இதுவும் ‘பீல்குட்’ படம் தான்!
பிஜு மேனன். மலையாளத் திரையுலகில் ‘என் வழி தனி வழி’ என்று பல ஆண்டுகளாக இயங்கி வருபவர். முன்னணி நடிகர்கள் வரிசையில் அவர் இருக்கிறாரா என்ற கேள்விக்கு இதுவரை எந்த ஊடகங்களும் பதில் சொன்னதில்லை. ஆனால் அவரது படங்கள் வெளியாகும்போது, அவற்றை ரசிப்பதற்கென்றே தனியாக ஒரு கூட்டம் திரளும். கிட்டத்தட்ட இருபதாண்டுகளுக்கும் மேலாக, அந்த எண்ணிக்கை அதிகரித்திருக்கிறதே தவிர குறையவில்லை என்பதே நிலைமை.
காரணம், பிஜு மேனனின் ஒவ்வொரு திரைப்படத்திலும் நாம் காணும் வேறுபாடு. அந்த ‘வெரைட்டி’தான் அவரது பலம். கடந்த ஒன்றரை ஆண்டுகளில் அவர் நடிப்பில் வெளியான தங்கம், கருடன், துண்டு, தலவன் படங்களின் உள்ளடக்கத்தில் இருந்தும் அதனை நாம் அறியலாம்.
இதோ, இப்போது அவர் நடிப்பில் ‘நடன்ன சம்பவம்’ வெளியாகியிருக்கிறது. ராஜேஷ் கோபிநாதன் எழுத்தாக்கத்தில், விஷ்ணு நாராயண் இயக்கத்தில் வெளியாகியுள்ள இந்தப் படத்தில் சூரஜ் வெஞ்சாரமூடு, லிஜிமோள் ஜோஸ், ஸ்ருதி ராமச்சந்திரன், சுதி கோப்பா, ஜானி ஆண்டனி, லாலு அலெக்ஸ் உட்படப் பலர் நடித்துள்ளனர்.
‘நடன்ன சம்பவம்’ எப்படிப்பட்ட அனுபவத்தை நமக்குத் தருகிறது?
நடந்தது என்ன?
உயர் நடுத்தர வர்க்கக் குடும்பங்கள் வாழும் ஒரு குடியிருப்பு. அங்கு புதிதாகக் குடிவருகிறது ஸ்ரீகுமரன் உன்னி (பிஜு மேனன்) – ரோஷி (ஸ்ருதி ராமச்சந்திரன்) குடும்பம். இவர்களுக்கு ஒரு மகள்.
உன்னி ஒரு மரைன் என்ஜினியர் என்பதால், ஆண்டில் சில மாதங்கள் ஓய்வில் வீட்டில் இருப்பார். அதனால் மகளைக் கவனித்துக் கொள்வது, மனைவியை வேலைக்கு அனுப்பி வைப்பது, வீட்டு வாசலில் காய்கறி வாங்குவது என்று இருக்கிறார்.
அது அக்கம்பக்கத்தில் இருக்கும் பெண்களுக்கு பேசுபொருளாகிறது. முதலில் கிண்டலடிப்பவர்கள், உன்னியின் சஜகமாகப் பேசும் இயல்பினால் ஈர்க்கப்படுகின்றனர். அதனால், அவர் இருக்குமிடங்களில் பெண்கள் கூட்டம் திரள்கிறது.
உன்னியின் வீட்டுக்கு அருகில் வசிக்கிறார் அஜித் (சூரஜ் வெஞ்சாரமூடு). குடும்பத்தலைவன் என்பவன் வீட்டில் எந்த வேலையையும் செய்யக் கூடாது என்பது அவரது சுபாவம். அதுவே, அவருக்கும் அவரது மனைவி தான்யாவுக்கும் (லிஜிமோள் ஜோஸ்) இடையே உள்ள தூரத்தை அதிகப்படுத்துகிறது.
உன்னியின் செயல்பாடுகளால் ஈர்க்கப்படும் தான்யா, மெதுவாக அவரோடு பேச ஆரம்பிக்கிறார். மொபைல் எண் வாங்கி உரையாடும் அளவுக்கு அவர்களது நட்பு வளர்கிறது.
அஜித்தோடு சேர்ந்து அந்த குடியிருப்பில் உள்ள சில ஆண்கள் மது அருந்துவது வழக்கம். அக்கம்பக்கத்தினர் குறித்து கிண்டலடித்துப் பேசுவதும் அந்த தருணங்களில் நிகழும். அப்படித்தான், உன்னி குறித்து அறிகிறார் அஜித்.
குடியிருப்பில் உள்ள பெண்களோடு உன்னி நெருக்கமாகப் பழகுவது பற்றிச் சொல்கிறார் லிங்கன் (சுதி கோப்பா). அது மட்டுமல்லாமல், அவர் வேறொரு பெண்ணின் வீட்டில் இருந்து வெளியே வருவதை தான் வீடியோ எடுத்ததாகக் கூறி, அதனைக் காட்டுகிறார்.
அப்போது, ‘என் மனைவியோடு அவன் வம்பு பண்ணதாகத் தெரிந்தால் அடித்து துவைத்து விடுவேன்’ என்கிறார் அஜித். அப்படியொரு தருணமும் வருகிறது.
ஒருநாள் உன்னியின் வீட்டுக்கு டிக்ஷனரி விற்க ஒரு இளம்பெண் வருகிறார். உன்னி தனது மகளுக்காக அவரிடம் ‘அட்லஸ்’ வாங்குகிறார்.
அப்போது, அந்தப் பெண் ‘உங்கள் வீட்டு கழிப்பறையைப் பயன்படுத்திக் கொள்ளலாமா’ என்று கேட்கிறார். உன்னியும் ‘சரி’ என்கிறார்.
அந்த என்சைக்ளோபீடியாவை எடுத்துக்கொண்டு உன்னியின் மகள், அஜித்தின் மகளைச் சந்திக்கச் செல்கிறார். அதனைத் தன் வீட்டில் இருந்து காணும் லிங்கன், அவசரமாக அஜித் வீட்டுக்கு வருகிறார்.
அந்த நேரத்தில், தனது வீட்டு பாத்ரூமில் வாட்ஸ்அப்பில் வந்த ஒரு ஆடியோவைக் கேட்டு உக்கிரத்தில் இருக்கிறார் அஜித். லிங்கனை பார்த்ததும் அவர் துணுக்குறுகிறார்.
உன்னி தனது வீட்டுக்குள் ஒரு பெண்ணை அழைத்துச் சென்றதாகச் சொல்கிறார் லிங்கன். அவ்வளவுதான். கையில் கிடைத்த தடியொன்றை எடுத்துக்கொண்டு வேகமாய் செல்கிறார் அஜித்.
உன்னியின் வீட்டுக்குள் நுழைந்து, அவரை அடி வெளுத்தெடுக்கிறார். அதனை வீடியோவாக பதிவு செய்கிறார் லிங்கன். அந்த வீடியோ, அந்த குடியிருப்புவாசிகளுக்கான வாட்ஸ்அப் குழுவில் அடுத்த சில நிமிடங்களில் வெளியாகிறது.
உன்னியைத் தெரிந்த அனைவருமே, அதனைக் கண்டு அதிர்கின்றனர். அவர் தங்கியிருக்கும் வீட்டின் உரிமையாளருக்கு போன் செய்து பேசுகிறார் லிங்கன். அவர் சொல்லும் விஷயங்களைக் கேட்டதும், உடனடியாக அந்த வில்லாவை காலி செய்தாக வேண்டும் என்று உன்னியிடம் சொல்கிறார் அந்த நபர்.
அதற்கடுத்த நொடி, நேராக காவல் நிலைய வாசலில் நிற்கிறார் உன்னி. பக்கத்துவீட்டுக்காரரான அஜித் தன்னைத் தாக்கியதாக புகார் கொடுக்கிறார்.
ஆனால், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அஜித்துக்கு தெரிந்தவர் என்பதால் அந்த புகாரைப் பதிவு செய்யாமல் மழுப்புகின்றனர் போலீசார்.
அதன்பிறகு என்னவானது? போலீசாரின் விசாரணையில் என்ன தெரிய வந்தது? எதற்காக அஜித் உன்னியின் மீது ஆத்திரப்பட்டார் என்பதற்கான பதில்களைச் சொல்கிறது ‘நடன்ன சம்பவம்’ படத்தின் மீதி.
இந்தக் கதையில், ஒரு குறிப்பிட்ட சம்பவமே உன்னியை அஜித் தாக்குவதற்குக் காரணமாகிறது. அது என்ன என்று சொல்கிறது இதன் இரண்டாம் பாதி.
அழகான பிரேம்கள்!
ஐம்பதைத் தாண்டிய பிறகும், தனக்கான கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுத்து நடித்து வருவதில் தான் ஒரு ஜித்தன் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்திருக்கிறார் பிஜு மேனன்.
மனைவி உட்பட அனைத்துப் பெண்களும் தன்னைப் போலவே சுதந்திரமானவர்கள் என்ற எண்ணத்தைப் பிரதிபலிக்கும் வகையில், இதில் அவரது பாத்திரம் அமைந்துள்ளது. அது எளிதாகப் பெண்களை ஈர்க்கும் விதத்தில் இருக்கிறது.
ஸ்ருதி ராமச்சந்திரன் இதில் பிஜுவின் மனைவியாக வருகிறார். காதல், வருத்தம், பதற்றம் என்று காட்சிகளுக்குத் தேவையான நடிப்பைத் தந்திருப்பதோடு மிக அழகாகவும் தோன்றியிருக்கிறார்.
‘ஜெய்பீம்’, ‘சிவப்பு மஞ்சள் பச்சை’யில் பார்த்த லிஜிமோள் ஜோஸ், இக்கதையின் மையமாகத் திகழும் தான்யாவாக வருகிறார். இறுக்கமான முகத்துடன் படம் முழுக்க அவர் தோன்றியிருப்பது அப்பாத்திரத்தை வலுவானதாக ஆக்கியிருக்கிறது.
சூரஜ் வெஞ்சாரமூடு இப்படத்தின் இன்னொரு நாயகன். தான் ஒரு சிறந்த நடிகர் என்பதைப் பல காட்சிகளில் உணர்த்தியிருக்கிறார். மது போதையில் தள்ளாடும்போதும் ‘நான் ஸ்டெடியா இருக்கேன்’ என்று உணர்த்தும்விதமாக அவர் நடந்து செல்லும் காட்சிகள், நாம் அனுபவத்தில் கண்ட ‘ஸ்டெடி’ குடிமகன்களைத் திரையில் காட்டுகிறது.
இவர்கள் தவிர்த்து சுதி கோப்பா, லாலு அலெக்ஸ், ஜானி ஆண்டனி, நௌஷத் அலி, மதுசூதனன் என்று ஒரு டஜன் பேராவது திரையில் தலைகாட்டியிருப்பார்கள். அவர்கள் அனைவரும் நம் மனதில் பதியும்படியான பாத்திரங்களைப் பிரதிபலித்திருக்கின்றனர். ஆதிரா ஹரிகுமார், அனகா அசோக், அஞ்சு தாமஸ், சனுஜா சோம்நாத், மஞ்சுளா மோகன் தாஸ் போன்றவர்கள் அக்கா, அம்மா, அண்ணி மற்றும் சில நாயகி பாத்திரங்களைத் தேடுபவர்களுக்கு உதவும்விதமாக இதில் தோன்றியிருக்கின்றனர்.
இந்தப் படத்தில் பெரும்பாலான பிரேம்கள் பளிச்சென்று அமைந்துள்ளன. அதற்குக் காரணகர்த்தாவாக விளங்குகிறார் ஒளிப்பதிவாளர் மனீஷ் மாதவன்.
உன்னி தனது வீட்டின் பின்புறத்தில் அமைக்கும் ‘பார் செட்டப்’பை காணும்போது, ’கலை இயக்குனர் இந்துலால் கவீத் ஒரு ரசனைமிகு இண்டீரியர் டிசைனரோ’ என்ற எண்ணம் எழுகிறது.
கூடவே, ஒரு விளம்பரப் படத்தை இரண்டு மணி நேரம் பார்த்த உணர்வு பெருகவும் அவர் காரணமாக விளங்குகிறார்.
ஆங்காங்கே ‘நடந்தது என்ன’ என்று சொல்ல வேண்டி வந்தாலும், ‘பிளாஷ்பேக்’கை விட்ட இடத்தில் இருந்து கண்டு ரசிக்கும் உணர்வைத் தந்துள்ளது சைஜு ஸ்ரீதரன் – டோபி ஜானின் படத்தொகுப்பு. நாம் கதையைப் புரிந்துகொள்வதில் அவர்களது பங்களிப்பும் உண்டு.
அங்கீத் மேனன் இசையில் பாடல்கள் கேட்டவுடன் பிடித்துப் போகின்றன. காட்சிகளின் உயரத்தை மேலும் உயர்த்தும் விதத்தில் உள்ளது அவரது பின்னணி இசை.
இந்தப் படத்தின் எழுத்தாக்கத்தை ராஜேஷ் கோபிநாதன் மேற்கொண்டிருக்கிறார். இதற்கு முன் அவர் எழுதிய ‘களி’ திரைப்படம் ஆக்ஷன் வகைமையிலும், ‘ஜின்’ பேண்டஸி வகைமையிலும் அமைந்திருந்தன. இதில் ‘டிராமா’ ஆகவும், ‘த்ரில்லர்’ ஆகவும் நகரக்கூடிய ஒரு கதையை ‘ரொமான்ஸ்’ஸை அடிப்படையாகக் கொண்டு தந்திருக்கிறார்.
விஷ்ணு நாராயண் இப்படத்தின் இயக்குனர். வேறொருவர் இதனை ஆக்கியிருந்தால், திரையில் கொஞ்சமாவது இருண்மை வெளிப்பட்டிருக்கக் கூடும். கதாபாத்திரங்களின் கண்ணசைவில் கூட ‘இரட்டை அர்த்தம்’ வெளிப்பட்டுவிடக் கூடாது என்பதில் கவனம் காட்டியிருக்கிறார் விஷ்ணு.
அந்த வகையில், ‘நடன்ன சம்பவம்’ படத்தின் இலக்கு குடும்பமாகத் திரையரங்குகளுக்கு வருபவர்களே என்ற தெளிவோடு இக்கதையை அணுகியிருப்பது பாராட்டுக்குரியது.
பீல்குட் படமே..!
’லாலா லா லாலா லாலாலா’ என்ற கோரஸ் குரலுடன் நெஞ்சைத் தொடும் விதமான காட்சியமைப்புடன் ’செண்டிமெண்ட் திலகங்களாக’ சில படங்கள் இருக்கும். வாழ்வின் துன்பங்களுக்கு தீர்வு எங்கும், எவரிடத்திலும் கிடைக்கும் எனும்படியாகச் சில படங்கள் அமையும். பாலை போன்ற வாழ்க்கைப் பரப்பினுள் சோலைகளாகச் சில தருணங்கள் என்று சில கதைகள் சொல்லும்.
அப்படிப்பட்ட ‘பீல்குட்’ படங்களுக்கு நடுவே, சாதாரண மனிதர்களின் வாழ்க்கையை, அவர்கள் படும் கஷ்டங்களை, அதற்குக் காரணமான முரண்களை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது ‘நடன்ன சம்பவம்’.
கணவர், குழந்தை உடன் வாழும் ஒரு பெண்ணுக்கு இன்னொரு ஆணோடு நட்பு கொள்வதென்பதை இன்று வரை சமூகம் ஏற்க மறுத்து வருகிறது. காமம் சார்ந்த உறவே அவர்களுக்குள் இருக்குமென்ற கருத்தும் இங்கு நிலவி வருகிறது.
‘புது வசந்தம்’ போன்ற படங்கள் அவற்றை மறுத்தது ஒரு காலம். இன்றைய காலகட்டத்தில் அந்த நட்பில் வேறுவிதமான உரையாடல்களும் சாத்தியம் என்று சொல்கிறது இப்படம். அதன் வழியாக, சுற்றிப் படர்ந்துள்ள துன்பங்களில் இருந்து ஒருவர் தன்னை விடுவித்துக்கொள்வதும் சாத்தியம் என்கிறது. அந்த வகையில் ‘நடன்ன சம்பவம்’ ஒரு பீல்குட் படமே. அதனை ஏற்றுக்கொள்பவர்கள் இதற்கு ‘தம்ஸ் அப்’ காட்டுவார்கள்!
- உதயசங்கரன் பாடகலிங்கம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
அன்று ”தமிழ் வாழ்க” என மக்களவையில் முழங்கிய திமுக எம்.பி.க்கள் : இன்று என்ன நடக்கும்?
”சொந்த பிள்ளைகளால் பாரத மாதா முதுகில் குத்தப்பட்ட நாள்” : ஆளுநர் ரவி
சிக்ஸ் மழை… டி20 உலகக்கோப்பையில் புதிய சாதனை படைத்த ரோகித் சர்மா
சின்ன சின்ன கண்கள் : பவதாரிணி குரலில் உருவானது எப்படி?