ஓடிடியால் திரையரங்குகளில் மவுசு குறையாது என இயக்குநர் மாரி செல்வராஜ் இன்று (ஜூன் 1) தெரிவித்துள்ளார்.
பைசன் திரைப்படம்
பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன் போன்ற படங்களை இயக்கியவர் மாரி செல்வராஜ். தற்போது நடிகர்கள் விக்ரம், துருவ் விக்ரம், அனுபமா, ரஜிஷா விஜயன் ஆகியோரை வைத்து புதிய படத்தை இயக்கி வருகிறார்.
இந்த படத்திற்கு “பைசன்” எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு வேலைகள் நெல்லை, தூத்துக்குடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் நடைபெற்று வருகிறது. இந்த படத்தை பா.ரஞ்சித்தின் நீலம் நிறுவனம் தயாரித்து வருகிறது.
இந்நிலையில், இன்று (ஜூன் 1) தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த மாரி செல்வராஜ், “பைசன் திரைப்படம் விளையாட்டு சம்மந்தப்பட்டதாக இருக்கும். கடந்த ஒரு மாதமாக இப்படத்தின் படபிடிப்புகள் நடைபெற்று வருகிறது. இதற்கான படப்பிடிப்புகள் தூத்துக்குடியில் இன்னும் ஒரு மாதம் நடைபெற உள்ளது.
தமிழகத்தின் தென் மாவட்டங்களை கதைக்களமாக கொண்டுதான் பைசன் திரைப்படம் உருவாகி வருகிறது. பைசன் திரைப்படத்தில் சில உண்மை சம்பவங்கள் உள்ளன. மற்றவை அனைத்தும் புனையப்பட்ட கற்பனைதான்” எனத் தெரிவித்தார்.
ஓடிடி – திரையரங்குகள்
தொடர்ந்து, அவரிடம் திரையரங்குகளுக்கு இணையாக தற்போது ஓடிடியிலும் திரைப்படங்கள் வெளியாகிறது. மக்கள் இதை எப்படி பார்க்கிறார்கள் என்று நீங்கள் நினைக்கிறீர்கள் என்று கேட்கப்பட்டது.
இதற்கு பதிலளித்த மாரி செல்வராஜ், “அனைவரது வீட்டிலும் சாமி படங்கள் இருக்கின்றன. ஆனால், கோவிலுக்கு அனைவரும் செல்கிறார்கள் அல்லவா. அதுபோல, சினிமா என்பது மக்கள் அனைவரும் கூடி சேர்ந்து பார்ப்பது, அது எப்போதும் மாறாது.
ஓடிடி என்பது நூலகம் போன்றது. பார்த்த படங்களை திரும்பவும் அதில் பார்த்துக்கொள்ளலாம். பார்க்காத படங்களையும் பார்த்துக்கொள்ளலாம். அதனால், திரையரங்குகளுக்கு வருபவர்களின் எண்ணிக்கை குறையாது” என்றார்.
தென்மாவட்டங்களில் தொடர்ந்து சாதி படுகொலைகள் அதிகரித்து வருகிறது. இதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஏதேனும் படங்கள் தயாரிப்பீர்களா? என்ற கேள்விக்கு,
“இங்கு அடிப்படையிலேயே நிறைய மாற்றங்களை கொண்டுவர வேண்டி உள்ளது. மாற்றங்களை நோக்கிய பாதையில் இளைஞர்களை நாம் வழிநடத்த வேண்டும்.
இதை உடனே சரிசெய்ய முடியாது. ஏனெனில், இது காலங்காலமாக இங்கு நடைபெற்று வருகிறது. இது உளவியல் ரீதியாக பல தாக்கங்களை ஏற்படுத்துகிறது. அனைவரும் ஒன்றினைந்து மிகவும் நுணுக்கமாக இதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். சட்ட திட்டங்கள் மூலம் இதனை உடனடியாக மாற்ற முடியாது. அரசியல், சினிமா என அனைவரும் இதற்கென மெனக்கெடவேண்டி உள்ளது.
யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். அது அவரவர் தனிப்பட்ட விசயம்” என்று மாரி செல்வராஜ் தெரிவித்துள்ளார்.
இந்து
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
Share Market : 5 நாளுக்கு பிறகு உயர்ந்த பங்குச்சந்தை… அதானி, டாடா நிறுவன பங்குகள் உயர்வு!