நாள் 15 : நேற்று நடந்த பாயாசப் பிரச்சனையின் தாக்கமாக, ‘பாயாசம் எடுத்ததெல்லாம் ஒரு குத்தமா தர்ஷா’ என சவுந்தர்யா தர்ஷாவிடம் கேட்பதாய் தொடங்கியது இன்றைய எபிசோட். மறுபக்கம், இதே பிரச்சனை குறித்து கேர்ள்ஸ் ரூமில் சுனிதா பேசிக்கொண்டிருந்தார். ‘பிரச்சனை அவ பாயாசம் எடுத்தது இல்ல. டீம் பத்தி எப்பையுமே யோசிக்காம இருக்குறது’ என சவுந்தர்யா குறித்து சுனிதா சொன்ன வார்த்தைகள் உண்மையே.
ஆனால், கூடி வாழும் இடத்தில் ஒத்துப் போகாத ஒருவர் தனித்து விடப்படுவது மனிதன் கூடி வாழ்ந்த காலத்தில் இருந்து நடைபெற்று வருவது. ஆனால், இந்த வீட்டில் சவுந்தர்யாவின் பங்கு என்னவாக இருந்தது? என பெண்கள் அணியின் தார்மீகக் கருத்திற்கே வருவோம். அது சரி தான். ஆனால், பல்வேறு டாஸ்க்குகளில் பங்கேற்ற சுனிதா எத்தனை முறை வென்றார்? ஏன், அவருக்கே வரும் டான்ஸை கூட தவற தானே விட்டார்? பிக் பாஸ் என்பது வெறும் கொடுத்த டாஸ்கை செய்யும் விளையாட்டு அல்ல. அது ஒரு வித உளவியல் சார்ந்த விளையாட்டு. அதை இந்த சீசனில் நன்கு உணர்ந்தவர் சிலரே.
இந்த வாரம் யாரை ஆண்கள் அணிக்கு அனுப்பலாம் என பெண்கள் அணி ஆலோசித்தனர். அதில், ‘நான் அந்த அணிக்குச் சென்றால் நம் அணிக்கு கிடைக்கும் நன்மை இது தான். எனது கேம் பிளான் இது தான்’ என தீர்க்கமாக சொல்லி, தனக்கு அளிக்கப்பட்ட வாய்ப்பை சவுந்தர்யா சரியாக பயன்படுத்தி இருக்க வேண்டும்.
சரியான வார்த்தைகள் கோர்த்து காரணம் சொல்ல முடியாதது கூட பரவாயில்லை. ஆனால், ‘அந்த வீட்டிற்கு போனால், நான் உங்களை நாமினேட் செய்ய மாட்டேன்’ என கேமே புரியாமல் பேசியதை எல்லாம் எந்தக் கணக்கில் சேர்ப்பது? இத்தனையும் செய்துவிட்டு ‘எனக்கு வாய்ப்பு தரல…, ஒதுக்குறாங்க’ என கண்ணீர் விடுவது அநியாயமாக வெளியே தெரியக் கூடும். ஒரே வீட்டில் இருக்கும் சொந்த அணியே தன்னை வெறுக்கிறதே என்கிற வெறுமையில் சவுந்தர்யா அழுகிறார் என எடுத்துக்கொண்டாலும், அதற்கான இடம் பிக் பாஸ் அல்ல.
ஆனால், அதே வாய்ப்பை சரியாக பயன்படுத்திய சாச்சனா, தனது டீமிற்காக உளவாளியாக சென்று தகவலையும் சேகரித்து வந்து சொன்ன ஸ்மார்ட்னஸ் குட். ஆனால், இந்த ஒரு விஷயத்தை சாதனையாக எண்ணி சாச்சனா ஓவர் கான்ஃபிடெண்ட் ஆகாமல் இருந்தால் சரி.
கேப்டன்சி டாஸ்க் எனத் தரப்பட்ட கண்ணாமூச்சியின் மற்றொரு பிக் பாஸ் வெர்ஷன் டாஸ்க்கில், மொத்த ஆண்கள் அணியையும் அடித்துப் பறக்க விட்டு இரண்டாம் முறையாக வீட்டின் தலைவியானார் தர்ஷிகா. ஆக, இதன் மூலம் இந்த வீட்டின் மிக பலமான கண்டெஸ்டெண்ட் நான் தான் என மீண்டும் ஒரு முறை நிரூபித்துள்ளார். ஆனால், ஆண்கள் அணிக்காக ரஞ்சித்தால் ஒரு சிலரை மட்டுமே அடிக்க முடிந்தது. ஆனால், அவரின் கேம் ஸ்பிரிட்டை நிச்சயம் பாராட்டியாக வேண்டும்.
’என்னப்பா நம்ம டியூசன் ஸ்ட்ரெண்த் கம்மி ஆகிட்டே போகுது’ என எம்.குமரன் படத்தில் மனோபாலாவிடம் விவேக் சொல்வது போல, தொடர்ந்து இரண்டு நாமினேஷன்களுக்குப் பிறகு ஆண்கள் அணியின் பலம் குறைவானதை உணர்ந்த ஆண்கள் அணியினர், ‘முதல் வாரம் போட்ட ஒப்பந்தம் படி, நீங்கள் ஆண்கள் அணியில் யாரையும் நாமினேட் செய்யக் கூடாது’ என பெண்கள் அணியில் கோரிக்கை விடுக்க, பெண்கள் அணி பிக் பாஸை முறையிட, ‘ரூல் புக்ல இல்லாத பஞ்சாயத்த எல்லாம் என் கிட்ட கொண்டு வராதீங்க’ என சொல்ல.., நாமினேஷன் பிராசஸ் தொடங்கியது.
ஆனால், இம்முறை சொந்த அணியை சேர்ந்தவர்களைக் கூட ஹவுஸ்மேட்ஸ் நாமினேட் செய்யலாம் என பிக் பாஸ் கொடுத்த ட்விஸ்ட் வெறும் ஆட்டத்திற்கான ட்விஸ்ட் அல்ல, அந்த வீட்டில் களைந்தெடுக்கப்பட வேண்டிய செட் பிராபர்டிக்கள் நிறைய உள்ளது என்பதே உண்மை.
டைரக்ட் நாமினேஷன் செய்ய தகுதி பெற்ற தீபக், தர்ஷாவையும், தர்ஷா அருணையும் நாமினேட் செய்தனர். இந்த வீட்டில் தர்ஷா செய்த உருப்படியான காரியம் அருணை நாமினேட் செய்தது தான். தலைவன் ரொம்ப நாளா எஸ்கேப் ஆகிட்டு இருக்காப்ல. ரவீந்தர் சொன்னது போல், நியாயப்படி அவரை பிக் பாஸே நாமினேட் செய்திருக்க வேண்டும். அதைத் தவிர்த்து இந்த வாரம் நாமினேட் ஆனவர்கள், ஜாக்குலின், சவுந்தர்யா, அன்ஷிதா, பவித்ரா, சத்யா, முத்து.
ஷாப்பிங் டாஸ்கில் தொடர்ந்து சொதப்பிய பெண்கள் அணியினர் இந்த வாரமும் பஞ்சத்தில் கிடந்தாக வேண்டும். பஞ்சம் என்றால் நம் கணக்கில் இருக்கும் பஞ்சம் அல்ல. 9 பேருக்கு அவ்வளவு கம்மியான பொருட்களை வைத்து சமைப்பதால் பல சிக்கனங்கள் செய்ய வேண்டியுள்ளது. ஏற்கனவே ஒரு சம்பந்திக்கு அந்த வீட்டில் நடந்த பிரச்சனையை சென்ற வாரம் தான் பார்த்தோம்.
இந்த வாரம் என்ன நடக்குமோ..? ‘எனக்கு மட்டும் யாரும் சேன்ஸ் தர மாட்றாங்க. இந்த சுனிதா என்ன டாஸ்க் ஜெயிச்சா? ஆனா, அவளுக்கு மட்டும் எல்லாம் தராங்க’ என ரஞ்சித்திடம் புலம்பினார் சவுந்தர்யா. மறுபக்கம் , ஆண்கள் அணியில் முதன்முறையாக ஒரு கருத்து வேறுபாடு நடப்பதை பார்க்க முடிந்தது.
‘அவர் சொன்னது தான் செய்யனுமா..? என்னாலலாம் முடியாது. இதை நான் அவர்கிட்டயே சொல்லப் போறேன். சும்மா அதிகாரம் பண்றார்’ என தீபக் குறித்து விஷால் அருணிடம் பேசும் காட்சிகளைப் பார்க்க முடிந்தது. ஆக, ஆண்கள் அணியின் ஒற்றுமை பிரியுமா? பெண்கள் அணியினரின் தனித்தன்மை தளருமா என்பதே இந்த வார ஆட்டமாக இருக்கக் கூடும்.
– ஷா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
டாப் 10 நியூஸ் : ரஷ்யா செல்லும் மோடி முதல் நாமக்கல் செல்லும் ஸ்டாலின் வரை!
கிச்சன் கீர்த்தனா : பூண்டு காரச்சேவு
தீபாவளி கொண்டாட்டம் : 14,016 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!
ரயில் விபத்து : நாச வேலையே காரணம்… வழக்கில் மேலும் ஒரு சட்டப்பிரிவு சேர்ப்பு!
ஹெல்த் டிப்ஸ்: அனைவருக்கும் ஏற்ற தினசரி ஆரோக்கியக் குறிப்புகள்!
பியூட்டி டிப்ஸ்: குளிக்கும்போது தலைமுடி உதிர்கிறதா? தவிர்ப்பது எப்படி?