56-ம் நாள் இரவு அனன்யா வீட்டுக்குள் வைல்டு கார்டு என்ட்ரியாக மீண்டும் வந்தார். இதை அங்குள்ள போட்டியாளர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை போல. இது அவர்களின் நடவடிக்கைகளில் தெளிவாக இருந்தது. biggbosstamil7 Vishnu ananya poornima
குறிப்பாக விஷ்ணு, விசித்ரா, பூர்ணிமா இடையே நள்ளிரவு இதை வைத்து பெரிய பஞ்சாயத்தே நடந்தது. முதல் வாரத்துல விஷ்ணு அந்த பொண்ண பத்தி என்கிட்டே கேட்டான் என விசித்ரா சொல்ல, பூர்ணிமா இந்த விஷயத்தில் அநியாயத்துக்கு ஆர்வம் காட்டினார்.
பூர்ணிமா-விஷ்ணு நடுவே ‘இருக்கு ஆனா இல்ல’ என ஒரு தனி டிராக் ஓடிக்கொண்டு இருக்கிறது. இதில் எந்த முடிவுக்கும் வர முடியாமல் பூர்ணிமா அல்லாடி கொண்டு இருக்கிறார். ஆகவே தான் விசித்ரா, அனன்யா விஷயத்தை சொல்லவும் அதில் அதிக ஆர்வம் காட்டுகிறார். ‘எனக்கு முன்னால ஏகப்பட்ட பேருக்கு ரூட்டு விட்டுருக்கே நீ’ என்பது தான் அந்த நேரத்தில் பூர்ணிமா மைண்ட் வாய்ஸாக இருந்திருக்கும்.
எனவே இதில் தீவிரமாக இறங்கி தோண்ட ஆரம்பித்தார். அய்யோ இந்த விசித்ராவால, பூர்ணிமா கிட்டயும் கடலை போட முடியாம போய்டும் போல என, மறுபுறம் விஷ்ணு தவித்தது வெளிப்படையாக தெரிந்தது. நீண்ட நேரம் நடந்த இந்த பஞ்சாயத்தின் முடிவில் விஷ்ணு நீங்க அனன்யா கிட்ட போய்ட்டு நல்லா பேசுங்க என்பது போல ஒரு தீர்ப்பினை பூர்ணிமா, விசித்ரா இருவரும் விஷ்ணுவுக்கு வழங்கினர்.
வீட்டில் உள்ள போட்டியாளர்கள் தங்களுக்கு வைல்டு கார்டு என்ட்ரிகளால் கொடுக்கப்பட்ட பெயர்கள் குறித்து கிச்சன் ஏரியாவில் பேசிக்கொண்டு இருந்தனர். இதில் பூர்ணிமாவுக்கு தவளை, மாயாவுக்கு விஷ பாட்டில், விசித்ராவுக்கு நரி என பலருக்கும் மிருகங்கள் பெயர் வந்தது. ஆனால் மாயாவை விடவும் உண்மையான விஷ தவளை நான் தான் என்பதை பூர்ணிமா ஒத்துக் கொண்டார். (உண்மைய சொல்றவங்க தெய்வத்துக்கு சமம்)
திடீரென மனுநீதி சோழன் அவதாரம் எடுத்த பிக்பாஸ், ‘கேப்டன் நிக்ஸன் பத்தி புகார் வந்தா வீட்டுல ஒரு மணி வச்சுருக்கோம் அத அடிக்கலாம். மூணு தடவைக்கு மேல அவர் மேல புகார் வந்தா அவரோட கேப்டன் பதவியை பறிச்சிட்டு அடுத்த வார நாமினேஷனுக்கும் அனுப்பிருவோம்’ என எச்சரித்தார்.
பிக்பாஸ் இதை சொல்லும்போது வீட்ல இதுவரைக்கும் எத்தனை பேரு கேப்டனா இருந்துருக்காங்க என்னைய மட்டும் ஏன் இப்படி சோதிக்குறீங்க என்பது போல நிக்ஸன் முகம் இருந்தது. ஸ்மால் பாஸ் வீட்டுக்கு மீண்டும் நிக்ஸன் வழியாக பிக்பாஸ் ஆட்களை தேர்வு செய்து அனுப்பி வைத்தார்.
வரும் வாரங்களில் இவர்கள் நாமினேட் ஆகலாம் என நிக்ஸன் கணித்து அதற்கு ஏற்றவாறு ஸ்மால் பாஸ் வீட்டுக்கு ஆட்களை தேர்ந்தெடுத்தார். இதில் விக்ரம், அர்ச்சனா, விஜய் வர்மா, பூர்ணிமா, கூல் சுரேஷ், விஷ்ணு ஆகியோர் ஸ்மால் பாஸ் வீட்டுக்கு சென்றனர். வழக்கம் போல நாமினேஷன் சடங்கினை ஆரம்பித்த பிக்பாஸ் மீண்டும் ஓபன் நாமினேஷனுக்கு தாவினார்.
இதில் ஜோவிகா, அனன்யா, மணி, விக்ரம், பூர்ணிமா, தினேஷ், அர்ச்சனா மற்றும் விசித்ரா இடம் பிடித்தனர். நாமினேஷன் போது, ‘ஒண்ணு நான் இருக்கணும் இல்ல பூர்ணிமா இருக்கணும்’ என பூர்ணிமாவை நாமினேட் செய்து சபதம் எடுத்தார் மாயா. அடுத்த நொடியே இருவரும் கட்டிப்பிடித்து பேசிக்கொண்டு இருந்தது வரலாறு.
என்ன தான் மாயா, பூர்ணிமா இருவருக்கும் மக்கள் மத்தியில் எதிர்மறை விமர்சனங்கள் இருந்தாலும் கூட, இந்த ஆட்டத்தை ஓரளவுக்கு சுவாரஸ்யமாக கொண்டு செல்வது இவர்கள் இருவர் தான். இரண்டு பேரில் ஒருவர் வெளியேறினாலும் கூட பிக்பாஸ் தலையில் துண்டை போட்டுக்கொள்ளும் நிலைமை வந்து விடும்.
அதனால் கடைசிவரை இவர்கள் நாமினேஷன் லிஸ்டில் வந்து, வந்து போவார்களே தவிர அவசரப்பட்டு இவர்களை பிக்பாஸ் வெளியில் அனுப்பி வைக்க மாட்டார். ஏதாச்சும் பண்ணனுமே என்பது போல ரூம் போட்டு யோசித்த தினேஷ் ஆராய்ச்சி மணியை அடித்து, மாயா ஒழுங்காக தனக்கு அளிக்கப்பட்ட பட்டத்தை தலையில் ஒட்டி கொள்ளவில்லை என பிராது அளித்தார்.
சபை கூடி விசாரித்த போது பூர்ணிமாவின் தலையில் தினேஷ் கைவைத்து செய்முறை விளக்கம் அளிக்க, கடுப்பான பூர்ணிமா என் தலையிலா கைய வைக்கிற? என்பது போல பஞ்சாயத்தை மாற்றி தனக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நீதி வேண்டும் என கொடி பிடித்தார். கடைசியில் இந்த பஞ்சாயத்து எக்குத்தப்பாக மாற படாதபாடுபட்டு நிக்ஸன் இதை முடித்து வைத்து நிம்மதி பெருமூச்சு விட்டார்.
பிக்பாஸிண் செல்லக்குட்டி ஹரிஷ் கல்யாண் தன்னுடைய ‘பார்க்கிங்’ புரோமோஷனுக்காக வீட்டுக்கு உள்ளே வர, ‘அவர நல்லா வரவேற்று உபசரிங்க’ என இரண்டு வீட்டுக்கும் பிக்பாஸ் உத்தரவிட்டார். தாரை, தப்பட்டை முழங்க உள்ளே வந்த ஹரிஷ் கல்யாணுக்கு இரண்டு வீட்டினரும் மரண குத்து, குத்தி வரவேற்பு அளித்தனர்.
அனைவருக்கும் நன்றி தெரிவித்த ஹரிஷ், ‘உங்களோட ஆட்டத்தை தனியா ஆடுங்க’ என மறைமுகமாக உபதேசமும் செய்தார். அதோடு பிக்பாஸ் நிகழ்ச்சியும் முடிவுக்கு வந்தது. வரும் நாட்களில் நிக்ஸனின் கேப்டன் பதவிக்கு ஆப்பு வருமா? ஹரிஷின் உபதேசத்தை ஏற்று போட்டியாளர்கள் இனியாவது தங்களுடைய ஆட்டத்தை மாற்றி கொள்வார்களா? என்பதை வழக்கம் போல நாம் பொறுத்திருந்து பார்க்கலாம்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
-மஞ்சுளா
கோவை பிரபல நகைக்கடையில் கொள்ளை: தனிப்படைகள் அமைத்து விசாரணை!
சேரி மொழி பேச்சு: குஷ்பு வீட்டின் முன்பு காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்!
biggbosstamil7 Vishnu ananya poornima