ரோடெங்கும் தண்ணீர் மிதக்க…, பல கப்பல் ரேஸ் காட்சிகள் காணக் கிடைக்க…, லட்சங்கள் மதிப்புள்ள கார்களை பத்திரப்படுத்த பாலம் தேடும் கூட்டம் ஒரு புறம்…, முங்கு நீச்சல் போட்டு ஆஃபிஸ் அட்டெண்டென்ஸ் காக்கும் கூட்டம் ஒரு புறம்.. என பரபரப்பான சூழல் நிலவி வந்தாலும், மழையில் ரீல்ஸ் செய்யலாமா?, மிளகாய் பஜ்ஜி போஸ்ட் போடலாமா..? என்ன கப்பல் வாங்கலாம்..? இது என்ன டா புயல்..? என அசல் சென்னை வாசிகளாக யோசித்துக்கொண்டிருக்கும் எம் மக்களே…, ஒரு பேரிடரில் ஒன்றிணைவது, முன்னெச்சரிக்கையாக இருப்பது, மகிழ்ச்சியாக இருப்பது இவை மூன்றும் மிக முக்கியம். எல்லோரும் பத்திரமாக உள்ளீர்கள் என்கிற நம்பிக்கையுடன் இந்த விமர்சனத்தை தொடங்குகிறேன்.
நமக்கு எப்படி இப்போது தண்ணீரால் பிரச்சனையோ.., அதே போல் பிக் பாஸ் வீட்டிற்குள்ளும் தண்ணீரே பிரச்சனை. அதில் தான் இன்றைய எபிசோட் தொடங்கியது. அதாவது, சென்ற வார வீட்டின் விதியின் படி, பெண்கள் அணியினர் தண்ணீர் குடிக்க வேண்டுமென்றால் ரவீந்தரிடம் அனுமதி கேட்க வேண்டும். ஆனால், தற்போது ரவீந்தர் இல்லை. அப்போது யார் இடத்தில் கேட்பது என்பதே பெண்கள் அணியினரின் கேள்வி.
’அதான் வீட்டின் அடுத்த ரவீந்தர் நான் இருக்கேனே…!’ என முத்துக்குமரனின் மைண்டு வாய்ஸ் நமக்கு கேட்க.., ’நீங்க ரஞ்சித் அண்ணன் கிட்ட பெர்மிஷன் வாங்குங்க..?’ ‘ஏன் அவர்கிட்ட பெர்மிஷன் வாங்கி குடிக்க மாட்டீங்களா..? உங்களுக்கு அதுல ஈகோ வா..?’ என திரிக்கர் செய்ய முயன்ற முத்துக்குமரனின் நோக்கத்தை புரிந்த ஜாக்குலின், ‘ ஈகோன்னு பெரிய வார்த்தை எல்லாம் சொல்லாதீங்க ப்ரோ’ எனப் பேசும் காட்சிகளை பார்க்க முடிந்தது.
போன வாரம் வரை ரவீந்தரின் தலைமையில் செயல்பட்ட ஆண்கள் அணி, இந்த வாரம் முத்துக்குமரன் தலைமையில் ஆமா சாமி போடும் கூட்டமாக உருவெடுத்துள்ளதை இந்த எபிசோடில் பார்க்க முடிந்தது. எந்த ஒரு முடிவாக இருந்தாலும் முத்துவே எடுக்கிறார். அதற்கு அனைவரும் ஆமா சாமி போடுகிறார்கள். மறுபக்கம், புதிய கேப்டனான சத்யா எந்த ஒரு முடிவெடுக்கவும், கருத்து சொல்லவும் திராணி இல்லாத கேப்டனாகத் திரிகிறார்.
இந்த கேம் இப்படிப் போவது அந்த வீட்டிற்கு சரியல்ல. குறிப்பாக, ஆண்கள் அணியின் வெற்றி வாய்ப்பை பறி போகச் செய்யும் வேலையை அவர்கள் அணியினரே செய்து வருகின்றனர். பிக் பாஸ் என்பது 18 பேர் வெவ்வேறு யுக்திகளுடன் வீட்டில் போட்டி போட்டு வாழ்வதே தவிற, ஒரே ஆள் 18 பேரை தன் வசம் வைத்து ஆடும் ஆட்டம் அல்ல.
பெண்கள் அணியினர் செய்த மிக சிறப்பான யுக்தி, தர்ஷா குப்தாவை ஆண்கள் அணிக்கு அனுப்பியதே. அவரும் தன் வழக்கமான ’கல்யாண வீட்டில் மாப்பிள்ளை , இழவு வீட்டில் பிணம்’ மோடில் ஆண்கள் அணியை தொந்தரவு செய்து வந்ததைப் பார்க்க முடிந்தது.
இதற்கிடையில் கிச்சனில் போடப்பட்ட இன்சார்ஜ் யாரும் இல்லாத காரணத்தால் உள்ளே நுழைந்தார் ஜாக்குலின். அதற்கு தக்க தண்டனை வழங்க வேண்டும் என தண்டனை வழங்க ஆரம்பித்தனர் முத்து மற்றும் ஆண்கள் அணியினர். இப்படி ஆரம்பித்த இந்த பிரச்சனை முத்துக்குமரன் vs ஜாக்குலின் , முத்துக்குமரன் vs சவுந்தர்யா என்கிற ஈகோ கிளாஸினால் வளர்க்கப்பட்டது என்பதை எவரும் அறியவில்லை. ஆம், முத்துக்குமரனின் பிரச்சனை ரூல்ஸை ஃபாலோ செய்ய வைப்பதோ, ஆட்டத்தை சுவாரஸ்யம் ஆக்குவதோ அல்ல. அவரது பிரச்சனையே அவரது ஈகோ தான்.
தன்னை கலாய்த்த ஜாக்குலின், சவுந்தர்யாவை பழிவாங்க வேண்டும். இதுவே நோக்கம். ஆனால், அதற்காக அதீத செயல்பாடுகளில் ஈடுபட்டுவிட்டாரோ என்கிற எண்ணம் இன்றைக்கு எபிசோட் பார்த்த அனைவருக்கும் தோணியிருக்க வாய்ப்புண்டு. ’இனி எங்க வீட்டுக்குள்ள கால் எடுத்து வைச்சா அவ்வளவு தான்..!’ என அர்ணவ் பேசியதை யாராவது கவனித்தீர்களா..? அவர் எபிசோடின் எத்தனாவது நிமிடத்தில் இடை பேசினார் என்பது நியாபகம் உள்ளதா..? இல்லையா..? கவலை வேண்டாம். அதை நியாபகம் வைத்துக்கொள்ளும் அளவிற்கு முக்கியமான விஷயம் இல்லை. பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும் அர்ணவ் போல்.
இந்த வாரத்திற்கான வீட்டு வேலைக்கான டாஸ்க் அறிவிக்கப்படும் வரை, சமையலுக்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மூன்று பேரே ஒட்டுமொத்த வீட்டு வேலையையும் பார்த்துக் கொள்ள வேண்டும் என முத்துக்குமரன் சொன்னது பெருத்த அநீதி.
ஆனால், அடுத்து அறிவிக்கப்பட்ட வீட்டு வேலை டாஸ்கில் வெற்றி பெற்று அந்த அநீதியையும் நீதியால் வென்ற பெண்கள் அணியின் வெற்றி மிக சிறப்பான முன்னேற்றமாக பார்க்கப்பட்டது. ஒரு பக்கம் முத்துக்குமரனின் தேவையில்லாத அதீத செயல்பாட்டால் பெண்கள் அணி ஒற்றுமை பெற்று வருகிறது. ஆண்கள் அணி தனித்து செயல்படாது வலுவிழந்து வருகிறது. கூடிய விரைவில் ‘நீ தான் டா டிரைவர். உன்ன வைச்சித் தான் டா ஓட்டனும்’ என சக ஆண் அணியினர் முத்துவைப் பார்த்து பேசும் நிலமை வரலாம்.
இதில் நேற்றைய எபிசோடில் கால்குலேட்டரே இல்லாமல் பட்ஜெட் போட்ட நமது முத்துவின் கணக்கை நம்பி அள்ளி, அள்ளி பர்சேஸ் செய்தார் விஷால். அதனின் விளைவாக கொடுக்கப்பட்ட பட்ஜெட்டிற்கு மேல் பர்சேஸ் செய்துள்ள ஆண்கள் அணியின் பர்சேஸ் ரத்து செய்யப்பட்டு, பிக் பாஸ் தரும் அத்தியாவசிய பொருட்கள் மட்டும் கொடுக்கப்பட்டது.
’அட என்ன பிக் பாஸ்..? வெறும் அரிசியும், உப்பும் மட்டும் கொடுத்து கஞ்சி குடிக்க வைச்சிருக்கலாம்ல..? பிக் பாஸ்ல கஞ்சி குடிக்கிற காட்சி எல்லாம் நாங்க எப்போ பார்க்குறது..?’ சரி, அதை விட்டுத் தள்ளுவோம். ஆண்கள் அணியில் ஒருவர் கூட முத்துக்குமரனின் தவறை சுட்டிக்காட்ட வில்லை. ஏன் என்று கூட கேட்கவில்லை.
வீட்டின் ஆண்கள் அணியின் மற்றொரு ரவீந்தரான தீபக் தற்போது பெண்கள் அணிக்கு அனுப்பப்பட்டு உள்ளதால் பல்லு பிடுங்கிய பாம்பானார். இதைத் தானே உணர்ந்து அருணிடம் புலம்பும் காட்சிகளைப் பார்க்க முடிந்தது. தன் இடத்தை முத்துக்குமரன் பிடித்து விட்டான் என்பதை அறிந்திருப்பார் தீபக்.
அருணிடம், ‘டேய் நீங்க யோசிக்கிற பிளான் எல்லாம் அவங்களுக்கே தெரியும் டா..!’ எனக் கூறும் காட்சி குபீர். வீட்டில் சோன் அவுட் மோடில் இருக்கும் முக்கிய பீஸ் அருண். விம் லிக்யூடை வைத்து அடுத்த 15 நிமிடங்களுக்கு எபிசோடை இழுக்கப் போகிறார்கள் என அந்த நிமிடம் வரை நமக்கு தெரியாது. அப்போது தான் ஆரம்பித்தது அந்த பிரச்சனை.
தொடர்ந்து ஆண்கள் அணியின் இடத்திற்குள் வந்து பாத்திரம் கழுவுவதில் நிறைய சலசலப்புகள் ஏற்படுவதால், கொஞ்சம் விம் லிக்யூடை எடுத்து வந்து தங்களிடத்து வைத்துக் கொண்டார் ஜாக்குலின். அது இரண்டு வீட்டிற்கும் பொதுவானது தானே..? அதை எடுப்பதில் என்ன தவறு..? இது கூட கேப்டனுக்கு தெரியாதா..? இதற்கும் ஜாக்குலினுக்கு தண்டனை வழங்கப்பட்டது. ’ எல்லாத்துக்கும் அழுதா எதை வைச்சி விளையாடுறது..?’ ‘அழுகாதீங்க பேசுங்க’ என முத்துவின் பல வார்த்தைகளில் தமிழோடு சேர்ந்து ட்ரிகர்களும் வெடிப்பதைப் பார்க்க முடிந்தது.
இத்தனை பேரிடர்களுக்கு மத்தியிலும் ஒரு பூ பூக்கத் தான் செய்கிறது என்பது போல், இதற்கிடையில் வீட்டிற்குள் ஒரு லவ் கண்டெண்டை உண்டாக்க ஜாக்குலின் முயற்சி செய்வது தெரிய வந்தது. அது பெரிதாக வளருமா? சோபிக்குமா..? எனத் தெரியவில்லை. ஆனால், நிலவி வரும் சிறுபிள்ளை கண்டெண்ட்களுக்கு அது எவ்வளவோ பரவாயில்லை.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
– ஷா
”மேம்பாலத்துல நிறுத்துன காரை எடுக்கலாம்” : சென்னை மக்களுக்கு வெதர்மேன் சொன்ன குட் நியூஸ்!
ஸ்ரீவில்லிபுத்தூர் வணிக வளாகம் கட்டும் பணியைத் தள்ளிவைக்க வேண்டும்… எதற்காக?