இந்த வார வீக் எண்ட் எபிசோடான இன்று(அக்.27) வீட்டில் பேச வேண்டிய பல பிரச்சனைகளை சேதுபதி எப்படி அவருக்கே உரிய ஸ்டைலில் டீல் செய்யப் போகிறார் என்கிற ஆவல் அதிகமாகவே இருந்தது. காரணம், இந்த வாரம் கோல்டன் காயின் டாஸ்கில் ஆண்கள் அணி பெண்கள் அணியிடம் நடந்துகொண்ட விதம், ஆண்கள் அணியில் தொடர்ந்து வரும் ஆட்டு மந்தை போக்கு போன்ற பல விஷயங்கள் வீக் எண்ட் வறுவல் கண்டெண்ட்களாக இருந்தன. ஆக, வெள்ளிக் கிழமை நிகழ்வுகளுடன் தொடர்ந்தது இன்றைய எபிசோட்.
பெண்கள் அணியில் குரூபிஸம் உள்ளது என ஆண்கள் அணியிடம் சாச்சனா – சவுந்தர்யா புரணி பேசின. மறுபக்கம், ‘இந்த சவுந்தர்யா ஏன் பேசுறத புரிஞ்சிக்கவே மாட்றா..?’ என சுனிதா பெண்கள் அணியில் பேச.., ‘ இவங்களுக்கு நாமினேஷன் பாஸ் தரலன்னதும் தனியா போய் பேச ஆரம்பிச்சிட்டாங்க பாருங்களேன்..!’ என சாச்சனா – சவுந்தர்யா குறித்து தர்ஷிகா சொல்லும் காட்சிகளையும் பார்க்க முடிந்தது.
ஆக, பெண்கள் அணிக்குள் மீண்டும் ஒற்றுமை உடைந்து சலசலப்பு வர வாய்ப்புண்டு. ஆனால், ‘பாய்ஸ் முன்னாடி நம்ம சண்டை போடவே கூடாது’ என பிக் பாஸ் பெண் இனத்துக்கான ஒற்றுமையை பேசிய சாச்சனாவே இதை பேசுவது தான் பெரும் முரண்.
இதைத் தொடர்ந்து இல்லத்தில் இருக்கும் செல்லங்களைக் கண்ட சேதுபதி, அனைவரையும் நலம் விசாரித்தார். பார்வையாளர்கள் மத்தியில் அவரது ஹோஸ்டிங் குறித்தான விமர்சனங்களை கவனிக்கும் வகையில் அனைத்தையும் குறிப்பிட்டு பேசியது இந்த நிகழ்ச்சிக்கு தான் சிறந்த சாய்ஸ் என சேதுபதி நிரூபித்த மற்றொரு தருணம். அது ஒரு வித தனித்துவம் என்றே சொல்லலாம்.
ஒவ்வொரு ஹவுஸ்மேட்ஸ் ஹைலைட்டாக செய்த விஷயங்களை தவறாது பாராட்டிய சேதுபதி ஒரு சிறிய விளம்பர இடைவேளைக்குப் பிறகு தனது வறுவல்களைத் தொடங்கினார்.
காயின் டாஸ்கை ஆண்கள் அணுகிய முறை சரி தானா..? என ஹவுஸ்மேட்ஸிடம் கேட்டார் சேதுபதி. அது நிச்சயம் கண்டிக்கத்தக்கது என நமது விமர்சனத்தில் குறிப்பிட்டிருந்தோம். பார்வையாளர்களை அது பதைபதைக்கச் செய்ததும் உண்மை.
அதற்கு ஆண்கள் அணியில் பதிலளிக்க வழக்கம் போல் முத்துக்குமரனே எழுந்தார் உடனே குறிக்கிட்ட சேதுபதி, ‘எல்லா விஷயத்துக்கும் ஆண்கள் அணியில முத்துக்குமரன் தான் பேசுவாரா..?’ எனக் கேட்டது முதல் சிக்ஸர். ‘நீங்க ஆடுனது சுவாரஸ்யமா இருந்துச்சா..?’ என விசே கேட்ட கேள்விக்கு ஆண்கள் அணியினரிடம் பதில் இல்லை. இதில், பிக் பாஸ் வேறு டாஸ்க் நடக்கும் போதே அதை சுவாரஸ்யமாக ஆட அறிவுறுத்தினாராம். நமக்கு தான் அந்த காட்சிகள் காட்டப் படவில்லை போலும்.
ஆக, பிக் பாஸ் அறிவுறுத்தியும் அதே யுக்தியை அந்த ஆட்டு மந்தை ஆண்கள் அணி மாற்றாமல் தொடர்ந்துள்ளது. பெண்கள் அணியினர், ‘எங்களுக்கு பயமா இருந்துச்சு சார்’ ‘தோற்போம்ன்னு தெரிஞ்சே ஆடுன மாதிரி இருந்துச்சு சார்’ எனச் சொல்ல, ‘அப்படி நீங்க ஜெயிச்சு என்ன பண்ண போறீங்க?’ என ஆண்கள் அணியிடம் விசே கேட்டது சிறப்பு.
மேலும், ‘நீங்க இங்க வந்தது நீங்களா கேம் ஆடத் தான். எப்படி வேணும்னாலும் ஜெயிக்க இல்ல! நான் பெண்கள் அணிக்கு விட்டுக்கொடுங்கன்னு சொல்லல. ஆனா சரியான விளையாட்ட விளையாடுங்க’ என சொன்னது மாஸ்.
முத்துக்குமரன் சொல்லுக்கு ஆமா சாமி போடும் ஆண்கள் அணியை ‘கப்ப பேசாம முத்துக்குமரன் கிட்டயே கொடுத்துடுறீங்களா..?’ என விசே கேட்டதை விட வெளிப்படையாக ஆண்கள் அணியை கேட்கவே முடியாது. இதுக்குப் பிறகாவது ஆண்கள் அணி தனித்து செயல்படுமா எனத் தெரியவில்லை. ஆனால், இனியும் கேட்காவிடில் அடுத்த வார விசே செய்யும் வறுவல் இன்னும் மோசமாக இருக்கும் என்பது மட்டும் நிச்சயம்.
‘எனக்கு வீட்ல வாய்ப்பு தர மாட்றாங்க’ என சவுந்தர்யாவின் குற்றச்சாட்டை விசாரித்தார் சேதுபதி. அதில், குற்றசாட்டு வைத்தே சவுந்தர்யாவே ‘இந்த வாரம் எனக்கு சான்ஸ் தந்தாங்க சார்’ என சொன்னதால் அந்த கேஸே டிஸ்மிஸ் ஆகிவிட்டது. மேலும், ‘இந்த வீட்டுல உன்ன நீ தான் நிரூபிக்கணும். உனக்காக யாரும் சேன்ஸ் தர மாட்டாங்க’ என தர்ஷிகா சொன்னது நூற்றில் ஒரு வார்த்தை.
சவுந்தர்யா புரிந்துகொள்ள வேண்டிய ஒன்று. இல்லையெனில், இந்த வாரம் வெளியேறும் தர்ஷாவைப் போல் அடுத்த வாரம் சவுந்தர்யாவும் வெளியேறலாம் ( அவரது பி.ஆர் சரியாக வேலை பார்க்காவிடின்) ஆம், நாளை வீட்டை விட்டு வெளியேறுவது தர்ஷா தான் என்பது தற்போது உறுதியாகியுள்ளது.
இது ஓரளவுக்கு நியாயமான எவிக்ஷன் என்றே சொல்ல வேண்டும். மேலும், பெண்கள் அணியில் இருந்து நடக்கும் முதல் எவிக்ஷனும் கூட. எபிசோடின் முடிவில் ‘வாழ்க்கை நாடகமா..?’ என பனியன் போட்டு படுத்துப் பாடும் நெப்போலியன் போல் முத்துக்குமரன் சோகத்தில் ஆழ்வதாய் முடிகிறது இன்றைய எபிசோட்.
மீதமுள்ள வறுவல்கள், பிரச்சனைகள், அட்வைஸ்களை சேதுபதியிடத்து கேட்க அடியேனும் ஆவலாய் உள்ளேன். நாளை பார்க்கலாம்.
– ஷா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கல்விக்காக குழந்தைகளை கனடாவுக்கு அனுப்ப வேண்டாம்: என்ன காரணம்?
டாப் 10 செய்திகள்: விஜய் கட்சியின் மாநாடு முதல் தேர்தல் களத்தில் தோனி வரை!
கிச்சன் கீர்த்தனா – சண்டே ஸ்பெஷல்: உங்கள் வீட்டில் ‘ஹேப்பி குக்கிங்’ அமைய இதை ஃபாலோ பண்ணுங்க!
ஓடிபி ஸ்கேன்… இனி வங்கி குறுஞ்செய்தி வர தாமதாமாகும்: டிராய் எடுத்த நடவடிக்கை!
தவெக மாநாடு: குடிநீர், மெடிக்கல் கேம்ப், செல் டவர்… முழு விவரம் இதோ!