பிக் பாஸ்: யார் இந்த அசீம்?

சினிமா

விஜய் டிவியின் பிக் பாஸ் கிளைமாக்ஸ் சமூக வலைதளங்களில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் துவங்கிய பிக் பாஸ் சீசன் 6 கடந்த வாரம் இறுதி கட்டத்தை எட்டியது. இதில் அசீம், விக்ரமன், ஷிவின் ஆகிய மூன்று பேர் இறுதி போட்டியாளர்களாக இருந்தனர்.

தொடக்கம் முதலே சிறப்பாக திறமையை வெளிப்படுத்தி வந்த மூவரும் இறுதி போட்டி வரை இருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதன்படியே மூன்று போட்டியாளர்களும் இறுதி வரை போட்டியில் தொடர்ந்தனர்.

கடந்த வாரம் பிக் பாஸ் போட்டியின் வெற்றியாளரை தேர்ந்தெடுப்பதற்கான வாக்குப்பதிவு ஹாட் ஸ்டார் செயலியில் துவங்கியது. இதில் விக்ரமனுக்காக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் ஓட்டு கேட்டு ட்வீட் போட்டிருந்தார். அவரது பதிவை கண்டித்து கேளிக்கை நிகழ்ச்சியில் அரசியலை புகுத்தாதீர்கள் என நடிகை வனிதா விஜயகுமார் உள்ளிட்ட பலரும் திருமாவளவனை விமர்சித்திருந்தனர்.

அதே நேரத்தில் பிக் பாஸ் போன்ற வெகுஜன நிகழ்ச்சியில் சாதி, சமத்துவம், அம்பேத்கர் குறித்து மக்களிடத்தில் விவாதத்தை விக்ரமன் ஏற்படுத்தியுள்ளார். அதனால் திருமாவளவன் விக்ரமனுக்கு ஓட்டு கேட்டது தவறு இல்லை என்ற கருத்துக்களும் எழுந்தது.

இந்தநிலையில், பிக் பாஸ் சீசன் 6-ல் அசீம் பிக் பாஸ் வெற்றிக் கோப்பையை கைப்பற்றினார். விக்ரமன் இரண்டாவது இடத்தையும், ஷிவின் மூன்றாவது இடத்தையும் பெற்றனர். இதனால் அசீம் ரூ.50 லட்சம் மதிப்பிலான பரிசுத்தொகையை தட்டிச் சென்றார்.

அவரது வெற்றியை கொண்டாடும் வகையில் அசீம் ரசிகர்கள் ட்விட்டரில் மக்கள் நாயகன் என்ற ஹேஷ்டாக்கை ட்ரெண்ட் செய்து வருகிறார்கள்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் வெற்றி பெற்றதன் மூலம் யார் இந்த அசீம் என பலரும் அவரை தேடி வருகின்றனர்.

1990-ஆம் ஆண்டு கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள ஆளூரில் பிறந்தவர் அசீம்.

சிறு வயது முதலே பள்ளிகளில் நடைபெறும் விளையாட்டு, பேச்சு போட்டிகளில் ஆர்வமாக கலந்து கொண்டு பரிசுகளை வாங்கி வந்த அசீம், கடந்த 2012-ஆம் ஆண்டில் மூன் டிவியில் தொகுப்பாளராக பணியாற்றினார்.

பின்னர் ஜெயா தொலைக்காட்சியில் வெளியான மாயா தொடரில் நடித்து சின்னத்திரைக்கு அறிமுகமானார். இதில் அஷ்வின் என்ற கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் பரவலான கவனத்தை பெற்றார். இந்த தொடரில் நடிகை வாணி போஜனும் நடித்திருந்தார்.

பின்னர் 2013-ஆம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் வெளியான தெய்வம் தந்த வீடு தொடரில் சரண் என்ற கதாபாத்திரத்தில் நடித்தார். இதில் பாராட்டப்பட்ட அவரது தனித்துவமான நடிப்பால் அவருக்கு தொடர்ந்து பல சீரியல்களில் நடிக்க வாய்ப்பு வந்தது. பிரியமானவள், பகல் நிலவு, நிறம் மாறாத பூக்கள், பூவே உனக்காக உள்ளிட்ட தொடர்களில் நடித்து சின்னத்திரையில் அசீம் பிஸியான நடிகராக வலம் வந்தார்.

இவருக்கு கடந்த 2018-ஆம் ஆண்டு சையது சோயாவுடன் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு ரயான் கரீம் என்ற மகன் பிறந்தான். திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட முறிவு காரணமாக அசீம் கடந்த 2021-ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றார்.

சீரியல்களில் மட்டுமல்லாது விஜய் தொலைக்காட்சியின் பிரபலமான நடன நிகழ்ச்சியான ஜோடி நம்பர் ஒன் நிகழ்ச்சியிலும் அசீம் பங்குபெற்றார். இதில் நடிகை ஷிவானியுடன் ஜோடியாக இணைந்து சிறப்பாக நடனம் ஆடினார்.

பிக் பாஸ் சீசன் 4-இல் வைல்டு கார்டு எண்ட்ரி மூலம் அசீம் நிகழ்ச்சியில் போட்டியாளராக வருவார் என்ற பேச்சு எழுந்தது. ஆனால் அந்த சீசனில் அசீம் அழைக்கப்படவில்லை.

இந்தநிலையில், பிக் பாஸ் சீசன் 6-ல் கலந்து கொண்ட 21 போட்டியாளர்களில் அசீமும் பங்கேற்றார். சீரியலில் நடித்திருந்ததினால் அனைவருக்கும் தெரிந்த முகமாவே அசீம் அறியப்பட்டார்.

இந்த சீசனில் தொகுப்பாளர் கமல்ஹாசனால் அதிகமுறை கண்டிக்கப்பட்ட நபர் அசீம் தான். இவர் அடிக்கடி கோபத்தில் சக போட்டியாளரை தடித்த வார்த்தைகளில் பேசிவிடுவார். இதனால் ஒவ்வொரு வாரமும் வார இறுதி நாட்களில் கமல்ஹாசன் இவரை கண்டிப்பார். ஆனால் அடுத்த வாரமே கமல் கூறிய அறிவுரைகளை காற்றில் பறக்கவிட்டு மறுபடியும் தனது கோபத்தை கட்டுப்படுத்தாமல் போட்டியாளர்களிடம் அசீம் வெளிப்படுத்தி வந்தார்.

ஒரு கட்டத்தில் இவரை இதற்கு மேல் எதுவும் கூற முடியாது என்பதை உணர்ந்த கமல்ஹாசன், அசீம் நான் உங்களை கண்டிக்கிறேன். அவ்ளோ தான் என்னால சொல்ல முடியும் என்ற நிலைக்கு வந்தார்.

போட்டியில் ரேங்கிங் டாஸ்க்கின் போது விக்ரமன், அசீம் ஆகிய இருவரிடையே நடைபெற்ற விவாதத்தின் போது, “வெள்ளை சட்டை போட்டால் பெரிய அரசியல்வாதி என்று நினைப்பா?” என்று விக்ரமனிடம் அசீம் கேள்வி கேட்டார். அவரது கேள்விக்கு விக்ரமன் கடுமையான ஆட்சேபம் தெரிவித்தார். இருப்பினும் அசீம் தனது கருத்தை பின்வாங்க மறுத்தார். மேலும் இந்த டாஸ்க்கில் ஆயிஷாவை வாடி, போடி என்று ஒருமையில் அசீம் பேசியதும் கடுமையான விமர்சனத்திற்குள்ளாகியது.

இதனால் சனிக்கிழமை நடைபெற்ற போட்டியின் போது கமல்ஹாசன் அசீமிடம், “உங்கள் மகன் வெளியில் இருந்து இந்த போட்டியை பார்த்துக்கொண்டிருக்கிறான் என்பதை நீங்கள் நினைத்து பார்க்க வேண்டும்.” என்று அறிவுரை வழங்கினார்.

இப்படி கமலிடம் கடுமையான கண்டிப்புகளை அசீம் வாங்கினாலும் தொடர்ந்து, தனது கோபத்தை கட்டுப்படுத்த அவர் தவறி வந்தார். ஆனால் அசீமிற்கு ஆதரவு தெரிவிக்கவும் அவரது இந்த செயல்களை ரசிக்கவும் செய்தனர்.

அசீம் கோபப்படுபவராக இருந்தாலும், அவர் எதையும் வெளிப்படையாக பேசக்கூடியவர். நிகழ்ச்சியில் யாருக்காவது பிரச்சனை என்றால் முதலில் அசீம் தான் சென்று உதவி செய்தார் என அசீமிற்கு ஆதரவளித்தவர்கள் தெரிவிக்கின்றனர்.

அசீம் போன்ற குணாதிசயம் உள்ளவர்களால் தொலைக்காட்சிகளுக்கு தான் தீனி. அவரை போல நட்பு அமைவதை யாரும் விரும்ப மாட்டார்கள் என்று அவரை எதிர்ப்பவர்கள் தெரிவிக்கின்றனர்.

இப்படி பல எதிர்ப்புகளையும், ஆதரவையும் ஒரு சேர சந்தித்த அசீம் அதிக வாக்குகளை பெற்று பிக் பாஸ் சீசன் 6-ன் வெற்றியாளர் ஆகியிருக்கிறார்.

செல்வம்

இடைத்தேர்தல்: இன்று முதல் அதிமுகவில் விருப்ப மனு!

இளங்கோவன் வீட்டில் ஸ்டாலின்: மகனுக்கு பதிலாய் அப்பா வேட்பாளரான பின்னணி!

+1
1
+1
0
+1
0
+1
3
+1
0
+1
0
+1
1

Leave a Reply

Your email address will not be published.