நாள் 30 : ’பிக்பாஸ் வீட்டில் பரபரப்பு!’ என பிரேக்கிங் நியூஸ் தொனியில் வந்த இன்றைய புரோமோ, சாச்சனாவை பெண்கள் அணியினர் கேள்வி கேட்டு சலசலப்பாக.., மறுபக்கம் முத்துக்குமரன் சாச்சனாவிற்காக பேச வருகிறேன் என கிளம்ப.., ஆண்கள் அவரைத் தடுக்க… என இன்றைய எபிசோடிற்கான புரோமோவே கொஞ்சம் பரபரப்பாகவே காட்டப்பட்டது.
சரி, இன்றைக்கு நமக்கு கண்டெண்ட் நிச்சயம் என்கிற சிறிய ஆர்வத்துடனே இன்றைய எபிசோடைப் பார்க்கத் தொடங்கினோம். ஏனெனில், தங்களின் எல்லைக்குள் வர புதிதாக ரூல்ஸ் போடும் பெண்கள் அணியின் கோரிக்கை, அதைத் தொடர்ந்து நிராகரித்து வரும் ஆண்கள் அணி என சென்ற எபிசோடே கொஞ்சம் சலசலப்பாகவே இருந்தது.
’இப்போ தான் டா இது பார்க்க பிக் பாஸ் வீடு மாதிரி இருக்கு..!’ என யாரேனும் நினைத்திருந்தால் நீயும் என் தோழனே.
முத்துக்குமரனிடம் கேர்ள்ஸ் டீமில் பேசப்பட்ட முக்கியமான பாயிண்ட் ஒன்றை சாச்சனா புரணி பேசி உளறிக்கொட்டும் காட்சியில் தொடங்கியது இன்றைய பிக் பாஸ் எபிசோட். சரியான பாயிண்டை எதிர் டீமில் யாருக்கு எடுத்துக்கொடுக்கக் கூடாதோ, அவருக்கே தாரை வாத்துக் கொடுத்தார் சாச்சனா என்றே சொல்ல வேண்டும்.
இதில் தன்னுடைய அணியைப் பற்றியே புரணி வேறு. ஒரு நிமிடம் அப்படியே ரீஎண்ட்ரி கொடுத்த சாச்சனாவை பிளாஸ்பேக்கில் நினைத்துப் பாருங்களேன். பார்த்தீர்களா..? சரி பிக் பாஸ் வீட்டுக்குள் முரண்கள் புதிதல்ல, தவறுமல்ல. ஆனால், சாச்சனாவின் இத்தகைய தொடர் போக்கு அவரது ஆட்டத்திற்கு நிச்சயம் பெரும் பாதிப்பை தரும் என்பது மட்டும் உறுதி.
இதைத் தொடர்ந்து, பெண்கள் அணியினர் உணவருந்தாது ஸ்ட்ரைக் செய்யலாம் என்கிற முடிவை எடுக்க முன்வருகின்றனர். அதாவது, தாங்கள் கொடுக்கும் சிறிய டாஸ்கை கூட ஆண்கள் அணி ஏற்காது இருக்கும் போக்கு கண்டிக்கத்தக்கது என்பதே அவர்களிடத்து வாதம். ஆனால், இந்த ஸ்ட்ரைகில் வைல்டு கார்ட் எண்ட்ரியான வர்ஷினி மட்டும் உடன்படவில்லை. இந்த ஸ்ட்ரைக்கை தெளிவாக அவர்களிடத்தில் முன் வைக்க வேண்டும் என பெண்கள் அணி திட்டம் போட்டனர். குறிப்பாக, ‘இது டாஸ்க் செய்யாததற்காக அல்ல, எங்களை அவமதித்ததற்காக ஒரு அடையாள உண்ணாவிரத போராட்டத்தை மேற்கொள்கிறோம் என சொன்னால் என்ன?’ என மஞ்சரி வைத்த பாயிண்ட் நல்ல நகர்வு.
இதற்கிடையில், வீட்டுப் பணிக்கான டாஸ்கை பிக் பாஸ் அறிவித்தார். சைனீஸ் உணவகங்களில் வழங்கப்படும் சாப்ஸ்டிக்ஸின் பெரிய சைஸில் இருக்கும் இரு கட்டைகளை வைத்து சில கட்டைகளை எடுத்து மேஜையின் மறுபக்கத்தில் போட வேண்டும்.
இவ்வளவு ஈஸியான டாஸ்கிலும் பெண்கள் அணி தோற்றுப்போக, வீட்டுப் பணி மீண்டும் பெண்களுக்கே வழங்கப்பட்டது. ஒரு வேலை இந்த டாஸ்கில் பெண்கள் அணி வென்றிருந்தால், அந்த அதிகாரத்தை வைத்தாவது ஆண்கள் அணியை கொஞ்சம் ஆட்டிப் படைத்திருக்கலாம்.
நேற்று நடந்துகொண்டதற்காக கேப்டன் சத்யாவிடம் சவுந்தர்யா மன்னிப்பு கேட்டார். அதாவது ஒரு முடிவு எடுப்பதற்குள் அவசரப்பட்டு விதியை மீறியதற்காக. இதைத் தொடர்ந்து பெண்கள் அணியும் தங்களது போராட்டத்தை அறிவித்தனர். ஆண்கள் அணி வாக்குவாதத்தில் ஈடுபட கொஞ்சம் சலசலப்பு ஏற்பட்டது.
‘இது ரூல் புக்ல இருக்கான்னு காட்டுங்க’ என முத்துக்குமரன் சொல்ல, ‘ரூல் புக்ல இருக்குறத மட்டும் தான் நீங்க பண்றீங்களா..?’ என பெண்கள் அணியினர் கேட்க என விவாதம் நீடிக்க, ‘பிக் பாஸே அன்னைக்கு திரும்ப போறதுக்கு டாஸ்க் அவசியம் இல்லன்னு சொல்லிட்டாருல..?’ என சாச்சனா தன்னிடம் சொன்ன பாயிண்டை முத்து முன்வைக்க…, பெண்கள் அணியினர் சாச்சனாவிற்கு எதிராக திரும்பினர்.
உடனே தனது இன்ஃபார்மர் சாச்சனாவிற்காக முத்துக்குமரன் துடிக்க, ‘இது எங்க வீடு சார் நாங்க பார்த்துக்குறோம்’ என ரியா சொன்னது பாயிண்ட். மேலும், ’ நீங்க ரொம்ப நல்லா பண்ணனும்ன்னு நினைச்சி செமயா யோசிக்கிறீங்க. ஆனா, அதை சொதப்பி ரொம்ப தப்பா பண்றீங்க’ என சாச்சனாவிடம் ரியா கூறியதும் சரியான பார்வையே.
இந்த சலசலப்பில் சாச்சனாவை டபுல் ஸ்டேண்டர்ட் என சவுந்தர்யா விமர்சித்தார். அதில் ட்ரிக்கரான சாச்சனா, அவரிடத்தில் வாதம் புரிய, ‘எம்மா என்ன விட்ரு மா’என சவுந்தர்யா சொன்னதையும் பார்க்க முடிந்தது. மொத்தத்தில் இந்த விவகாரத்தில் மட்டும் அல்ல, இந்த கேமிலேயே சாச்சனாவின் செயல்பாடுகள் மக்கள் மத்தியில் அவர் மீதான நம்பகத்தன்மையை போக்கதித்துக்கொண்டே வருகிறது.
வீடே இரண்டு பட்டு இருந்தால் பார்க்கும் நமக்கு கொண்டாட்டம் தான். ஆனால் இந்த வார கேப்டனாக சத்யா ஒரு முடிவெடுக்க வேண்டும் அல்லவா..? இல்லையெனில் வார இறுதியில் விசேவின் வறுவல்களுக்கு ஆள் ஆகவேண்டும் அல்லவா..? ஆக, வழக்கம் போல் பிக் பாஸிடமே முறையிட்டார் சத்யா.
சத்ய சோதனை கேள்விப்பட்டிருக்கோம், இது என்ன சத்யா சோதனை என பிக் பாஸே புலம்பும் அளவிற்கு ஆகி விட்டது இந்த வார கேப்டன் நிலை.
ஆனால், அவரை அழைக்காது முத்துக்குமரன் – ஆனந்தியை கன்ஃபஷன் ரூமிற்கு அழைத்தார் பிக் பாஸ். அப்போது வீட்டின் பிரச்சனையை பிக் பாஸிடம் அவர்கள் முறையிட, ‘நீங்க ஸ்கூல் , காலேஜ் படிக்கல. ஒரு விஷயத்த செஞ்சி பார்த்தா தான் அது ஒத்துவருதான்னு தெரியும். இது ஒரு கேம் ஷோ. ஆட்டத்தை நகர்த்தாம அப்படியே வைச்சிருந்தீங்கன்னா அது நல்லா இருக்காது!’ என பிக் பாஸ் சொல்ல, ஒரு வழியாக பேசி ஒரு முடிவிற்கு வந்தனர் ஹவுஸ்மேட்ஸ்.
இதைத் தொடர்ந்து நடத்தப்பட்ட இந்த வார நாமினேஷன் ஃப்ரீ பாஸிற்கான முதல் டாஸ்கில் ஆண்கள் அணியே வெற்றி பெற்றது. சீசன் தொடங்கி அனைவரும் எதிர்பார்த்த அந்த கடந்து வந்த பாதை டாஸ்க் பிக் பாஸால் அறிவிக்கப்பட்டது.
ஒவ்வொருவரின் கடந்து வந்த கதைகளுக்கும் புதிதாக வந்த வைல்டு கார்டு ஹவுஸ்மேட்ஸே ஜட்ஜஸ். இந்த டாஸ்கில் தீபக் சொன்ன கதையில் சுவாரஸ்யம் இல்லை என பாதியில் நிராகரித்து அவருக்கு ஒரு பாம் கொடுக்கப்பட்டுள்ளது. இதை நாளை வரை அவர் கையிலேயே வைத்திருக்க வேண்டுமாம். இப்போது தான் இந்த சீசன் பிக் பாஸ் போலவே இருக்கிறது என சிறிதளவு எண்ணம் எட்டிப் பார்க்கிறது.
– ஷா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ஏசியிலிருந்து வெளியான கழிவுநீரை தீர்த்தம் எனக் குடித்த பக்தர்கள் : நிர்வாகம் அளித்த ஷாக் பதில்!
ஹெல்த் டிப்ஸ்: இரவு படுக்கைக்குச் செல்லும் முன் டீ, காபி குடிப்பவரா நீங்கள்?
பியூட்டி டிப்ஸ்: கழுத்து கருமைக்கு பார்லர் சிகிச்சை பலன் தராது!
டாப் 10 நியூஸ் : அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்கு எண்ணிக்கை முதல் அதிமுக மா.செ. கூட்டம் வரை!