நீங்கள் ‘த்ரில்லர்’ பட ரசிகரா?
‘போர்தொழில்’ படம் கேரளாவில் மிகப்பெரிய அளவில் கொண்டாடப்பட்டது. அதன் தாக்கத்தினாலோ என்னவோ, தொடர்ச்சியாக மலையாளத்தில் ‘த்ரில்லர்’ படங்கள் மிகச்செறிவான உள்ளடக்கத்துடன் சமீபகாலமாக வெளியாகி வருகின்றன.
குறிப்பாக குற்ற விசாரணை நடைமுறைகளை உள்ளடக்கமாகக் கொண்ட ‘ஆப்ரஹாம் ஓஸ்லர்’, ’அன்வேஷிப்பின் கண்டதும்’, ‘அஞ்சகொக்ககள்ளன்’ போன்றவை காவல் துறையைச் சிலரது வாழ்வை நேரில் காணும் அனுபவத்தை ஊட்டின. அந்த வரிசையில் இன்னொன்றாக வெளியாகியுள்ளது ஜிஸ் ஜாய் இயக்கியுள்ள ‘தலவன்’. இதில் பிஜு மேனன், ஆசிஃப் அலி, மியா ஜார்ஜ், அனுஸ்ரீ, திலீஷ் போத்தன், ஜோஜி ஜான், சங்கர் ராமகிருஷ்ணன், ரஞ்சித், ஜாபர் இடுக்கி உட்படப் பலர் நடித்துள்ளனர்.
இந்தப் படம் எப்படிப்பட்ட ‘த்ரில்’ அனுபவத்தை நமக்குத் தருகிறது?
குற்றவாளியான இன்ஸ்பெக்டர்!
ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரியான உதயபானு (திலீஷ் போத்தன்) தான் எதிர்கொண்ட குற்ற வழக்குகளின் விசாரணை பற்றிய தகவல்களைத் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் பகிர்ந்து கொள்வதில் இருந்து, ’தலவன்’ திரைக்கதை தொடங்குகிறது.
2019ஆம் ஆண்டு செப்பனம்தொட்டா காவல் நிலையத்தில் சப் இன்ஸ்பெக்டராக மாற்றலாகி வருகிறார் கார்த்திக் (ஆசிஃப் அலி). நேர்மையானவர் என்று காவல் துறையில் பெயர் பெற்ற அவர், ஒன்றரை ஆண்டுகளில் 5 இடங்களில் பணியாற்றியிருக்கிறார்.
செப்பனம்தொட்டாவில் சர்க்கிள் இன்ஸ்பெக்டராக இருப்பவர் ஜெயசங்கர் (பிஜு மேனன்). அவரது உடல்மொழியும் தோற்றமும் நடவடிக்கைகளும், சக பணியாளர்களிடையே அவரைத் திமிர் பிடித்தவராக அடையாளப்படுத்துகின்றன. அதனால், அவரை நெருங்கவே பலர் பயப்படும் நிலைமை.
முதல் நாளன்று ஜெயசங்கரைச் சந்தித்துப் பேசுகிறார் கார்த்திக். அப்போதே, இருவருக்கும் முட்டிக் கொள்கிறது. ஒரு அடிதடி விவகாரம் தொடர்பாக ஜெயசங்கர் கைது செய்த ஒரு நபரை, கார்த்திக் விடுவிக்கும்போது அந்த மோதல் உச்சகட்டத்தை எட்டுகிறது. அதன்பிறகு, இருவரும் எலியும் பூனையுமாகவே அந்த காவல் நிலையத்தில் செயல்படுகின்றனர்.
இந்தச் சூழலில், அந்த ஊரில் கோயில் திருவிழா நடைபெறுகிறது. அதனையொட்டி ஜெயசங்கர் விடுமுறை எடுக்க, கார்த்திக் பந்தோபஸ்து ஏற்பாடுகளைக் கவனிக்கிறார். திருவிழாவின் இறுதிநாளன்று, ஜெயசங்கரின் மனைவி சுனிதா (மியா ஜார்ஜ்) தனது சகோதரர் குடும்பத்தினருடன் அவர்களது வீட்டிற்குச் செல்கிறார். அந்த நேரத்தில், சுனிதாவை அரிவாளால் வெட்டிய வழக்கில் கைது செய்யப்பட்டவரின் மனைவி ரம்யா (அணுஸ்ரீ) ஜெயசங்கரை அவரது வீட்டில் சந்திக்கிறார்.
தனது கணவர் குற்றமற்றவர் என்றும், அது தொடர்பான விவரங்களைத் தாங்கள் முழுமையாக அறிவது அவசியம் என்றும் கூறுகிறார். அந்த வழக்கை வாபஸ் பெறுவதற்காகத் தான் பணம் தரவும் தயாராக இருப்பதாகக் கூறுகிறார். அவரிடம் கடிந்துகொள்ளும் ஜெயசங்கர், உடனடியாக வீட்டை விட்டு வெளியேறுமாறு சொல்கிறார்.
அன்றிரவு உதவி காவல் கண்காணிப்பாளர் உதயபானு உடன் தனது வீட்டில் மது அருந்துகிறார் ஜெயசங்கர். அப்போது, கார்த்திக்கை அங்கு வருமாறு போன் செய்கிறார் உதயபானு. இருவரையும் சமாதானப்படுத்தவே அதனைச் செய்ததாகக் கூறுகிறார். ஆனால், இருவருமே தங்களது ‘ஈகோ’வை விட்டுத் தரத் தயாராக இல்லை. அதன்பிறகு ஒவ்வொருவரும் அங்கிருந்து கலைந்து செல்கின்றனர்.
அடுத்த நாள் காலையில் மொட்டை மாடிக்கு வரும் ஜெயசங்கர், அங்கு ஒரு சாக்கு மூட்டை இருப்பதைப் பார்க்கிறார். அதைத் திறந்தால், உள்ளே ரம்யாவின் சடலம் இருக்கிறது. விஷயம் காட்டுத்தீயாகப் பரவ, ஊடகங்களில் ரம்யா கொலை பற்றிய செய்திகள் வெளியாகின்றன.
ஜெயசங்கரின் வீட்டில் கொலை நிகழ்ந்ததற்கான ஆதாரங்கள் ஏதும் கிடைக்கவில்லை. ஆனாலும், மக்கள் அவரைக் கைது செய்யுமாறு போராட்டம் நடத்துகின்றனர். அரசியல் அழுத்தம் காரணமாக, போலீசார் ஜெயசங்கரைக் கைது செய்கின்றனர்.
சில நாட்கள் கழித்து, அந்த வழக்கின் விசாரணை கார்த்திக்கிடம் ஒப்படைக்கப்படுகிறது. ஜெயசங்கர் குற்றமற்றவராக இருந்தால் எனும் கேள்வியோடு அந்த வழக்கு விசாரணையைத் தொடங்குகிறார் கார்த்திக். ஏதேனும் ஒரு துப்பு கொண்டு அவர் நடத்தும் விசாரணை தோல்வியில் முடிவடைகிறது. ஆனாலும் சலிக்காமல் தனது பணியைத் தொடர்கிறார்.
இந்தச் சூழலில், அந்த வழக்கு விசாரணையோடு தொடர்புடையை ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் கொல்லப்படுகிறார். அந்த நபர் தான், இறுதியாக ரம்யாவை ஜெயசங்கரின் வீட்டுக்கு அழைத்து வந்தவர். அந்த கொலை வழக்கோடு கார்த்திக்கை தொடர்புபடுத்துவதற்கான சாட்சியங்கள் சிலரால் கட்டமைக்கப்படுகின்றன. அதனை அறியும் ஜெயசங்கர், அவரை அந்தச் சிக்கலில் இருந்து விடுவிக்க முயற்சிக்கிறார்.
அதன்பிறகு என்னவானது? யார் அந்த கொலைகளைச் செய்தார்கள் என்று சொல்கிறது ‘தலவன்’ படத்தின் மீதி.
‘தலவன்’ என்ற சொல்லுக்குத் தமிழில் ‘தலைவன்’ என்றே அர்த்தம். அதற்கேற்றவாறு, மொத்த திரைக்கதையும் மையப்பாத்திரமான சர்க்கிள் இன்ஸ்பெக்டர் ஜெயசங்கரைச் சுற்றியே பின்னப்பட்டுள்ளது.
இரண்டு நாயகர்கள்!
‘அய்யப்பனும் கோஷியும்’ உட்படப் பல இரண்டு நாயகர்கள் படங்களில் தனக்கான முக்கியத்துவம் கெடாமல் இடம்பெறுபவர் பிஜு மேனன். தனக்கென்று இருக்கும் தனித்துவமான ரசிகர்களின் விருப்பங்கள் கெடாமல் பார்த்துக் கொள்பவர். அப்படிப்பட்டவரைக் கொண்டாடும் விதமான கமர்ஷியல் திரைக்கதையோட்டத்தைக் கொண்டுள்ளது ‘தலவன்’.
’அனுராக கரிக்கின் வெள்ளம்’, ‘மேரா நாம் ஷாஜி’ உட்படப் பல படங்களில் ஆசிஃப் அலி உடன் இணைந்து நடித்தவர் பிஜு. அவற்றில் இருவரது பெர்பார்மன்ஸ் நமக்கு வித்தியாசமான அனுபவமொன்றை வழங்கும். அந்த மாயாஜாலம் ‘தலவன்’ படத்திலும் நிகழ்ந்துள்ளது. புதிதாகப் பணியில் சேர்ந்த எஸ்ஐ ஆகத் திரையில் கலக்கியிருக்கிறார் ஆசிஃப் அலி.
இரண்டு நாயகர்கள் படம் என்றபோதும், அவர்களது ரசிகர்கள் குறை சொல்ல முடியாத அளவுக்குத் திரையில் இருவருக்கும் சமமான முக்கியத்துவம் இருப்பதை உணர வைத்திருப்பது சிறப்பு. அனுஸ்ரீ, மியா ஜார்ஜ் இருவருமே இதில் பிரதானமாக வரும் பெண் பாத்திரங்கள். ஆனால், இருவருக்கும் நான்கைந்து காட்சிகள் இருந்தாலே அதிகம் எனும் நிலைமை. ஆதலால், இது ஆண்கள் சம்பந்தப்பட்ட கதை என்று தாராளமாகச் சொல்லலாம்.
இந்த படத்தில் திலீஷ் போத்தன், ஜோஜி ஜான், ரஞ்சித், கோட்டயம் நசீர், ஜாபர் இடுக்கி உட்படப் பலர் உண்டு. பிலாஸ் சந்திரஹாசன் இதில் வில்லனாக நடித்துள்ளார். தீபக் தேவ் தந்த பின்னணி இசை, ஒவ்வொரு காட்சியிலும் அடுத்த காட்சி குறித்த எதிர்பார்ப்பை தாறுமாறாக எகிற வைத்துள்ளது.
ஒளிப்பதிவாளர் ஷரண் வேலாயுதன், படத்தொகுப்பாளர் சூரஜ் இ.எஸ்., கலை இயக்குனர் அஜய் மங்கத், கதை மற்றும் திரைக்கதையாக்கத்தைக் கையாண்டுள்ள ஆனந்த் தேவர்கட், சரத் பெரும்பாவூர் மற்றும் ஒலி வடிவமைப்பு, ஆடை வடிவமைப்பு, டிஐ போன்றவற்றைக் கையாண்ட தொழில்நுட்பக் கலைஞர்கள் என்று ஒவ்வொருவரும் இப்படத்தில் இயக்குனரின் மனக்கண்ணில் இருக்கும் பிம்பத்திற்கு உருவம் கொடுக்க முயன்றிருக்கின்றனர்.
ஆனந்த் தேவர்கட், சரத் பெரும்பாவூர் இப்படத்தின் கதை, திரைக்கதையை வடிவமைத்துள்ளனர். ஜிஸ் ஜாய் வசனம் எழுதி இயக்கியுள்ளார். காவல் துறையில் இருப்பவர்களிடையே உள்ள மோதல், துவேஷங்களை முன்வைத்து ஒரு ‘த்ரில்லர்’ ஆக ‘தலவன்’ வடிவமைக்கப்பட்டுள்ளது. பலரது பகையைச் சந்தித்த சர்க்கிள் இன்ஸ்பெக்டர் ஜெயசங்கர் பாத்திரத்தைச் சுற்றியே திரைக்கதையில் வரும் ஒவ்வொரு காட்சியும் அமைக்கப்பட்டுள்ளது.
இறுதி வரையிலான ‘த்ரில்’!
ஆசிஃப் அலி, பிஜு மேனன் இடையிலான மோதல் நமக்கு ‘அய்யப்பனும் கோஷியும்’ படத்தை நினைவூட்டுகிறது. ஆனால், அனுஸ்ரீ பாத்திரம் கொலையாவதைக் காட்டியபிறகு திரைக்கதை வேறொரு அனுபவத்தை நோக்கி நம்மை இழுத்துச் செல்கிறது. அது இறுதி வரை நம்மை இருக்கை நுனியில் அமர வைக்கிறது. ‘யார் குற்றவாளி’ என்ற கேள்விக்குப் பதில் தேடும் நமது அனுமானங்களுக்கு எதிராகப் படத்தின் முடிவு நிச்சயம் இருக்கும்.
திரைக்கதையில் வில்லனை முன்கூட்டியே காட்டியபோதும், கிளைமேக்ஸில் அவரது இருப்பு நமக்கு ‘சர்ப்ரைஸ்’ ஆகவே வெளிப்படுகிறது. அப்பாத்திரம் குறித்து எவரும் யூகித்துவிடக் கூடாது எனும் நோக்கிலேயே, பரவலான கவனிப்பைப் பெறாத ஒருவரைத் தேர்வு செய்திருப்பது பாராட்டுக்குரியது.
காவல் துறை விசாரணையை முன்னிலைப்படுத்தி தற்போது பல படங்கள் வந்து கொண்டிருக்கும் சூழலில், அதில் அங்கம் வகிக்கும் சிலரிடையே உள்ள ‘ஈகோ’ மோதலின் இன்னொரு பக்கத்தை இதில் சொல்ல முயன்றிருக்கிறார் இயக்குனர் ஜிஸ் ஜாய்.
நல்லதொரு த்ரில்லரை காண்கிறோம் என்ற எண்ணத்தை ஊட்டும் வகையில் சுவாரஸ்யமான காட்சியனுபவத்தைத் தருகிறது இப்படம். அது போதும் என்பவர்கள் இதில் குறைகளைத் தேட மாட்டார்கள். அதேநேரத்தில், முழுக்க முழுக்க கமர்ஷியல் படங்களில் மேற்கொள்ளப்படும் சமரசங்கள் இதில் பெரிதாக இல்லை. அது போதுமே என்பவர்கள் ‘தலவன்’ படத்தை ரசிக்கலாம்.
உதயசங்கரன் பாடகலிங்கம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
உலக பட்டினி தினம் : மூன்றரை லட்சம் பேருக்கு விஜய் கட்சி அன்னதானம்!