இந்த வார நாமினேஷன் ஃப்ரீ பாஸிற்கான மூன்றாவது டாஸ்கில் இருந்து தொடங்கியது நேற்றைய எபிசோட்.
நூலளவில் பந்தை வைத்து பாட்டிலுக்குள் போடும் டாஸ்கில் ஆண்கள் அணி தடுமாற, சிறப்பான ஸ்ட்ராடஜியுடன் வென்றது பெண்கள் அணி. இரண்டாவது முறையாக நோ நாமினேஷன் பாஸை வென்றது பெண்கள் அணி.
ஆக, இந்த நாமினேஷன் ஃப்ரீ பாஸை யாருக்கு தரலாம் என்கிற டிஸ்கஷனில் பெண்கள் அணி ஈடுபட்ட போது, ‘எனக்கு இன்னும் சரியா சான்ஸ் கிடைக்கல.., ஒவ்வொரு தரவையும் என்ன மக்கள் சேவ் பண்ணுவாங்கன்னு நம்ப முடியல. அதனால எனக்கு அந்த பாஸ் வேணும்’ என சவுந்தர்யா கூறிய காரணம் அபத்தமாகவே தெரிந்தது.
இன்னும் எத்தனை நாட்களுக்கு சரியான வாய்ப்புகள் வழங்கப்படவில்லை என சவுந்தர்யா கூறுவார் எனத் தெரியவில்லை. அதற்கு பிறகு எதற்கெடுத்தாலும் எனக்கு என முந்தி அடிக்கும் தர்ஷா இம்முறையும் எனக்கு தான் அந்த பாஸ் வேணும் என நிற்க, பெண்கள் அணி சேர்ந்து ஆலோசித்து, யாரால் அணிக்கு நன்மை என்ற அடிப்படையில் பவித்ராவை தேர்வு செய்து அந்த பாஸைத் தந்தனர்.
இதனால் சவுந்தர்யாவும் தர்ஷாவும் கடுப்பான காட்சிகளைப் பார்க்க முடிந்தது. குறிப்பாக, ’நான் என்ன எல்லார் காலையும் கழுவணுமா..? கழுத்தறுத்துக்கணுமா..? அப்போ தான் டீம் என்ன ஏத்துப்பாங்களா..? வெளிய ஓட்டு வாங்குறது கூட ஈஸி போல’ என ஜெஃப்ரியிடம் சவுந்தர்யா புலம்பினார். ஆமாம், வெளியில் ஓட்டு வாங்க பி.ஆர் சப்போர்ட் இருந்தால் கூட போதும் தானே..?
அதற்கு பிறகு தலையணையை கட்டி அணைத்து அழுதார் சவுந்தர்யா. இந்த கேமைப் பற்றிய புரிதலை அவர் இன்னும் வளர்த்துக்கொள்ளவில்லை என்பது பல நேரங்களில் அப்பட்டமாகத் தெரிகிறது. சரி, இந்த வாரம் அவர் வெளியில் வர எப்படியும் வாய்ப்பில்லை என நமக்கு தகவல் வருவது வேற கதை. வாழ்க ஜனநாயகம்!
இதைத்தொடர்ந்து வீட்டில் போட்டியாளராக இல்லாது அங்கே வசிப்பவராக இருக்கும் அருண் ஆர்டிஸ்ட் அருணாக மாறிய காட்சியைப் பார்க்க முடிந்தது. சாச்சனாவை வரைவதற்கு பதில், ஆர்.ஜே.ஆனந்தியின் பள்ளிப் பருவ முகத்தை மிகத் தத்ரூபமாக அவர் வரைந்ததாக அவரே நினைத்துகொண்டதையும், அதற்கு ஆர்.ஜே.ஆனந்தி தந்த ரியாக்ஷனையும் பார்க்க முடிந்தது.
வீக் எண்ட் எபிசோடை நோக்கி நகர்வதால், இந்த வாரத்தின் சிறந்த போட்டியாளரை இரு அணியில் இருந்தும் தேர்ந்தெடுக்கச் சொன்னார் பிக் பாஸ். வழக்கம் போல் ஆண்கள் அணியில் ஒருமனதாக முத்துக்குமரனையே முன்மொழிந்தனர். ஆண்கள் அணி இன்னும் ஆட்டு மந்தை அணியாகவே உள்ளது என்பது மிக வருத்தமாக உள்ளது.
இந்த வாரம் அந்த அணிக்காக தாடியை எடுத்த வி.ஜே.விஷால், ஸ்போர்டிவாக விளையாடிய ரஞ்சித், என பேச்சுக்கு கூட வேறு ஒருவரின் பெயரை ஒருவர் கூட சொல்லவில்லை என்பது புரியவில்லை. ஆனால், பெண்கள் அணியில் ஒவ்வொரு நபரும் அவரவர் பார்வையில் சிறப்பாக விளையாடிய நபர்களை முன்மொழிந்தனர். காண்டில் சுற்றும் சவுந்தர்யா மட்டும் தர்ஷாவை தேர்வுசெய்தது ஒரு வித வன்ம வெளிப்பாடு என்றே எண்ணத் தோன்றியது. இன்னோரு வகையில் தர்ஷாவிற்கு வீட்டுக்குள் கிடைத்த ஒரே பாராட்டு என்றும் எடுத்துக்கொள்ளலாம்.
ஒரு ஓட்டு வித்யாசத்தில் ஜாக்குலினும், ஆர்.ஜே.ஆனந்தியும் இருந்த போது தன்னுடைய ஓட்டை ஆர்.ஜே.ஆனந்திக்கு ஜாக்குலின் வழங்கியது டீம் ஸ்பிரிட். நல்ல நகர்வு. விசே சொன்னது போல் பெண்கள் அணியினர் தனித்துவத்தில் ஒன்றாக ஆரம்பித்து விட்டனர். இறுதியில், பெண்கள் அணியில் இருந்து ஆர்.ஜே.ஆனந்தி, ஆண்கள் அணியில் இருந்து அன்னபோஸ்டாக முத்துக்குமரன் அடுத்தவார கேப்டன்சி டாஸ்கிற்கு போட்டியிடவுள்ளனர்.
இதற்குப் பிறகு வீட்டுக்குள் சிவகார்த்திகேயன் நுழைந்தார், தீபாவளி ரிலீஸான ‘அமரன்’ திரைப்படத்தின் புரோமோஷன்கள் நடந்தன. அதற்குப் பிறகு மற்றோரு லுங்கி விளம்பரத்திற்கான ஒரு டாஸ்க் வழங்கப்பட்டது. அதில், பவித்ரா வெற்றி பெற்றார். ‘அன்ஷிதா – சுனிதா இடையேயான நட்பு ‘ குறித்த டிஸ்கசன் சாச்சனா – ஆனந்தி இடையே நடந்தது. ‘அன்ஷிதாவுக்கு ஒன்னுனா சுனிதா அக்கா முந்திட்டு வராங்க. நான் பாய்ஸ் டீம்ல வேணும்ன்னு தான் டம்ஸ்ரேட்ஸ் டாஸ்க்குல தோற்றேன் என பல வாக்குமூலங்களை ஆனந்தியிடம் உதிர்த்தார் சாச்சனா’ அது நமக்கு அப்போதே பச்சையாக தெரிந்தது.
மறுபக்கம், பெண்கள் அணியில் சவுந்தர்யா ஓரம்கட்டப்படுகிறார் என ஆண்கள் அணியிடம் ஜெஃப்ரி பேசும் காட்சிகளைப் பார்க்க முடிந்தது. நாளை விசே வரும் வீக் எண்ட் வாரம். பெண்கள் அணியிடம் செலுத்தப்பட்ட வன்முறை, ஆண்கள் அணியில் நீடிக்கும் ஆட்டு மந்தைத் தனம் குறித்த விஷயங்களை அவர் எப்படி வறுக்கப் போகிறார்? இன்னும் சில கோணங்களை சரியாக கவனித்து அது குறித்த கேள்விகளை கேட்பாரா போன்றவற்றை நாளை பார்க்கலாம்.
–ஷா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா: மலாய் சம்சம்!
பிக் பாஸ் 8 ; வைல்டு கார்ட் எண்ட்ரி தரும் பிரபலங்கள் !
14 மாவட்டங்களில் மழை… வானிலை அப்டேட்!
ஆட்சியர் அலுவலகம் முன் தர்ணா: சி.வி.சண்முகம் கைது!
மருமகளை கொடுமைப்படுத்தும் போது தெரியல… இப்போது, விஷம் குடித்த மாமியார்!