண்டு பேசிய நடிகர் ஜீவா ” இந்தப் படத்தின் கதையை என்னிடம் சொன்ன உடனே எனக்கு ரொம்ப பிடித்து விட்டது. காரணம், இந்தக் கதை ஏற்கனவே பல ஹீரோக்களுக்கு சொல்லப்பட்டு, பல மாறுதல்களைக் கடந்து என்னிடம் வந்து சேர்ந்தது. ஆக, இதில் பெரிதாக மாறுதல்கள் கூறத் தோன்றவில்லை. இது ஒரு ‘மைண்ட் ட்விஸ்டிங்’ ஆன கதை.
இந்தப் படத்தில் வலது மூளை, இடது மூளை அவற்றின் செயல்பாடுகள் குறித்து பேசும் பல விஷயங்கள் உள்ளது. அதை பார்க்கும் பார்வையாளர்களுக்கு தங்களது மூன்றாவது கண்ணே திறந்து விடும் போலும். பார்வையாளர்களின் மூளைக்கு நிறைய வேலை கொடுக்கும் கதை இது.
பல நேரங்களில் இது ஹாரர் படமோ என்கிற எண்ணம் பலருக்கும் தோணும். விறுவிறுப்பாக போகும் இந்தக் கதை நிச்சயமாக இளைஞர்களின் ஆர்வத்தை கவரும். இந்தப் படத்தில் நடித்திருக்கும் விவேக் பிரசன்னாவின் காட்சிகள் மிக முக்கியமானது.
இந்தப் படம் குறித்த அனைத்து கேள்விகளுக்குமான விடை அவரது கதாபாத்திரத்தில் தான் உள்ளது. இந்தப் படம் ஒரு ஹாலிவுட் படத்தின் ரீமேக் என்று சொன்னார்கள். ஆனால், நான் அந்தப் படத்தை இன்னும் பார்க்கவில்லை. தேவையில்லாத மாற்றத்தை செய்து படத்தை கெடுத்துவிடக் கூடாது என்பதற்காகவே அதைப் பார்க்காமல் தவிர்த்து விட்டேன். இந்தப் படத்தின் பெரும்பாலான காட்சிகள் இரவில் நடக்கும் காட்சிகள் தான்.
நான் சினிமாவுக்கு வந்து 21 ஆண்டுகள் ஆகி விட்டது எனக் கேட்டு என்னை ரொம்ப வயசானவன் போல் காட்டி விட வேண்டாம். என்னுடைய முதல் பத்து ஆண்டுகளில் நான் நிறைய பரிசோதனை முயற்சிகள் கொண்ட திரைக்கதைகளை தேர்ந்தெடுத்தேன். அந்த வகையில், நான் அடுத்து பண்ண இருக்கும் படங்களில் இது மிக வித்தியாசமான ஒரு படமாக இருக்கும்.
பிரியா பவானி சங்கரை அவர் பேட்டி எடுக்கும் காலத்தில் இருந்து தெரியும். அவரோடு இந்தப் படத்தில் நான் நடித்த அனுபவம் பெரும் மகிழ்ச்சியாக இருந்தது” எனப் பேசினார்.
அறிமுக இயக்குநர் கே.ஜி.பாலசுப்பிரமணியம் இயக்கும் இந்தப் படத்தை தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு தயாரிக்கிறார். கோகுல் பினாய் ஒளிப்பதிவு செய்ய, பிலோமின் ராஜ் படத்தொகுப்பு வேலைகளை மேற்கொண்டுள்ளார். சாம்.சி.எஸ் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்தத் திரைப்படம் வரும் அக்டோபர் 11ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
– ஷா
ரூ.20 கோடி முறைகேடு… அமலாக்கத்துறை முன் அசாருதீன் ஆஜர்!
ஜம்மு காஷ்மீர் முதல்வராகிறார் ஓமர் அப்துல்லா
மழை காலத்தில் மின் தடைகள் : அமைச்சர் செந்தில் பாலாஜி போட்ட உத்தரவு!