பிக் பாஸின் எந்த சீசனிலும் இல்லாத ‘இரண்டு வீடு’ கான்செப்டை இந்த சீசனிற்கு கொண்டுவந்ததன் நோக்கம் இந்த எபிசோடில் இருந்து தான் நிறைவேற ஆரம்பித்துள்ளது என்றே சொல்ல வேண்டும்.
ஏனெனில், இந்த வாரம் தான் பிக் பாஸ் கேம் பிக் பாஸ் vs ஸ்மால் பாஸ் என மாறியுள்ளது. ’நம்ம கேம் ஆடுனா என்ன ஆகும்ன்னு காட்டணும், ஏன்டா இவங்கள பகைச்சிக்கிட்டோமேன்னு அவங்க நினைக்கனும்’ என ஏற்கனவே பெரும் வன்மத்துடன் இருக்கும் விஷ்ணுவும், மாயாவும் தனியாக பேசித் திட்டம் போட, இனிதே தொடங்கியது இந்தப் பனிப் போர்.
பிக் பாஸ் வீட்டாரின் சமையல் மெனுவை நிராகரித்ததில் இருந்து தொடங்கிய இந்தப் போரில் இந்த எபிசோடு முடியும் வரை ஸ்மால் பாஸ் வீட்டாரின் கையே ஓங்கியிருந்தது. கடந்த வாரம் கமல்ஹாசன் எபிசோடிலிருந்தே விஷ்ணு தனது ஆட்டத்தை மாற்றிருப்பதை கவனிக்க முடிகிறது. இந்த சீசனின் அசீமாக நினைப்பது கண்முன்னே அப்பட்டமாகத் தெரிகிறது.
இந்த இரு வீட்டிற்கும் இடையில் புதிய கேப்டனான பிரதீப் மாற்றி, மாற்றி பந்தாடப்பட்டார். அவரோ பாவம், ‘தண்ணி கேன் போட வந்தவன் சார் நானு…என்ன ஏன் சார் கேப்டன் ஆக்குனீங்க’ என்கிற ரேஞ்சில் இரண்டு வீட்டுக்கும் மாறி, மாறி ஓடியது மிகவும் பரிதாபமாக இருந்தது. இந்த விவாதத்தில் சட்டென கோபமான நிக்ஷன், ‘அவங்க இவ்வளவு மோசமா நடந்துப்பாங்க நாம ஏன் பார்த்துட்டு இருக்கணும்’ எனக் கூறி பின் விரக்தியில் வெளியேற,
அவரை கூல் சுரேஷ் மற்றும் ஸ்மால் பாஸ் வீட்டார் வம்பிழுத்தனர். இருப்பினும், மிகப் பொறுமையாக அதைக் கையாண்டார் நிக்ஷன். மறுபக்கம் ஸ்மால் பாஸ் வீட்டிலேயே அவர்களோடு சேராமல் வழக்கம் போல் தனக்கென தனி கேம் ஆடிக்கொண்டிருக்கிறார் பிரதீப்.
பிரதீப்பின் அம்மாவைப் பற்றி பேசியதற்கு நிச்சயம் நான் சிரித்திருக்க மாட்டேன், என மீண்டும் புலம்ப ஆரம்பிக்கிறார்கள் மாயா – பூர்ணிமா. அதிலும், ‘அப்படி ஒரு வேலை நான் பேசுனேன்னு குறும்படத்தில் காட்டிட்டா நானே வெளிய போறேன்’ என மீண்டும், மீண்டும் சொல்லும் போது இந்த வாரம் நிச்சயம் குறும்படம் கன்ஃபார்ம் என்பது தெரிகிறது.
இந்த புலம்பல்களுக்கு மத்தியிலும், தனக்கு விஜய் வர்மா மாமன் பையன் என மாயாவும், ‘வீட்லயே நல்ல பையன் விக்ரம் தான் பா’ என பூர்ணிமாவும் வழக்கமான கேர்ல்ஸ் டாக் செய்தனர். விரைவில் ஒரு லவ் எபிசோடும் மலரலாம். அப்படியே வைல்டு கார்டு என்ட்ரீயும் இந்த வாரம் நடந்து விட்டால் வழக்கமாக பிக் பாஸில் நடக்கும் சம்பிரதாயங்கள் அனைத்தும் நடந்து முடிந்துவிடும்.
இந்த வாரத்தின் போரிங் ஆட்டக்காரர்களாக பிக் பாஸால் தேர்ந்தெடுக்கப்பட்டு ஜெயிலில் அடைக்கப்படவுள்ள அக்ஷயா மற்றும் வினுஷா இன்று நடந்த இரண்டு டாஸ்கிலும் பங்கேற்று தோல்வியுற்றனர். ‘உங்களுக்கு இன்னும் இரண்டு நாட்களே கெடு ‘ என பிக் பாஸும் எச்சரித்து விட்டார்.
அதற்குள் அவர்கள் தங்களை நிரூபிக்கவில்லையெனில், ஜெயிலில் அடைக்கப்படுவர். பல புலம்பல்களுக்கு பிறகு ஒரு வழியாக பிரதீப்புடன் சமாதானம் ஆனார் மாயா. இருந்தாலும் நேற்று பிரதீப்பால் தன் உயிருக்கே பாதிப்பு இருக்கு என மாயா சொன்னதெல்லாம் நிச்சயம் ஓவர் பில்டப் தான்.
அடுத்த ’கோல்டன் ஸ்டார்’ டாஸ்க்குக்காக ஒருவர் எவ்வளவு தூரம் சுவாரஸ்யமாக இத்தனை நாள் பிக் பாஸ் வீட்டில் இருந்திருக்கிறார்கள் என அவர்களே முன் வந்து சொல்ல வேண்டும் எனக் கொடுக்க, ஸ்மால் பாஸ் வீட்டில் இருந்து கூல் சுரேஷ் தொடங்கினார்.
சரி, இந்த டாஸ்க்கில் நிச்சயம் சண்டை வரும் என எதிர்பார்த்தால், மீதம் உள்ள போட்டியாளர்கள் நாளை என கூறி வாய்ஸ் ஓவர் எண்டு கார்டு போட்டு விட்டார் பிக் பாஸ். இந்த வாரத்திற்குள் பிக் பாஸில் பல சுவாரஸ்ய திருப்பங்கள் நடைபெறுமென எதிர்பார்க்கப்படுகிறது. சீக்கிரமே ஒரு வைல்டு கார்டு என்ட்ரீயே நடக்கலாம்!
– ஷா
வாட்ஸ் அப்பில் மின்னம்பலம் செய்திகளை படிக்க… இங்கே க்ளிக் செய்யவும்!
நீதிமன்ற தற்காலிக பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்: வைகோ
டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!