நாள் 26 : ஒரு சிறிய இடைவேளைக்கு பிறகு மீண்டும் பிக் பாஸ் விமர்சனத்தின் மூலம் உங்களை சந்திப்பதில் அடியேனுக்கு மகிழ்ச்சி. இந்த தீபாவளி அன்று வெகு நாட்களுக்குப் பிறகு டிவியில் சேனல்களை புரட்டிப் பார்க்கும் பழக்கத்தை ரீவிசிட் செய்தேன்.
இப்போதெல்லாம் டிவி சேனல்களைப் பார்ப்பதே தீபாவளி, பொங்கல் போன்ற நாட்களில் மட்டும் தான். எனக்கு விபரம் தெரிஞ்ச நாள் முதல் ஒளிபரப்பாகி வரும் சிறப்பு நிகழ்ச்சிகள் பாட்டர்ன் மாறாது சிறிய மாற்றங்களுடன் அந்தந்த பிரபல சேனல்களில் ஒளிபரப்பாகிய வண்ணம் இருந்தது.
குறிப்பாக அந்த பிரபலமான சேனலில் ஒளிபரப்பான பட்டிமன்றத்தில் பேசப்பட்ட தலைப்பு இந்த தீபாவளியோடு இரண்டு லட்சத்தி இருபத்தி ஏழாவது முறையாக பேசப்பட்டது. அப்படியே கட் செய்து இன்றைய விமர்சனத்திற்காக பிக் பாஸிடம் வந்தால், அதிலும் எந்த வித மாற்றமும் ஏற்படவில்லை என்பது அடியேனின் மாற்றத்தின் மேலான நம்பிக்கையில் சந்தேகங்களை ஏற்படுத்தியது. சில விஷயங்கள் மாற்றங்களுக்கு உட்படாது போலும். நமது பிக் பாஸ் விமர்சனப் புலம்பல்கள் போல.
டிவி சீரியல்களில் புகுந்த வீட்டுக்குள் புதிதாய் திருமணம் ஆகி வந்த கதாநாயகியை மாமியார் அதிகாரம் செய்வதைப் போல் ஹவுஸ்மேட்ஸை கிச்சனில் தீபக் அதிகாரம் செய்யும் காட்சிகளோடு தொடங்கியது இன்றைய எபிசோட். தீபக்கை பொறுத்தவரை அவர் பிக் பாஸ் வீட்டின் சுப்ரமணியம்.
அதாவது, ’சந்தோஷ் சுப்ரமணியம்’ பிரகாஷ் ராஜ். ‘டேய் சிந்தாம சாப்பிடு டா..!’, ‘டேய் ஜெஃப்ரி அதை பண்ணியா..?’ , ‘டேய் ஏன் டா இதைப் பண்ணல…?’ ‘அந்த வெங்காயத்தை எங்கடா வெச்சிங்க..?’’சாப்டதுக்கு அப்புறம் கை கழுவினியா..?’ ‘வாய் கொப்புழிச்சியா’ ‘கொப்புழுச்சிதும் வாய தொடச்சியா..?’ என்கிற ரேஞ்சில் நாளுக்கு நாள் அவரது இன்ஸ்ட்ரக்ஷன் இஞ்செக்ஷன்கள் வீட்டிற்குள் அதிகரித்து வருவதை உணர முடிந்தது.
அரைத்தூக்கத்தில் அனைவரும் ஆட முயற்சித்து தோற்றுப்போனதாய் ஒலித்து நிறைவான அந்த வேக்கப் பாடலுக்குப் பின்னர் மார்னிங் ஆக்டிவிட்டியை அறிவித்தார் பிக் பாஸ். அதில், வீட்டில் யார் வெடிக்கிற பட்டாசு? யார் நமத்துப் போன பட்டாசு? என்பதை ஒவ்வொருவரும் சொல்ல வேண்டும்.
அந்த வகையில், நமத்துப் போன பட்டாசாக சாச்சனா, சத்யா போன்றோரை சொன்னதே நமக்கு சரியாகத் தெரிந்தது. அதைத் தொடர்ந்து அந்த டாஸ்கின் எதிரொலியாக அனைவரும் பேசிக்கொள்ளும் காட்சிகளைப் பார்க்க முடிந்தது.
இந்த வார இறுதியில் நமக்கு தெரிந்து வீட்டில் ஏற்பட்ட மாற்றம் முத்துக்குமரனின் அமைதியே. இப்போது தான் அந்த ஆண்கள் அணியில் கொஞ்ச பேராவது பேசத் தொடங்கியுள்ளனர். நோ நாமினேஷனுக்கான கடைசி டாஸ்க் அறிவிக்கப்பட்டது. இந்த டாஸ்கில் வீட்டுக்குள் ஒரு குழு நுழைந்து நடனமாடும். அந்த நடனத்தை சரியாக கவனித்து பின்னர் கேட்கப்படும் கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும்.
இதில் வந்த குழுவின் ஆட்டத்தை நமக்கு காட்டியதை விட அதற்கு சவுந்தர்யா ஆடும் காட்சிகளைக் காட்டியதே அதிகம். பிக் பாஸ் எடிட்டர் கூட சவுந்த் ராணுவப் படையைச் சேர்ந்தவர் போலும். இந்த டாஸ்கில் ஜெஃப்ரியின் ஓவர் கான்ஃபிடெண்ட் மற்றும் ஏனைய ஆண்கள் அணியின் சொதப்பல்களால் மூன்றாவது முறையாக பெண்கள் அணி வென்று நோ நாமினேஷனுக்கான பாஸைப் பெற்றது.
இந்த வாரம் யாருக்கு நோ நாமினேஷன் பாஸ் தரப்பட வேண்டும் என்பதற்கான டிஸ்கஷனில் எல்லோரும் சொல்லும் படி அந்த 5 பேர் கொண்ட விழா கமிட்டி முடிவு செய்யாது, அனைவரும் கலந்து ஆலோசித்தனர். அதில் சுனிதாவிற்கே அதிக வாக்குகள் கிடைக்க, ‘என்னால இதை ஒத்துக்க முடியாது! என் பச்சி சொல்லுது, இந்த வாரம் பவித்ரா அக்கா போக தான் சான்ஸ் இருக்கு’ என சாச்சனா கொடிதூக்க, இந்த டிஸ்கஷன் மீண்டும் நீண்டது. பின்னர் இறுதி முடிவாக சுனிதாவிற்கே அந்த பாஸ் வழங்கப்பட்டது.
இந்த வாரம் முழுக்க ஆண்கள் அணிக்கு அனுப்பி வைக்கப் பட்ட சவுந்தர்யா ஹாயாக பெண்கள் வீட்டிற்குள் வரவும் போவதுமாக இருந்தது சுனிதாவை கடுப்பாக்கியது. ‘பாரு அவளுக்கு எந்த டாஸ்க்கும் தராம வீட்டுக்குள்ள விடுறாங்க…!’ என விஷாலிடம் புலம்பிக் கொண்டிருந்தார்.
’எம்மா வெளிய இருக்குறவங்களே சவுந்த் என்ன பண்ணாலும், எதுவுமே பண்லனாலும் சப்போர்ட் பண்ணுறாங்க. சவுந்த் ஆர்மி பத்தி தெரியாம பேசிக்கிட்டு இருக்கியேமா..?’ என்றே தோன்றியது. பின்னர், இதை உணர்ந்த பெண்கள் அணியினர் ‘நீ சுனிதாவ போய் கட்டிப் புடி அது தான் டாஸ்க்’ என சொல்லி அந்த கண்கொள்ள காட்சியை நம்மையும் காணவைத்தது ஒரு கியூட் மொமெண்ட்.
இந்த வாரத்தில் சரியாக விளையாடிய நபர்கள், சுவாரஸ்யம் கம்மியாக விளையாடிய நபர்களை தேர்ந்தெடுக்கும் டாஸ்கில் சுவாரஸ்யமான நபர்களாக சத்யா – ஆனந்தி, சுவாரஸ்யம் குறைவான நபர்களாக சாச்சனா – ஜெஃப்ரியை தேர்ந்தெடுத்தது நல்ல முடிவே. ஆனால், கேப்டன்சி டாஸ்க்கை பிசிக்கலாகக் கொடுத்து மீண்டும் சத்யாவை கேப்டனாக்கி விடுவார்களோ? என நாம் எண்ணி முடிக்கும் முன் கேப்டன்சி டாஸ்க் அறிவிக்கப்பட்டது.
ஆம், வழக்கமாக திங்கள் கிழமை அறிவிக்கப்படும் இந்த டாஸ்க், இந்த வாரம் சற்று முன்னரே அறிவிக்கப்பட்டது விந்தை தான். நாம் அஞ்சியது போன்றே ஒரு பிசிக்கல் டாஸ்க்கை அறிவித்தார் பிக் பாஸ். ஆக, மீண்டும் கேப்டனானார் சத்யா.
இதற்கிடையில், ‘இந்த வாரம் என் கேப்டன்சி யாருக்கெல்லாம் பிடிக்கல..? காரணம் என்ன..?’ எனக் கேட்டார் முத்துக்குமரன். அதற்கு அன்ஷிதா, ஜாக்குலின், தீபக் போன்றோர் ‘நீங்க கேப்டனா இருந்தப்போ பவரா இல்ல’ என விமர்சிக்க, ‘நான் இனிமேலும் இப்படி தான் இருப்பேன். ஏன்னா இதான் நான்!’ என முத்துக்குமரன் சொன்னது சத்தியமாக நமக்குப் புரியவில்லை.
இதை கட் செய்து முத்துக்குமரன் ஆர்மி தக் லைஃப் மீம் போடுவதற்காக ஒரு கண்டெண்டா..? என்று தான் எண்ணத் தோன்றியது. இந்த ஸ்டேட்மண்ட்டை சொல்ல எதற்கு அனைவரிடத்திலும் ஒபினியன் கேட்க வேண்டும்? சரி, நம்ம அண்ணாமலை இன்னும் மாறல என நினைத்துக் கொள்வோம்! இப்படியாக நிறைவானது இன்றைய எபிசோட்.
– ஷா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
சை டிஷ்ஷா… மெயின் டிஷ்ஷா? : அப்டேட் குமாரு
அமரன் முதல்நாள் வசூல் சாதனை : கமல் உருக்கம்!
’அமரன்’ – ஐ வாழ்த்திய ஞானவேல் ராஜா!
தெருநாய் வாலில் பட்டாசு… இரு மிருகங்களுக்கு வலை வீச்சு!
திடீரென்று மருத்துவமனையில் சாருஹாசன்… 93 வயது மனிதருக்கு அறுவைசிகிச்சை?