வீட்டில் உள்ள அனைவரும் சேர்ந்து இரண்டு மோசமான போட்டியாளர்களை தேர்வு செய்யும்படி பிக்பாஸ் கூறியிருந்தார். இதையடுத்து சொல்லி வைத்தது போல அனைத்து போட்டியாளர்களும் விசித்ரா, அர்ச்சனா இருவரையும் தேர்வு செய்தனர். இதனால் ஜெயில் உடைகளை அனுப்பி வைத்ததுடன், அவர்கள் ஜெயிலுக்கு போகும்படியும் இலவச இணைப்பாக குறிப்பு ஒன்றை பிக்பாஸ் அனுப்பி இருந்தார்.
விசித்ராவின் செக்மேட் ஆட்டம்!
ஆனால் இந்த பருப்பு எல்லாம் என்கிட்ட வேகாது என நினைத்த விசித்ரா அதற்கான செக்மேட் ஆட்டத்தை ஆரம்பித்தார். அர்ச்சனாவுடன் வெளியில் சென்று அமர்ந்து கொண்டார். இதைப் பார்த்த கேப்டன் தினேஷ் அவர்களிடம் போர்வை, சாப்பாடு எல்லாம் வரும். ஆனால் பாத்ரூம் செல்வது என்றால் ஜெயிலுக்குள் உள்ள பாத்ரூமை தான் பயன்படுத்த வேண்டும் என சொல்ல, அதற்காக ஜெயிலுக்கு உள்ளே போனால் மீண்டும் வர முடியாது. அதனால் நாங்கள் சாப்பிட மாட்டோம் என விசித்ரா கேம் ஆடினார்.
இதைப்பார்த்த பூர்ணிமாவுக்கு உள்ளே இருந்த மனசாட்சி திடீரென எட்டிப்பார்க்க, ‘நீங்க சாப்பிடுங்க. நான் கேப்டன் கிட்ட பேசி உங்களுக்கு பாத்ரூம் பர்மிஷன் வாங்கி தரேன்’ என ஆறுதல் சொன்னார். இதையடுத்து தினேஷ் தலைமையில் அனைவரும் நடுராத்திரியில் கூட்டணி போட்டு இதைப்பற்றி பேச, எல்லாரும் சேர்ந்து ஓட்டு போட்டுட்டு இப்ப என்ன கோர்த்து விட பாக்குறீங்க என்பது போல தினேஷ் விளக்கம் அளித்தார். வாக்கெடுப்பின் முடிவில் பாத்ரூம் பயன்படுத்தி கொள்ளலாம் என தினேஷ் அனுமதி அளிக்க, விசித்ரா, ’நான் சொன்னேன்ல’ என அர்ச்சனாவிடம் கெத்து காட்டினார்.
இரவு வீட்டிற்கு வெளியில் படுத்திருந்த விசித்ரா, அர்ச்சனாவுக்கு துணையாக தினேஷ் வெளியில் வந்து படுத்தார். சற்று நேரத்தில் அவர்களுக்கு துணையாக மற்ற போட்டியாளர்களும் வெளியில் வந்து படுத்தனர். இதைக் கண்ட விசித்ரா எங்களுக்காக மற்றவர்கள் கஷ்டப்பட வேண்டாம் என நினைத்து அர்ச்சனாவுடன் ஜெயிலுக்கு சென்றார். இதுக்கு எதுக்கு டேபிளை உடைச்சு யூடர்ன் போட்டு..?
மாயா-பூர்ணிமா மோதல்!
மறுநாள் தினேஷ் எடுத்த முடிவு சரியா? தவறா? என உயிர் தோழிகள் மாயா, பூர்ணிமா இருவருக்குள்ளும் மோதல் உண்டானது.
அதிசயமாக மாயா, தினேஷ்க்கு சப்போர்ட் செய்ய பூர்ணிமா அவர் நடிக்கிறார் என்றார். முடிவில் பூர்ணிமா பேசிக்கொண்டு இருக்கும் போதே எழுந்து சென்றார். மாயா, தினேஷ்க்கு சப்போர்ட் செய்ததால் மாயா-பூர்ணிமா நட்பில் விரிசல் விழ ஆரம்பித்துள்ளது. சண்டைக்கு நடுவில் இருவரும் மாற்றி, மாற்றி குற்றஞ்சாட்டி கொண்டனர். இது வழக்கம்போல பூர்ணிமாவின் கண்ணீரில் முடிய, மறுபுறம் அர்ச்சனா-விசித்ராவின் ஜெயில் தண்டனை முடிவுக்கு வந்தது. தினேஷை பார்த்தாலே பிடிக்கவில்லை என்பதை மீண்டும், மீண்டும் பதிவு செய்து கொண்டு இருந்தார் பூர்ணிமா.
கேரக்டர்களை மாற்றிய அனுபவம்!
அகம் டிவி வழியாக அகத்துக்குள் வந்த கமல் வீட்டுக்குள் உள்ள போட்டியாளர்களிடம் நலம் விசாரித்து விட்டு, ‘உங்கள் கேரக்டர்களை மாற்றி கொண்ட அனுபவம் எப்படி இருந்தது?’ என விசாரித்தார். இதில் கூல் சுரேஷ், அக்ஷயா, நிக்ஷன் மூவரும் தங்களை போல விசித்ரா, தினேஷ், ஜோவிகா நன்றாக நடித்தனர் என்று பாராட்டினர். மற்ற அனைவருமே ஒருவரை, ஒருவர் குற்றம் சாட்டி கொண்டனர்.
குறிப்பாக மாயா, விஷ்ணு இருவரும் இதிலும் குற்றம் கண்டுபிடித்தனர். இதற்கு நடுவில் ரவீனா காப்பாற்றப்பட்ட விஷயத்தை கமல் சொன்னார்.
தொடர்ந்து, ‘என்னோட கேரக்டரை யாருமே எடுக்கல. ஆனா கூல் சுரேஷ் அண்ணா எடுத்து அதற்காக பல தியாகங்களை செய்தார்’ என அர்ச்சனா கமலிடம் போட்டு உடைத்தார். யார் திட்டியது? என்று கமல் தன்னுடைய பாணியில் விசாரிக்க இதில் மாயா தான் என்ற உண்மை வெளி வந்தது. என்னுடைய கேரக்டரை நிக்ஸன் சார் எடுத்து செய்தார் என்று விசித்ரா நிக்ஸனை மறைமுகமாக கோர்த்து விட்டார்.
‘என்னுடைய கேரக்டரை சரவண விக்ரம் நன்றாக செய்தார்… சொல்ல போனால் அவரால் நான் செய்யும் தவறுகளை உணர்ந்தேன்’ என ரவீனா வெகுவாக பாராட்டினார். தன்னோட கேரக்டரை பூர்ணிமா நன்றாக செய்தார் என தினேஷ் பாராட்டினார். விசாரணை முடிவில் நல்ல விஷயங்களை மட்டும் எடுத்து கொள்ளுங்கள் என கமல் பொதுவாக அறிவுரை கூறினார்.
கொடுத்தால்தான் கிடைக்கும் மரியாதை
இதையடுத்து வீட்டில் அடிக்கடி விவாதத்துக்கு உள்ளாகும் மரியாதை பிரச்சினையை கமல் கையில் எடுத்தார்.
இதில் பெரும்பாலான போட்டியாளர்கள் மரியாதை கொடுத்தால் தானாக மரியாதை கிடைக்கும் என்று கூறினர். இதில் பெரும் பாதிப்புக்குள்ளான விசித்ரா என்னுடைய பசங்க போல எல்லாரிடமும் உரிமை எடுத்து பேசினேன். இனிமேல் அப்படி பேச மாட்டேன் என தன்னுடைய கருத்தை கூறினார். இதில் நிக்ஸன்-விசித்ரா இருவருக்கும் மீண்டும் முட்டி கொண்டது. சார் என்று அழைக்கும்படி நான் சொல்லவில்லை என நிக்ஸன் கூற பதிலுக்கு நாங்கள் பார்த்தோம் என்று கமல் கவுண்டர் கொடுத்தார்.
தொடர்ந்து கடந்த வாரம் நான் உங்களை பாராட்டினேன். இந்த வாரம் நீங்கள் அப்படி நடந்து கொள்ளவில்லை என நிக்சனுக்கு ஒரு குட்டு வைத்து, மறுபுறம் லோக்கல் ரவுடி என்று சொன்னது தப்பு என விசித்ராவுக்கும் ஒரு குட்டு வைத்தார் கமல். இந்த விசாரணை ஐஷு எலிமினேஷனில் வந்து முடிந்தது. மீண்டும், மீண்டும் ஐஷு எலிமினேஷன் விவகாரத்தில் நிக்ஸன் தலை உருள்கிறது. இந்த சண்டை இப்போ முடியாது என நினைத்த கமல் நீங்க காப்பாற்றப்பட்டீர்கள் என விசித்ராவிடம் சொல்லி பிரேக்கில் சென்றார்.
மீண்டும் உள்ளே வந்து மரியாதை சட்டம் போட்டோ, திட்டம் போட்டோ வாங்க முடியாது நீங்கள் நடந்து கொள்ளும் முறையில் தான் இருக்கிறது. நீங்கள் போட்டியாளரா? இல்லை அம்மாவா? என்பதை முடிவு செய்ய வேண்டியது நீங்கள் தான் என இந்த மரியாதை பிரச்சினையை முடித்து வைத்தார்.
நீங்கள் இந்த வீட்டில் மிகவும் மதிக்கும் நபர் யார்? என போட்டியாளர்களிடம் கமல் போட்டு வாங்க இதில் விசித்ரா, கூல் சுரேஷ், மாயா பெயர்களை போட்டியாளர்கள் அதிகம் உச்சரித்தனர். பூர்ணிமா வழக்கம்போல மாயா பெயரை சொல்லி வாண்டட் ஆக வந்து வண்டியில் ஏறினார்.
மறைமுகமாக அவரின் தவறுகளை கமல் சொல்ல போட்டியாளர்கள் மத்தியில் பலத்த கரகோஷம் கிடைத்தது. ஆனால் எதுவும் புரியாத மோடிலேயே பூர்ணிமா இதை ஹேண்டில் செய்தார். கூல் சுரேஷ் பெயர் அதிகம் வந்ததில் கமலும் மகிழ்ந்து இதேபோல தொடருங்கள் என அவரை வாழ்த்தினார். பதிலுக்கு, ’நான் என்னோட தவறுகளை மாத்திக்கிட்டேன். வீட்டைவிட்டு வெளியில் செல்லும் போது புதிய மனிதனாக செல்வேன்’ என கூல் சுரேஷும் உறுதி அளித்தார். அதன்படி பார்த்தால் இந்த பிக்பாஸ் அவரிடம் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது. நல்ல விஷயம்.
உலகக் கோப்பை டாஸ்க்!
உலகக்கோப்பை உச்சத்தில் இருப்பதால் கிரிக்கெட்டை வைத்து ஒரு டாஸ்க்கை கமல் போட்டியாளர்களுக்கு அளித்தார். வழக்கம் போல இதில் மாயா, ஜோவிகாவின் பெயர்கள் டேமேஜ் ஆகின. இதைப்பார்த்த கமல் இதோட முடிச்சிப்போம். மிச்சத்தை நாளைக்கு பேசிக்கலாம். உங்ககிட்ட இருக்க ஸ்டார்களை வைத்து டாஸ்க் ஒன்றை பிக்பாஸ் அளிப்பார் என விடை பெற்றார். தொடர்ந்து பிக்பாஸ் குரல் வீட்டிற்குள் ஒலித்தது.
ஸ்டார் வைத்திருக்கும் விசித்ரா, மணி, விஷ்ணு, ரவீனா ஆகியோர் தங்களுக்குள் முடிவு செய்து ஒருவரிடம் அந்த ஸ்டார்களை அளிக்க வேண்டும். அவருக்கு அடுத்த வார எவிக்ஷன்க்கு இரண்டு பேரை நாமினேட் செய்யும் உரிமை அளிக்கப்படும் என அறிவித்தார். அதன்படி விஷ்ணு அனைத்து ஸ்டார்களையும் கைப்பற்றி யாரை நாமினேட் செய்யலாம் என்று கலந்து ஆலோசிப்பதுடன் நிகழ்ச்சி முடிவுக்கு வந்தது.
விஷ்ணு தேர்வு செய்யும் அந்த இரண்டு நபர்கள் யார்? இதனால் வீட்டுக்குள் புதிய பிரச்சினைகள் வருமா? என்பதை நாம் காத்திருந்து பார்க்கலாம்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
-மஞ்சுளா
முதல்வரின் கிருஷ்ணகிரி பயணம் திடீர் ரத்து!
world cup final 2023: இந்திய அணிக்கு தலைவர்கள் வாழ்த்து!